NPS – CPS 22 வருடமாக போக்கு காட்டிய மாநில கட்சிகள் ! ஓய்வூதியம் – குறு வரலாறு ! பாகம் – 02
ஓய்வூதியம் என்ற கருத்தியல் முதல்முதலில் ரஷ்யாவில் தோன்றி, எப்படி உலகெங்கும் விரிந்தது என்பதை முதல் பாகத்தில் பார்த்தோம். 2004 இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இந்த பாகத்தில் பார்ப்போம்.
2004இல் மத்தியில் ஆட்சி மாற்றம். காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி. 2003 முதல் 2013 வரை பல முறை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு NPS மசோதா முன் வைக்கப்பட்ட போது இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து மசோதாவைச் சட்டமாக்க விடாமல் வெளிநடப்பு உட்படப் பல்வேறு பிரச்சனைகளை அதிமுக MPக்கள் செய்தனர். அதே நேரம் திமுக MP-க்கள் மசோதாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். 2013ஆம் ஆண்டு நாடாளுமன்ற ஒப்புதலுக்காக NPS மசோதாவைக் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி சார்பில் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். NPS மசோதாவுக்கு ஆதரவாக காங்கிரஸ், BJP திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளின் MPக்கள் ஆதரித்து வாக்களித்தனர். இடதுசாரி கட்சிகள் அஇஅதிமுக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி MP-க்கள் எதிர்த்து வாக்களித்தனர். வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எந்தக் கட்சியும் வெளிநடப்பு செய்யவில்லை.
2007ஆம் ஆண்டு இந்திய அளவில் பெரும்பான்மை மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 2007ம் ஆண்டு NPS திட்டம் தொடர்பாக முதலமைச்சர்கள் மாநாட்டை டெல்லியில் காங்கிரஸ் திமுக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது. அம்மாநாட்டில் பங்கேற்ற முதல்வர்கள் NPS திட்டத்தை ஆதரித்தனர். எதிர்க்கட்சியான BJP முதலமைச்சர்களும் NPS திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மேற்குவங்காளம், திரிபுரா, கேரளா மாநில, இடதுசாரி முதல்வர்கள் மட்டும் NPS திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசின் சார்பில் இன்றைய நிதியமைச்சரான அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். அவர் NPS திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நடுநிலை வகிக்கவில்லை. அதற்கு மாறாகப் பெரும்பான்மை முடிவைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது என்று அறிவித்தார். முதலமைச்சர்கள் மாநாடு நடத்தும் முன்பே பெரும்பான்மை மாநிலங்கள் NPS க்கு ஆதரவு என்பது நாடறிந்த விசயம்.
2003ஆம் ஆண்டு CPS, திட்டத்தை அமுல்படுத்திய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அதிமுக அரசு NPS சட்டப்படி டெல்லியில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. தமிழகம் தவிர்த்து NPS திட்டத்தை அமுல்படுத்திய அனைத்து மாநிலங்களும் PFRDA-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 2006-2011 வரை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களும் ஜெயலலிதா வழியில் PFRDA-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. 2021 முதல் தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் அவர்களும் செல்வி ஜெயலலிதா வழியில் PFRDA உடன் இன்று வரை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதனால் தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழகஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தனித் தீவாக இருக்கிறோம்.
PFRDA-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பிற மாநில அரசு ஊழியர்களின் சேமிப்புத் தொகைக்கு (40%) ஏற்ப மாதாந்திர ஓய்வூதியம் உண்டு. பணிக் கொடை உண்டு. CPS திட்டத்தில் இறந்த குடும்பத் குடும்பத்தினருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டப்படி குடும்ப ஓய்வூதியம் உண்டு. தமிழக அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை குடும்ப ஓய்வூதியம் வழங்காமல் அதிமுக அரசும், திமுக அரசும் 22 ஆண்டுகளாகப் போட்டி போட்டு அரசு ஊழியர் ஆசிரியர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
1.4.2003 முதல் தமிழகத்தில் CPS திட்டத்தை அமுல்படுத்தினாலும் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அரசு ஊழியர்களிடம் CPS சந்தா பிடித்தம் செய்யவில்லை. 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 2009ஆம் ஆண்டு CPS சந்தா பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட்டது. ஆனால் பிடித்தம் செய்த சந்தா தொகைக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகக் கலைஞர் ஆட்சியில் வெளியிட்ட அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதன் விளைவு CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.
இந்தியாவிலேயே முதல்முறையாக, பென்சன் திட்டத்தில் வல்லுநர் குழுவை தமிழகம் நியமித்த விவகாரத்தை அடுத்த தொடரில் பேசுவோம்.
(தொடரும்)
பா.பார்த்தசாரதி, புரவலர்,
அகில இந்திய ஓய்வு பெற்ற பல்கலைக்கழக,
கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AIFRUCTO)








Comments are closed, but trackbacks and pingbacks are open.