இருபது வருட போராட்டம் ! முடிவுக்கு கொண்டுவந்த எம்.பி. அருண் !
இருபது வருடமாக தீர்க்கப்படாமல் இருந்த கோரிக்கையை நிறைவேற்றி தொகுதி மக்களிடையே சபாஷ் வாங்கியிருக்கிறார், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி. கே.என்.அருண்நேரு.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ள கிராமங்கள் எதுமலை மற்றும் பெரகம்பி. இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் தார்ச்சாலையில் சுமார் 2.4 கி.மீ தூரம் கொண்ட சாலைகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தை பயன்படுத்துவதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டதையடுத்து, தார்ச்சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல ஏறத்தாழ 20 வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி சலித்து போய்விட்டார்கள் இவ்விரு கிராம மக்களும், சிதறிக்கிடக்கும் ஜல்லியோடு மல்லுக்கட்டி குண்டும் குழியுமாகிப்போன மண் ரோட்டில்தான் இதுவரை பயணித்து வருகிறார்கள்.
இந்த வழியை விட்டால், தேனூர் வழியாக எதுமலையை அடைய வேண்டும். இது அப்படியே இருமடங்கு தூரம் சுற்ற வேண்டும். அப்படித்தான், ஊரைச் சுற்றி வந்தார்கள். இதற்குத்தான் இப்போது விடிவு பிறந்திருக்கிறது.
தேர்தல் புறக்கணிப்பு வரையில் பல்வேறு அஸ்திரங்களை இவ்விரு கிராம மக்களும் எடுத்துப் பார்த்துவிட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளே மூச்சு முட்டும் அளவுக்கு வனத்துறை கடும் நெருக்கடியை கொடுத்தது. மாநில அளவிலான முன்னெடுப்புகளை மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கதிரவன் தொடர்ந்து முயற்சி வந்தார். ஒன்றிய அரசின் சாலைப்போக்குவரத்து துறை மற்றும் வனத்துறை அமைச்சர்கள் அதிகாரிகளை அணுகி, கச்சிதமாக காய் நகர்த்தி காரியத்தை சாதித்துவிட்டார், பெரம்பலூர் தொகுதி எம்.பி. கே.என்.அருண்நேரு என்கிறார்கள்.
இதன்படி, 2.4 கி.மீ தொலைவு கொண்ட வனத்துறை வசமிருந்த தார்ச்சாலையை 3.57 மீட்டரிலிருந்து 5.75 மீட்டராக அகலப்படுத்திக்கொள்ளவும் அனுமதியை பெற்றிருக்கிறார்கள். இதற்காக, வனத்துறைக்கு வருவாய்த்துறையினர் சார்பில் 7.5 ஏக்கர் அளவுக்கு மாற்று இடத்தை வழங்கியிருக்கிறது. தற்போது, முழுவீச்சில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனாலும், ரெண்டு கி.மீ. தூரத்துக்கு தார் ரோடு போட இருபது வருட போராட்டம் என்பதெல்லாம் கொடுமையின் உச்சம்தான் !








Comments are closed, but trackbacks and pingbacks are open.