கோமாளிகளுடன் பயணிப்பதா? சீமானுக்கு ஷாக் கொடுத்த நிர்வாகி !
நாம் தமிழர் கட்சியின் மதுரை கிழக்கு மண்டல செயலாளராக செயல்பட்டு வந்த மதுரையை சேர்ந்த அப்பாஸ், கோமாளிகளுடன் பயணிப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அப்பாஸ் சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ள செய்தி குறிப்பில் , “நான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகிறேன். கடந்த 2017 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைத் தலைவர்; 2019 இல் தெற்கு தொகுதி இணைச் செயலாளர்; 2023 இல் கிழக்கு மண்டல செயலாளர்; 2024 இல் வடக்கு மண்டல செயலாளர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டு வந்தேன். கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி10 700 வாக்குகள் பெற்றேன். நாம் தமிழர் கட்சியில் இயங்கிய ஒன்பது ஆண்டு காலம் உண்மையும் நேர்மையுமாக பலவிதமான இடையூறுகளுக்கு இடையில் சரியாக களமாடி, பல விதமான போராட்டங்கள், பல விதமான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உண்மையும் நேர்மையாக இருந்திருக்கிறேன்.

இதற்கு மேல் நான் இந்த கட்சியில் பயணிப்பதில் எந்த ஒரு நன்மையும் இல்லை என்பதை உறுதியாக தெரிந்து கொண்டு போராளிகளோடு களம் கண்டால் வெற்றி பெறலாம் ஆனால் கோமாளிகளோடு களம் கண்டால் எந்த நன்மையும் பெற முடியாது என்று உறுதியாக தெரிந்து கொண்ட காரணத்தினால், நான் வகித்து வந்த பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
விலகுவதற்கான காரணங்கள் ஒன்று இரண்டு அல்ல; ஏகப்பட்ட காரணங்களை அடுக்க இயலும். அவை அனைத்தையும் கூற இயலாது. தகுதி உள்ளவன் தப்பிபிழைப்பான் அந்த அடிப்படையில் நான் பிழைத்து விட்டேன். நான் பணியாற்றிய அந்த காலகட்டத்தில் எனக்கு உண்மையும் நேர்மையும் ஆக ஒத்துழைப்பு வழங்கிய நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகள் அண்ணன்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை நான் நன்றியை சொல்கிறேன். விரைவில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராம்நாடு, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களை சேர்ந்த முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரமுகர்கள் தொண்டர்கள் ஆகியோரை மதுரையில் டிசம்பர் முதல் வாரத்தில் ஒன்றாக இணைத்து நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்பாருங்கள்.” என்று பகீர் கிளப்புகிறார் மதுரை அப்பாஸ்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.