மூளைச்சாவு – ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் !
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி மூளை சாவு அடைந்தார்.
இதை உறுதிசெய்த மருத்துவக் குழுவினர் குடும்பத்தாரின் அனுமதி பெற்று சிறுவனின் கல்லீரல், கணையம், சிறுகுடல், இரண்டு சிறு நீரகங்கள், இரண்டு கண்கள், தோல் ஆகியவற்றை தானமாக பெற்றனர்.

ஒரு சிறுநீரகம், கணையம், சிறுகுடல் ஆகியவை சென்னை தனியார் மருத்துவ மனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், தோல் ஆகியவை தனியார் மதுரை மருத்துவ மனைக்கும். கண்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 14 வயது சிறுவனின் உடலுக்கு டீன் குமரவேல், மருத்துவ துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்சி அரசு மருத்துவ மனையில் நடந்த 28வது உடல் உறுப்புதானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, கூம்பூர் வட்டம், பாம்புலுபட்டி பகுதியில் வசித்து வந்த ச.இந்திரகுமார் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய அவரது தந்தையார் பா.சக்திவேல், தாயார் சந்திரா மற்றும் சகோதரிகள் திருவாளர்கள் ஜீவபாரதி, காயத்ரி தேவி, திவ்யதர்ஷினி ஆகியோரது ஈடுகட்ட முடியா ஈகைச் செயலைப் பாராட்டினர்.
உடல் உறுப்பு தானம் உடல் தானம் செய்த குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கத்தினர் பாராட்டு சான்றிதழ், திருக்குறள், எம். எஸ். உதயமூர்த்தி புத்தகங்கள், பயனாடைகள் வழங்கினர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.