நியோமேக்ஸ் ! EOW போலீசார் அதிரடி அறிவிப்பு !
நியோமேக்ஸ் ! EOW போலீசார் அதிரடி அறிவிப்பு !
தமிழகத்தில் ஆரூத்ரா மோசடிக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் நியோமேக்ஸ் மோசடி வழக்கில் அதிரடி திருப்பமாக, நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக மீண்டும் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த திருமுருகன் என்பவரது மனைவி சங்கீதா என்பவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், நியோமேக்ஸ் மற்றும் அதன் 4 பினாமி நிறுவனங்கள் மற்றும் 7 தனிநபர்களுக்கு எதிராக 05.11.2025 தேதியிட்டு, 1/2025 என்ற எண் கொண்ட முதல் தகவல் அறிக்கையின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
1) NEOMAX PROPERTIES PRIVATE LIMITED
2) WESTERN VELLY PROPERTIES PRIVATE LIMITED
3) SUPREME ENERY FEDERATION
4) SMALL INVESTMENT GROUP MANAGEMENT ASSOCIATION
5) PREMIUM VILLA PLOT
6) BALASUBRAMANIYAN
7) KAMALAKANNAN
8) MUTHUKUMARAN
9) SATHIYAMOORTHI
10) BALAKRISHNAN
11) SAKTHI
12) SHARMA
ஆகிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரும், நீதிமன்றமும் பலமுறை வாய்ப்பளித்த போதெல்லாம், அவர்களின் பேச்சை நம்பி புகாருக்கு சென்றுவிடக்கூடாதென்று நியோமேக்ஸ் நிறுவனம் பல விதங்களில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.
மேலும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரையும், நீதிமன்றத்தையும் நம்பி புகாருக்கு சென்றால் வழக்கை பல பத்து வருடங்களுக்கு இழுத்தடித்துவிடுவார்கள். கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும். இதுவரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசிடம் சிக்கிய 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து அவர்கள் எந்த ஒரு நிவாரணத்தையும் பெற்றுத்தரவில்லை. அந்த நிறுவனங்களைப் போல, நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஓடி ஒளிந்து கொள்ளாமல், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு எப்படியாவது தீர்வை ஏற்படுத்தித் தருவதற்காக ஓடி உழைத்து வருகிறார்கள் என்பதாக கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
அந்தக் கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகத்தான், தீர்வுத்திட்டம் என்ற பெயரில் டை-அப் பிராஜெக்டுகள் என்ற பெயரில் குறிப்பாக சிக்மா (SIGMA – SMALL INVESTMENT GROUP MANAGEMENT ASSOCIATION) முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் ஓராண்டுக்கு முன்னதாகவே எழுந்தது.
இந்த விவகாரம் தற்போது, கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வந்த கதையாக மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பாண்டுகளின் அசல் மதிப்பில் சரிபாதிக்கும் குறைவில்லாத தொகையை மீண்டும் பணமாக செலுத்தும் பட்சத்தில், புதியதாக செலுத்தும் தொகையுடன் சேர்த்து மொத்த மதிப்புக்கு புதிய இடங்கள் பதிவு செய்து தரப்படும் என்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
வருமான வரித்துறையினர் வந்துவிடுவார்கள், அமலாக்கத்துறையினர் கேள்வி எழுப்புவார்கள் முதலுக்கே மோசமாகிவிடும் என்றெல்லாம் அவர்கள் காட்டிய பூச்சாண்டிக்கு பயந்தவர்கள்; குறிப்பாக, கோடிகளில் முதலீடுகளை போட்டவர்கள் பலரும் புகார் கொடுக்க தயங்கி நிறுவனத்தின் தீர்வுத்திட்டத்தின் கீழ் தீர்வை பெற காத்திருந்தனர். இவர்களுக்காகவே, பல்வேறு ஜூம் மீட்டிங்குகள் நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக்கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, நீதிமன்றத்தில் எத்தனை கோடிக்கு புகார் வரப்பெற்றிருக்கிறதோ, அந்த கோடிக்கு நிகரான சொத்துக்களை மட்டும்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரும் நீதிமன்றமும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த சொத்துக்களை வைத்துதான், உங்களுக்கான தீர்வுத்திட்டத்தை செயல்படுத்தப்போகிறோம் என்பதாகவும் நம்பிக்கை அளித்ததாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
இந்த பின்னணியில்தான், இந்த புதிய எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருக்கிறது. திருச்சியை சேர்ந்த முத்துக்குமரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்நிலையில், புகாருக்கு போகாமல் தடுத்து தீர்வுத்திட்டம் என்ற பெயரில் மீண்டும் ஒரு மோசடியை நடத்தியதில் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்.
