நீங்க உங்க சட்டப்படியே டூட்டிய பாருங்க டாக்டர்ஸ் ! தமிழக மருத்துவமனை திக் திக் அனுபவம் !
உறவுக்கார பாட்டி ஒருவர் வேலைக்கு சென்ற இடத்தில் எதிர்பாராத விபத்தில் சிக்கி, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுபது வயதிலும் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் பயணித்து நகருக்கு வேலைக்கு வந்து செல்பவர். தினக்கூலி வேலைக்குக்கூட செல்ல முடியாத நோய்வாய்ப்பட்ட கணவரையும் அவர்தான் சேர்த்து பராமரித்தாக வேண்டும். இளம் வயதிலேயே சிறுநீரகம் செயலிழந்து மரணமடைந்த மகளின் இரு பிள்ளைகளையும் அவர்தான் காப்பாற்றியாக வேண்டும். குடும்ப பாரத்தோடுதான் தூரத்தையும் உடல் அலுப்பையும் பாராமல், தினக்கூலியாய் அன்றாடம் திருச்சி நகருக்கு பயணித்து வந்தாள் அந்த மூதாட்டி.
அதுபோன்றதொரு வாழ்க்கைக்கான ஓட்டத்தில்தான், பணி முடித்து வீடு திரும்பும் வழியில் அந்த எதிர்பாராத விபத்தும் நேர்ந்தது. வழக்கம் போல, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்சி ஜி.எச்.சில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கனுக்கால் அருகே ஏழெட்டு தையல் போடப்பட்டிருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில், அம்மூதாட்டியின் குடும்பத்தார், ”நாங்கள் புத்தூர் கட்டிலேயே சரிசெய்து கொள்கிறோம்” என்பதாக தெரிவித்து விட்டார்கள். அதை அப்படியே, எழுதியும் வாங்கி கோப்பில் வைத்துக் கொண்டார்கள் மருத்துவமனை தரப்பில்.
இதுவரை யாரையும் குறை சொல்வதற்கில்லை. புத்தூர் கட்டு கட்டி சரி செய்து கொள்கிறோம் என்பதாக சொன்ன பிறகும், மருத்துவமனையிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. ஒரு மகள் பள்ளியில் சத்துணவு சமைப்பவர். இன்னொருவர், தனியார் நிறுவனத்தில் தினக்கூலி. தினமும் சுழற்சி முறையில் பணி முடித்து, இரண்டு பேருந்து பிடித்து திருச்சி ஜி.எச்.சுக்கு வந்தாக வேண்டும். ஒருவர் மாற்றி ஒருவர் விடுமுறை எடுத்தாக வேண்டும். இந்த சிக்கல்களையெல்லாம் சொல்லி, அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சையை தொடர்ந்து கொள்கிறோம் என்று மருத்துவர்களிடம் தெரிவித்தும் பயனில்லை. நாட்கள் கடந்தன. எந்த முடிவும் இல்லை.
”அதுதான் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அப்புறம் எதுக்கு இங்கேயே வைத்திருக்கிறார்கள்?” என்ற கேள்வியை உறவினர்கள் தரப்பில் எழுப்புகிறார்கள்.
இந்தமுறை மருத்துவர்களிடம் பேசினால், “நாங்களாக அனுப்பி வைக்க முடியாது. நீங்களாக எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள். நீங்களாக எழுதி கொடுத்து செல்வதால், டிஸ்சார்ஜ் சம்மரி தர முடியாது.” என்றார்கள். விசித்திரமாக இருந்தது, அரசு மருத்துவரின் அந்த பதில்.
“நோயை முழுமையாக குணப்படுத்தி சென்றால்தான் டிஸ்சார்ஜ் சம்மரி தர முடியும். பாதியில் போனால், எப்படி தரமுடியும்?” என்றார்.
விபத்தில் சிக்கி காயமுற்றிருக்கிறார். காலில் ஏற்பட்ட முறிவை, அறுவை சிகிச்சை முறையில்தான் சரி செய்தாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே? மாவுக்கட்டு போடுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று மருத்துவ முறைதானே? அது ஏன் நோயாளியினுடைய, அவருடைய குடும்பத்தாருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடாது? அதையே காரணமாக காட்டி, அந்த நோயாளிக்கான உரிமைகள் மறுக்கப்படுவது நியாயமான அணுகுமுறைதானா? என்ற கேள்விகள் இங்கே இயல்பாக எழுகின்றன.
