பி.வி.ஆர்.கும்பலின் சல்லித்தனமும்… சுரேஷ் காமாட்சியின் கொந்தளிப்பும்!
முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. விடுதலைப்புலிகளின் மருத்துவர்களுக்கு, மருத்துவ அணிக்குப் பெயர் தான் ‘சல்லியர்கள்’. இந்தப் படம் முழுவதுமாக முடிந்து பத்து மாதங்களுக்கு முன்பு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் முன்னோட்ட வெளியீடு நடந்தது. அதற்கடுத்து பல வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, உலகத் தமிழர்களிடையே அமோக ஆதரவைப் பெற்றது. இத்திரைப்பட விழாக்களில் சேது கருணாஸும் படத்தின் டைரக்டர் கிட்டுவும் கலந்து கொண்டனர்.
படத்தில் தமிழ்ப் பிரதேசம், சிங்கப் பிரதேசம், ஈழத்தமிழ் மண்ணின் ஊர்ப்பெயர்களில் சின்ன மாற்றம், புலிகள் இயக்கத் தலைவர் மாவீரன் பிரபாகரனின் இயக்கப் பெயரான கரிகாலன் என மிகவும் சாமர்த்தியமாக திரையில் காண்பித்து இந்திய அரசாங்கத்தின் சென்சார் போர்டிலும் சர்டிபிகேட் வாங்கிவிட்டார் கருணாஸ்.
எல்லாம் சுமூகமாக முடிந்ததும் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வாங்கினார் ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்’ சுரேஷ் காமாட்சி. 2025 அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்வதாக விளம்பரப்படுத்தினார் சுரேஷ் காமாட்சி. அப்போது வட்சகிழக்குப் பருவமழை தீவிரமானதால் அக்டோபர் கடைசியில் ரிலீஸ் என அறிவித்தார். ஏன்னா தீபாவளிக்கு சில பெரிய படங்கள் ரிலீசானதால் தான் இந்த முடிவை எடுத்தார் சுரேஷ் காமாட்சி. அதன் பின் நவம்பர் மாதம் மூன்று தடவை ரிலீஸ் தேதி அறிவித்தும் தள்ளிப் போனது ‘சல்லியர்கள்.
ஒரு வழியாக இந்த 2026 ஜனவரி 02—ஆம் தேதி ரிலீஸ் என மீண்டும் விளம்பரங்கள் வெளியானது. இதனால் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி 2025 டிசம்பர் 31—ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் திரையிடப்பட்டது.
புலிகளின் வீரம் மட்டுமல்ல, அவர்களின் அறம், ஈரம் இதையெல்லாம் உலகிற்கு எடுத்துச் சொல்லி மாபெரும் விடுதலைப் போராளிகளை வானுயர கெளரவப்படுத்தியிருந்தர் இயக்குனர் கிட்டு. விடுதலைப்புலிகளின் பெண் மருத்துவர் நந்தினியாக சத்யா தேவி என்பவர் புலிகள் இயக்கத்தின் நிஜப் போராளியாகவே நம் கண்களுக்கு காட்சி தந்து மனசுக்குள் ஊடுருவினார். பெண் புலிகளின் சிகை அலங்காரம், மிடுக்கான பார்வை, எதிரி ஆனாலும் அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்த தலைவர் பிரபாகரனின் கட்டளையை சிரமேற்கொண்டு செயல்படுத்தியை புலிப் போராளியாகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். இவரது தந்தையாக சேது கருணாஸ், நந்தினியுடன் பணியாற்றும் மருத்துவர் செம்பியனாக மகேந்திரன் கந்தையா, இன்னொரு புலி வீரன், அவனது காதலியாக பிரியாலயா, சிங்கள ராணுவக் கொடூரனாக திருமுருகன் என பெயர் தெரிந்த கதாபாத்திரங்களை மட்டுமல்ல, புலிப்படை வீரர்களைக் கூட கனகச்சிதமாக வடிவமைத்து களத்தில் சிங்களக் காடையர்களான ராணுவத்தினரை அவர்கள் தாக்கும் காட்சிகளுக்கெல்லாம் தனி சண்டைப் பயிற்சியாளரை நியமித்து நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் கிட்டு.

