அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஏன் இவர்கள் – தற்குறிகள் ?

திருச்சியில் அடகு நகையை விற்க

அன்பு நண்பர் M Jegan Kaviraj இன்று வாட்ஸ் அப்-ல் “அருமையான பதிவு” என்ற குறிப்புடன், ஒரு பேஸ்புக் பதிவை அனுப்பி இருந்தார்.அதில், தற்குறிகளை தற்குறிகள் எனக் கூறுவது குறித்துப் பத்திரிகையாளர் சமஸ் வருத்தப்பட்டு இருக்கிறார். “நட்பு வட்டத்தில், இவ்வளவு வெறுப்பர்களைக் கொண்டிருக்கிறேனா என்று சில நாட்களாக ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று குமுறி இருந்தார்.

சமஸ், பேஸ்புக் நட்பில் இருக்கிறார்.. எங்களுக்குள் பரஸ்பர அறிமுகமும் உண்டு. மற்றபடி, நான் அவர் நட்பு வட்டத்தில் இருக்கிறேனா என்று தெரியவில்லை.ஆனாலும் எனக்கு அவர் நண்பர்தான். அவரது கவலையைப் போக்க வேண்டியது என் கடமை. அதேடு  எனக்கு இந்தப் பதிவை எனக்கு அனுப்பிய, நண்பர் ஜெகன் கவிராஜூக்கு செலுத்தும் மரியாதை. ஆகவேதான் இந்த விளக்கம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தவிர இதே மனநிலையில் இருப்போருக்கான பதிலும் கூட.

சமஸ்: புதிய அரசியலை நோக்கி நகரும் பெருந்திரள் மக்களை ‘தற்குறிகள்’ என்று அழைப்பது மேட்டிமைத்தனம் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

விளக்கம்: வாக்காளர்களை ‘தற்குறிகள்’ என்று அழைப்பது நாகரிகமான செயல் அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் வெறுப்பு இல்லை. அடிப்படை அரசியல் கொள்கையோ, தொலைநோக்கோ இல்லாமல் வெறும் ‘பிம்ப அரசியலை’ (Image Politics) வழிபடுபவர்களே தற்குறிகள் என அழைக்கப்படுகிறார்கள். சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில உரிமை போன்ற நீண்டகால போராட்ட வரலாறுகளை அறியாமல், வெறும் திரைப் புகழுக்காக மட்டுமே வாக்களிப்பது – வணங்கிக் கிடப்பது – சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்ற அச்சமே இத்தகைய கடுமையான விமர்சனங்களுக்குக் காரணம். விஜயின் ரசிகர்கள் உட்பட அனைவர் மீதும் அக்கறையும் அன்பும் கொண்ட  அறச்சீற்றமே.

சமஸ்: திமுக, அதிமுகவிடமிருந்துதான் இந்த வாக்குகள் மடைமாறுகின்றன. அவர்களைத் திடீரென தற்குறிகள் என்று சொல்வது தவறு.

விளக்கம்: வாக்குகள் மடைமாறுவது என்பது காலங்காலமாக நடப்பதுதான். கொள்கை என்றில்லை; ஒரு கட்சியின் செயல்பாடு பிடிக்காமலும் வேறு கட்சிக்கு வாக்குகள் மடைமாறலாம். அதைத் தவறு எனச் சொல்ல முடியாது. “திமுகவை பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள்.. அதிமுகவைப் பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். இரு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தவெக நோக்கிச் செல்ல லாஜிக் என்ன இருக்க்கிறது” என்று விவாதங்களில் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இவற்றைவிட சிறந்த கட்சிகை நோக்கி அவர்கள் நகர்வதை குறை சொல்லப்போவது இல்லை. ஆனால் மாற்று எது என்று தெரியாமல் ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்திடம் தஞ்சம் புகுவது, ஒரு தற்காலிக உணர்ச்சிவசப்பட்ட முடிவாகவே (Emotional Decision) முடியும். கொள்கை அல்லது செயல்பாடுகள் அடிப்படையில் இல்லாத பிம்ப மாற்றம் தற்குறித்தனமே.