விபத்தில் சிக்கிதான், எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர் அதற்குரிய இழப்பீட்டை பெற முடியும். ஆனால், மருத்துவர்களின் கறார் அணுகுமுறையால், தற்போது அந்த வாய்ப்பையும் இழந்து நிற்கிறார். மோட்டார் வாகன விபத்து சட்ட விதிகளின்படி அவர் இழப்பீட்டை பெறுவதற்கு, டிஸ்சார்ஜ் சம்மரி மிக முக்கியமான ஒன்று. இங்கே அதுவே, இல்லை என்றாகிவிட்டது. அடுத்து, ஏ.ஆர். என்றழைக்கப்படும் ஆக்சிடென்ட் ரெஜிஸ்டர் மற்றொரு முக்கியமான ஆவணம்.
ஆனால், அதிலேயும் சிக்கல், “ட்ரீட்மெண்டுக்கு ஒத்துழைக்கவில்லை. அவர்கள் விருப்பத்தின் பேரில்தான் சிகிச்சையின் இடையில் வெளியேறினார்கள் என்றுதான் அதிலும் குறிப்பிடுவோம்.” என்று இப்போதே சொல்லிவிட்டார்கள். இனி, அதை வாங்கியும் எந்த புண்ணியமும் இல்லை.
சரி, எதிர்காலத்தில் இழப்பீடு பெறுவதற்கு ஒரு ஆவணம் என்ற வகையிலாவது பயன்படும் என்ற நோக்கில், நாங்கள் ஒரு கோரிக்கை கடிதம் எழுதி தருகிறோம். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அதன்படியாவது டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்றிருக்கிறார்கள். “இல்லை அதெல்லாம் முடியாது. நாங்கள்தான் எழுதுவோம். அதில் நீங்கள் கையெழுத்திட்டால் போதும்” என்றிருக்கிறார்கள்.
”சரி நீங்களே எழுதுங்கள், குறைந்தபட்சம் இதுபோல தொலை தூரத்தில் இருந்து தினமும் வந்து செல்வதில் சிக்கல் இருக்கிறது. அருகாமையில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சையை தொடர்ந்து கொள்கிறோம்.” என்பதாக குறிப்பிட்டாவது எழுதுங்கள் என்றும் இறைஞ்சி கேட்டிருக்கிறார்கள். “நீங்கள் சொல்வது போல் எல்லாம் எழுத முடியாது. எங்களுக்கென்று ஒரு பார்மேட் இருக்கிறது. அதன்படிதான் எழுதுவோம்” என்று மறுத்துவிட்டார் செவிலியர். ஒருகட்டத்தில் வாக்குவாதமாக மாற, பஞ்சாயத்து மருத்துவரிடம் போனது. அதற்கு வாய்ப்பே கொடுக்காமல், அவரே கையோடு எழுதியே கொண்டு வந்துவிட்டார்.
“எலும்பு முறிவுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். கம்பி வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் என்று சொன்னார்கள். அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி நாங்கள் எங்களது விருப்பத்துக்கு அழைத்து செல்கிறோம். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்களே பொறுப்பு. மருத்துவமனையோ, மருத்துவர்களோ எந்த விதத்திலும் பொறுப்பில்லை.” என்பதாக, அவர்களாகவே எழுதிக் கொண்டு வந்ததில் கையெழுத்தை மட்டும் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இங்கே, எந்தவிதத்திலும் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைக்கும் எதிர்காலத்தில் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பது மட்டும்தானே நோக்கமாக இருக்கிறது. இப்போது வரையிலும் சிகிச்சையில் அவர்கள் எந்த குறையும் சொல்லவில்லையே? அறுவை சிகிச்சை வேண்டாம் மாவுக்கட்டு போட்டு குணப்படுத்திக் கொள்கிறோம் என்றது முதல் விசயம். இரண்டாவது, அவர்களால் அவ்வளவு தொலைவில் தினமும் ஜி.எச்.க்கு அலைய முடியாது என்பதால், அருகாமையிலேயே ஒரு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையை தொடர்ந்து கொள்கிறோம் என்றது. இந்த இரண்டு காரணங்களையும் குறிப்பிட்டே, விடுவித்திருக்கலாமே? இதே காரணங்களையே, ஏ.ஆர். பதிவிலும் பதிவிடலாமே? இதுதானே, அவர்கள் மருத்துவர்களிடத்தில் முன்வைத்த கோரிக்கை.