படத்தின் மிக முக்கியமான சங்கதி என்னன்னா படம் நம்ம தமிழர்களிடமும் எளிதில் சேர வேண்டும் என்பதற்காக ஈழத்தமிழர்களின் பேச்சு மொழியைத் தவிர்த்து நம்ம தமிழை வசனமாக வைத்துள்ளார் கிட்டு. மொத்தப் படப்பிடிப்பையும் சிவகங்கை, கல்லல், நாட்டரசன்கோட்டை பகுதிகளில் தான் நடத்தியிருக்கிறார்.
உலக்கதமிழர்களிடமெல்லாம் இந்த வீர வரலாறும் ஈர வரலாறும் சென்று சேரும், சேர வேண்டும் என்ற ஆசையுடன் படம் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்தோம்.
அப்போது மீடியாக்களிடம் சுரேஷ் காமாட்சி, ‘சல்லியர்கள்’ இயக்குனர் கிட்டு, இயக்குனர் வ.கெளதமன் ஆகியோர் பேசினார்கள். அப்போது தான் நமக்குத் தெரிந்தது இந்த ‘சல்லியர்கள்’ சினிமாவை தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணவிடாமல், வடநாட்டிலிருந்து இங்கு வந்து பிவிஆர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல நூறு தியேட்டர்களை கைவசம் வைத்திருக்கும் சல்லிக்கும்பலின் அட்டகாசமும் எதையுமே கண்டு கொள்ளாமல் தண்டத்துக்கு மாரடிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கையாலாகத்தனமும் அம்பலத்திற்கு வந்தது.
இதோ சுரேஷ் காமாட்சியின் கொந்தளிப்பும் கோபமும்…
“மூணு மாசம் லோல்பட்டு இந்த 02-ஆம் தேதி எந்த பெரிய படமும் வரலைன்னு தெரிஞ்சு ரிலீஸ் பண்ண முடிவு செஞ்சேன். ஆனா இந்த சல்லியர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 27 தியேட்டர்கள் தான் கிடைச்சது. அதுவும் இரவு 11 மணிக் காட்சி மட்டும் தான். பிவிஆர் தியேட்டர்காரன் பெரிய படங்களைத் தான் ரிலீஸ் பண்ணுவோம்னு சொல்லி எங்களுக்கு தியேட்டர் தரமாட்டேன்னு சொல்லிட்டான். நானும் எவ்வளவோ பேசிப்பார்த்தும் முடியாதுன்னுட்டான். இந்த சிக்கலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சொல்லியும் ஒரு எழவும் நடக்கல. வடநாட்டுல இருந்து பிழைக்க வந்து இங்கே தமிழர்களின் காசை கல்லாகட்டும் அயோக்கியக் கும்பல், தமிழனின் வீரத்தையும் ஈரத்தையும் சொல்லும் தமிழனின் படத்தை ரிலீஸ் பண்ண முடியாதுங்குறான். டேய்ய்ய்…அயோக்கியப் பயலுகளா நீங்கெல்லாம் நாசமாத்தாண்டா போவீக. பெரிய படங்களை மட்டும் தான் ரிலீஸ் பண்ணுவோம்னா தியேட்டர் வாசல்ல போர்டு எழுதிப் போடுடா. வருசத்துக்கு 12 பெரிய படங்கள் தான் வருது.

மாசத்துக்கு ஒண்ணு ரிலீஸ் பண்ணிட்டு மத்த நாள்ல தியேட்டர்களை இழுத்து மூடிட்டு சோத்துக்குப் பதிலா மண்ணைத் திம்பியா? இந்த பிவிஆர் கும்பல் இந்த சேட்டைய கர்நாடகவுல பண்ண முடியுமா? அப்படிப் பண்ணா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும். டவுசரைக் கழட்டி ஓடவிட்ருவாய்ங்க.
கோடிக்கணக்கில் வாரியிறைத்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கும் மற்ற பதவிகளுக்கும் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடக்குது. இந்த சங்கம் எப்படி உருப்படும்? பாவப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு என்ன உதவி செஞ்சு கிழிக்கும்? முதுகெலும்பு இல்லாத சங்கம் இருந்தா என்ன? நாசமாப் போனா என்ன?
அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்த வரலாற்றுப் பதிவான ‘சல்லியர்கள்’ படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் பண்ணப் போறேன். பிவிஆர் கும்பலின் சல்லித்தனம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சல்லுவாரித்தனம் எல்லாத்தையும் பத்திரிகையாளர்கள் தான் அம்பலப்படுத்த வேண்டும்னு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ சுரேஷ் காமாட்சி.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.