கூகுள் பே செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாமா ?
திருச்சிராப்பள்ளி இரயில்வே டிவிஷன், தென்னக ரயில்வேயில் குறிப்பிடத்தகுந்த டிவிஷன்களுள் ஒன்று. இந்த டிவிஷன் கட்டுப்பாட்டில் தினமும் திருச்சியில் இருந்து சுமார் 100-க்கு மேற்பட்ட பயணிகள் ரயில்களும் விரைவு ரயில்களும் வந்து செல்கின்றன. மேலும், இதன் கட்டுப்பாட்டில் 50-க்கு மேற்பட்ட ரயில் நிலையங்கள் ஹால்ட் ஏஜெண்ட் என்று சொல்லும் முறையில் தனியாரிடம் டிக்கட் வழங்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

திருச்சிராப்பள்ளி இரயில்வே டிவிஷனுக்குட்பட்ட பெரும்பாலான ரயில் நிலையங்களில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள், அரசு அலுவலங்களில் பணியாற்றுபவர்கள் என சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்களே அதிகம் உள்ளனர். இந்நிலையில், இந்த டிவிஷனுக்குட்பட்ட பெரும்பாலான ரயில் நிலையங்களில், குறிப்பாக பூதலூர், திருவெறும்பூர், தஞ்சாவூர் போன்ற ரயில் நிலையங்களில் சீசன் டிக்கட் எடுப்பவர்களிடம் ரொக்கமாக பணத்தை பெறாமல், டிஜிட்டல் பரிவர்த்தனையின் வழியே பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.
கூலி வேலைக்கு செல்பவர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்குமா? அப்படியே இருந்தாலும் கூகுள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை கொண்டிருக்கிறார்களா? என்பதை பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகிறார்கள். டிஜிட்டல் முறையை பயன்படுத்த பரிந்துரைக்கலாம், அதிகபட்சம் ஊக்குவிக்கலாம். ஆனால், எந்த முறையில் பணத்தை செலுத்துவது என்பதை சம்பந்தபட்ட பயணிதான் சூழலை பொறுத்து முடிவெடுக்க முடியும். ரயில் பயணிகளை கட்டாயப்படுத்தும் இத்தகைய நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் உரிய உத்தரவை பிறப்பிப்பாரா?
— தஞ்சை க.நடராசன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.