சட்டவிரோத மணல் கடத்தல் : நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த நீதிபதி !
சட்டவிரோதமாக மணல் கடத்தல் வழக்கில் சிக்கிய லாரியை மீட்பதற்கு, நீதிமன்றத்தில் போலி ஆவணத்தை சமர்ப்பித்த லாரி உரிமையாளருக்கு நீதிமன்றம் அதிரடியாக அபராதம் விதித்திருக்கிறது.
திருச்சி, சுண்ணாம்புக்காரன் பட்டியை சேர்ந்த குமார் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில், அரசின் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ராம்ஜிநகர் போலீசார் மணலும் லாரியுமாக மடக்கிப்பிடித்து கடந்த ஜனவரி 10 அன்று வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கு திருச்சி மாவட்ட நீதிமன்றம் எண் 3 இல் நடைபெற்று வந்த நிலையில், உரிய அனுமதியுடன்தான் மணல் அள்ளப்பட்டதாகவும், போலீசார்தான் பொய்யாக வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் லாரி உரிமையாளர் குமார் தரப்பில் ஆவணத்தை தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி முகமது சுஹைல், சம்பந்தபட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு திருச்சி மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் அந்த அனுமதி சீட்டு போலி என்று நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, மனுவை தள்ளுபடி செய்ததோடு உரிமையாளருக்கு 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தொகையை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்துமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளியதோடு மட்டுமின்றி, நீதிமன்றத்தையும் ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து வகையாய் சிக்கிக்கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.