உம்மா கொடுத்து அல்வா கொடுத்த தயாரிப்பாளர் !
‘பெப்பர்மின்ட், பேனரில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ள படம் ‘காதல் கதை சொல்லவா’. மலையாள இயக்குனர் சனில் தமிழிலும் மலையாளத்திலும் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், நகுல், ரித்திகா சென், ஆத்மிகா ஆகியோருடன் மிக முக்கியமான கேரக்டரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ளார். ரமேஷ் திலக், கூல் சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ; சாஜன் களத்தில், இசை : ஷரத், எடிடிங் : ஜீவன், வசனம்: கண்மணி ராஜாமுகமது, பி.ஆர்.ஓ.: புவன் செல்வராஜ்.
வருகிற பிப்ரவரி 06—ஆம் தேதி படம் ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் இருநாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் படக்குழுவினரை வாழ்த்துவதற்காக டைரக்டர்கள் மனோஜ்குமார், கே.எஸ்.அதியமான், ராஜ்கபூர், மியூசிக் டைரக்டர் ரமேஷ் வினாயகம் ஆகியோர் வந்திருந்தனர்.
வழக்கம் போல சிறப்பு விருந்தினர்கள் படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள். எல்லா மேடைகளிலும் கிறுக்குச் சேட்டைகள் செய்யும் கூல் சுரேஷ், இந்த மேடையிலும் வழக்கம் போல தற்குறிகளின் விசிலை ஊதி கிறுக்குச் சேட்டைகள் பண்ணி எரிச்சலைக் கிளப்பினார்.
இயக்குனர் சனில்,
“மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான காதல் கதை இது. விஜய்சேதுபதி இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிச்சிருக்கார். மலையாளத்தின் தாய் தமிழ் மொழி தான். அதனால் தான் இந்தக் கதையை தமிழிலும் மலையாளத்திலும் எடுத்துள்ளேன். மலையாளிகளின் கனவு தேசம் என்றால் அது தமிழ்நாடு தான். நான் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த போது இதே பிரசாத் லேப்பிற்கு வந்து பிலிம் ரோல் எடுத்துப் போயிருக்கேன். இப்போது எனது பட விழாவுக்கு இங்கே வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. எனக்கு காட்ஃபாதர் டைரக்டர் அதியமான் தான்” என்றார்.
இசையமைப்பாளர் ஷரத்,
“தமிழிலில் ‘ஜூன்.06’, ‘180’ என இரு படங்களுக்கு இசையமைத்திருக்கேன். இப்ப மலையாளம் தமிழ் இரண்டு மொழிகளிலும் ரிலீசாகும் இப்படத்தின் மூலம் வந்திருக்கேன். இந்தப் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஏன்னா அவ்வளவு சிக்கல்கள். அத்தனையும் கடந்து நல்லவர்களின் ஆதரவுடன் இப்படம் ரிலீசாகப் போகுது. தமிழ் சினிமாவின் இசை மேதைகளான எம்.எஸ்.வி., இசைஞானி இளையராஜா ஆகியோரின் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். இன்னும் பெருமையான விசயம் என்னன்னா இசைஞானியின் இசையில் தாரதப்பட்டை படத்தில் ஒரு பாடலைப் பாடி, அவரின் கையால் மோதிரம் பரிசு பெற்றவன் நான். இதைவிட ஆஸ்கர் விருது ஒன்றும் பெரிதல்ல.
சில வருடங்களுக்கு முன்பு தமிழ்ப்படம் ஒன்றுக்கு இசையமைத்தேன். ஒரு பாடலை எழுதி மனோ, சித்ரா ஆகியோர் பாடியும் முடித்தார்கள். அந்தப் பாடல் ரெக்கார்டிங்கின் போது அப்படத்தின் தயாரிப்பாளர் [ பேர் வேண்டாம்] பளபளன்னு ஜிப்பா போட்டு ஜம்முன்னு இருப்பார். நான் எந்த இசைக்கருவியைத் தொட்டு வாசித்தாலும் ஓடிவந்து உம்மா கொடுப்பார். ரெக்கார்டிங் முடிவதற்குள் பல உம்மாக்கள் கொடுத்தார்.
மறுநாள் சம்பளம் வாங்க ஆபீஸ் போனா ஆளையே காணோம். அப்ப ஓடிப்போனவர் தான். இப்ப வரை அவரைத் தேடிக்கிட்டிருக்கேன். நான் சாகுறதுக்குள்ள எப்படியும் அவரைப் பார்க்கணும். எனக்கு ஆஸ்கர் அவார்டோ, தேசிய விருதோ கூட வேணாம். ரஜினி சார் படத்தில் மியூசிக் பண்ணும் ஆசைகூட இல்லை. ஆனால் ஓடிப்போன அந்தத் தயாரிப்பாளரை எப்படியாவது பார்த்துட்டா நிம்மதியா போய்ச் சேர்ந்திருவேன்” என ஜாலியாகப் பேசி விழா மேடையில் இருந்தவர்களையும் அரங்கில் இருந்தவர்களையும் கலகலப்பாக்கினார்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.