நவம்பர் -07, 2025 தேதியிட்டு, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு, காவல் துணைக்காணிப்பாளர் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிவிப்பில், “மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் NEOMAX PROPERTIES PRIVATE LIMITED என்ற நிதி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கானது விசாரணையில் இருந்து வரும் நிலையில் புகார் கொடுக்க வந்த முதலீட்டாளர்களை புகார் கொடுக்கவிடாமல் இயக்குநர்கள் மற்றும் ஏஜெண்டுகள் கூட்டு சேர்ந்து தடுத்தும், புதியதாக, SUPREME ENERY FEDERATION என்ற பெயரிலும் SMALL INVESTMENT GROUP MANAGEMENT ASSOCIATION (SIGMA) என்ற பெயரிலும் தொழில் தொடங்கி இருப்பதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் இடத்தை பதிவு செய்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்த ஒரிஜினல் பாண்டுகளை பெற்றுக்கொண்டும், முதலீட்டாளர்களிடமிருந்து மேலும் நேரடியாகவும், PREMIUM VILLA PLOT என்ற வங்கிக் கணக்கிலும் பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் ஏமாற்றி மோசடி செய்தது சம்பந்தமாக பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்களின் உத்தரவுப்படியும், காவல்துறை தலைவர் அவர்களின் அறிவுரையின்படியும், காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணையில் இருந்து வருகிறது. எனவே, மீண்டும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு க.எண்: 4/425, ஏ, சங்கரபாண்டியன் நகர், பார்க்டவுன், தபால்தந்திநகர் விரிவாக்கம், மதுரை – 17 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளிக்குமாறு இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே, முதற்கட்டமாக ஒரு புகார்தாரர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அதற்கு இணையான நிலங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் வழியே தீர்வுக்காக காத்திருக்கும் வேளையில், மீண்டும் புதிய புகாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் காரணமாக, சுமார் 40,000-க்கும் அதிகமான புகார்கள் வரப்பெற்றது. இது, இடைக்கால நிவாரணம் பெறுவதில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்திவிடுமா? என்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் எழுந்த நிலையில், மீண்டும் ஒரு இடியாக இப்படி ஒரு விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும், புதியதாக பதிவான எஃப்.ஐ.ஆருக்கு புகார்களை வாங்குவது என்று, மூன்றாண்டுகளை நெருங்கும் நிலையிலும் இன்னும் புகார் வாங்கிக்கொண்டே இருந்தால், தீர்வு எப்போது கிடைக்கும் என்ற மனச்சோர்வையும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த வழக்கு விவகாரமானது நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் மேற்பார்வையில் இருந்து வரும் நிலையில், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரும் நீதிமன்றத்தின் தரப்பிலும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் முதற்கட்டமாக புகார் அளித்தவர்களுக்கு முதற்கட்டமாக இடைக்கால நிவாரணத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கிறார்கள். இப்புதிய வழக்கு மற்றும் புதிய புகார்களை காரணம் காட்டி, எந்த வகையிலும் நீதிமன்றம் தற்போது முன்னெடுத்துவரும் இடைக்கால நிவாரணம் வழங்கும் பணியில் தடையோ, தொய்வோ ஏற்பட்டுவிடாதபடிக்கு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் ஏக்கமாகவும் இருந்து வருகிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு








Comments are closed, but trackbacks and pingbacks are open.