நடிகர் விஜய் போட்டியிட குறிவைக்கும் தொகுதி இதுதானா ?
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா (எ) ஆர்.பத்மநாபன் விருப்பமனு தாக்கல் செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
”தமிழ்நாட்டில் மத்திய பகுதியாக திருச்சி உள்ளது. வளர்ந்து வரும் மெட்ரோ நகரம். திருச்சி கிழக்கு தொகுதியானது மாவட்டத்தில் மத்திய தொகுதியாகவும் உள்ளது. கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிப்பது மற்றும் மத நல்லிணக்க தொகுதியாக விளங்குகிறது. மலைக்கோட்டை உச்சி பிள்ளையாள் கோயில், நத்தர்ஷா பள்ளிவாசல், ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆகிய மூன்று மத ஒற்றுமையான புனித தொகுதியாகும். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். களம் நமக்கு சாதகமாக உள்ளது. நமக்கு சரியான தொகுதி. தங்கள் 33 வருட மக்கள் சேவை எங்கள் தொகுதி மக்கள் நன்கு அறிவர். மற்றும் இளம் வாக்காளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும்.” என்பதாக, இந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதற்கான காரணங்களாக அந்த மனுவில் குறிப்பிடுகிறார், ஆர்.கே.ராஜா.
மேலும், “09.12.2025 எஸ்.ஐ.ஆர். வெளியீடு படி’ 2,55,051 வாக்காளர்கள்” இருப்பதாகவும்; இந்த தொகுதியில், “தலைவர் நின்றால் வெற்றி வாகை சூட நாங்கள் முழுமனதோடு பாடுபடுவோம். தொகுதி முழுவதும் வீட்டிற்கு இரண்டு ஓட்டிற்கு மேல் உறுதி செய்வேன்” என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
இதுமட்டுமின்றி, தேர்தல் வாக்குறுதிகளாக, “ பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தொகுதி முழுவதும் வீரமங்களை வேலுநாச்சியார் பெயரில் தற்காப்பு கலைக்கூடம் அமைக்கப்படும். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உய்யகொண்டான் பழைய கால்வாய் சீரமைக்கப்படும். அரியமங்கல் குப்பை கிடங்கு மாநகர் வெளி பகுதியில் அமைக்கப்படும். திருச்சி முதல் தஞ்சாவூர் பைபாசில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கப்படும். மாநகரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட பொதுமக்கள் இடையூறு இல்லா வகையில் இடம் தேர்ந்தெடுக்கப்படும்” என்பது உள்ளிட்டவைகளை பட்டியிலிடுகிறார், ஆர்.கே.ராஜா.
நிறைவாக, திருச்சி கிழக்கு தொகுதியில் தலைவர் விஜய் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விருப்பமனுவுடன் ரூபாய் பத்தாயிரத்துக்கான வங்கி வரைவோலையும் எடுத்து இணைத்து அனுப்பியிருக்கிறார்.
தற்போது, இந்த தொகுதியில், திமுகவின் சார்பில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் முனைவர் இனிகோ இருதயராஜ், சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். உள்ளூர் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் லோக்கல் பாலிடிக்ஸூக்கு ஈடு கொடுக்க முடியாமல், இந்த தொகுதியே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தமது பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளில் பக்கபலமாக இருந்துவரும் எம்.எம்.எம். முருகானந்தத்திற்கு எப்படியாவது வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமென்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மெனக்கெட்டு வருவதாக சொல்லப்படும் நிலையில் இப்படி ஒரு டிவிஸ்ட்டை வைத்திருக்கிறார், ஆர்.கே.ராஜா.
— அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.