மாறாக, ”சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. மருத்துவர்களின் அறிவுரையை மீறி செல்கிறோம். அவருக்கு எதுவானாலும் நாங்கள்தான் பொறுப்பு.” என்று எழுதி வாங்கி அனுப்பியதாலும், அதுவே ஏ.ஆர். பதிவிலும் இடம்பெறும் என்பதாலும், இனி இழப்பீடும் பெற முடியாது.
அறுபது வயதில் அத்துனை குடும்ப பாரத்தோடும், வருமானம் இழந்து தவிக்கும் அந்த பாட்டியின் நிலை குறித்து அந்த மருத்துவர்கள் ஏன் அக்கறைப்பட வேண்டும்? கால் முடமாகாமல் இருந்திருந்தால், தாயை இழந்த பேரப்பிள்ளைகளுக்கு ஆசையாய் சமைத்து எடுத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு சென்று வந்திருப்பாள். அது அவள் பிரச்சினை. அதற்காக அந்த மருத்துவர் ஏன் துயரப்பட வேண்டும்?
தாயை, பெற்ற பிள்ளைகள்தான் பார்த்தாக வேண்டும் என்பதுதானே நியதி. மாசக்கணக்கானாலும் பிழைப்பை விட்டு பிள்ளைகளை விட்டு உடனிருந்துதான் பார்த்துக் கொண்டாக வேண்டும். “கொஞ்சம் பக்கமா இருந்தால் வசதியாக இருக்கும்” என்று அவர்கள் எதிர்பார்ப்பது சுயநலம். அதற்கு அந்த டாக்டர்களை எந்த விதத்தில் குறை சொல்ல முடியும்?
எழுந்து நடக்கவே ஒரு மாசம் ஆகலாம். அதுவரை, ஒன்னுக்கு ரெண்டுக்கு இருந்த இடத்துலயேதான். அத எடுத்த ஊத்தக்கூட ஒரு ஆள் வேணும். எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவர் வேலைக்கு போக முடியாது. ரெண்டு மாச வருமானம் போச்சு. கட்டு கட்டுற செலவுக்கு கடன் வாங்குனதை, வேலைக்கு போய்தான் அடைச்சாகனும். ஏதோ, கொஞ்சம் லேட்டானாலும் இழப்பீடுனு ஒன்னு கிடைச்சா ஆறுதலா இருந்திருக்கும்தான். அதுக்கும்தான் வழியில்லனு ஆகிப்போச்சே. அதற்கு அந்த அரசு மருத்துவர்கள் எந்த வகையில் பொறுப்பாக முடியும்?
ஆபரேசனுக்கு ஒத்து இருந்தா, எல்லாமே நடந்துருக்கும். டெய்லி ரெண்டு பஸ் மாறி, டெய்லி ஒருத்தர் லீவு போட்டுட்டு கூடவே பார்த்துட்டு இருக்க சம்மதிச்சிருந்தா … டிஸ்சார்ஜ் சம்மரி கிடைச்சிருக்கும். எழுதி வாங்காம … வசை பாடாம … மரியாதையா அனுப்பி வச்சிருப்பாங்க.
பாவம், அந்த டாக்டர் … நர்சுங்க மட்டும் என்ன பன்னுவாங்க … அரசாங்க ஆஸ்பத்திரியில போயி மனிதாபிமானத்த எதிர்பார்க்க முடியுமா? அவங்க கிடக்கெட்டும் கிழ போல்டுங்க … கிராமத்து சனங்க … சொன்னாலும் புரியாது … இது எதப்பத்தியும் கவலைப்படாம உங்க ”சட்டப்படியே டூட்டிய” பாருங்க டாக்டர்ஸ் !
– இளங்கதிர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.