சமஸ்: அரசியல் விழிப்புணர்வற்ற பெருந்திரளை நாம் உருவாக்கியிருப்பது பெரும் பிரச்சினை. நெடுநாள் வியாதி. முதலில் நம்முடைய கல்விமுறையையும் ஆட்சியில் இருந்த கட்சிகளையும்தான் முதலில் கைகாட்ட வேண்டும்.

விளக்கம்: “அரசியல் விழிப்புணர்வற்ற பெருந்திரள் இவர்கள்” என்பதையும், இதை “நெடுநாள் வியாதி” என்பதையும் உணர்ந்திருப்பதற்குப் பாராட்டுகள். உண்மை. அதே நேரம், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சூழலில், தகவல்கள் விரல் நுனியில் உள்ளன. இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான சினிமா அப்டேட்களையும், தொழில்நுட்பங்களையும் தேடிப் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த அக்கறையில் நூற்றில் ஒரு பங்காவது கொண்டு, அரசியல் வரலாற்றைத் தேடி அறியாததற்கு யாரைக் குற்றம் சொல்வது?

“அரசியல் தெரியாது” என்பதை ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்துவது (Weaponized Ignorance) ஆபத்தானது. 2026-ல் வாக்களிக்கும் ஒரு தலைமுறைக்குத் தனது உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றால், அது அந்தத் தனிநபரின் பொறுப்பும்தான். அப்படியானவர்கள் தற்குறிகள்தான்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சமஸ்: 2026 தேர்தலைப் பொறுத்த அளவில் இதை  (அதாவது தற்குறி விமர்சனத்தைக்) காட்டிலும் கவலை தரும் பிரச்சினை… ஓட்டுக்கு ரூ. 10,000 என்பது. அரசியலில் பண்ணையாளர்கள் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சாமானியர்கள் கையில் ஒப்படைத்துச் சென்றார் அண்ணா. இன்று அவர் பெயரைச் சொல்லும் கட்சிகளே மீண்டும் சாமானியர்களிடமிருந்து பறித்து நவீன பண்ணையார்களிடம் களத்தைக் கையளித்திருப்பது எப்பேர்ப்பட்ட கொடுமை!

விளக்கம்: முதல் விஷயம், அண்ணா பெயரைச் சொல்லும் கட்சிகளானாலும், பெயரைச் சொல்லாத கட்சிகளானாலும் இப்படிப் பணம் கொடுப்பது தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். அடுத்து, தேர்தலுக்குத் தேர்தல், “ஓட்டுக்குப் பணம் வாங்குகிறார்களே..” என மக்களைக் குற்றம் சாட்டுவது, “பணம் கொடுக்கிறார்களே..” என அரசியல்வாதிகளைக் குற்றம் சாட்டுவது என்பது வழக்கமான சடங்காகிவிட்டது. இதைப் போக்கும் வழியை நோக்கி யாரும் செல்வது இல்லை.

தேர்தல் செலவுக்காக மட்டுமல்ல, கட்சி நடத்தவும் (அலுவலகம், ஊழியர், மின்கட்டணம் இதர) பணம் தேவைப்படுகிறது. அவற்றை பெருநிறுவனங்களிடமிருந்து (முறைகேடாக) பெறுகின்றன கட்சிகள். பதிலுக்கு, (முறைகேடாக) சலுகைகள் தருகின்றன. இதுதான் ஊழலின் ஊற்றுக்கண். இப்படி வரும் பணத்தில் வாக்காளர்களுக்கும் லஞ்சம் தருகிறார்கள்.

இன்னொரு புறம், எத்தனையோ விஷயங்களுக்காக லஞ்சம் கொடுத்துக்கொண்டே இருக்கும் பொதுமக்களுக்குத் தேர்தல் மட்டும்தான் லஞ்சம் பெற ஒரே வழி. இது சட்டப்படி தவறாக இருக்கலாம். ஆனால் இதைக் குத்திக்காட்டும் தகுதி எவருக்கும் இல்லை.

இந்த நிலையைப் போக்க, கட்சிச் செலவுக்கு அரசே பணம் தர வேண்டும். நிதி வாங்குவதைக் கடுமையாகத் தடை செய்ய வேண்டும். இது பல நாடுகளில் செயல்பாட்டில் இருக்கிறது. இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் இதற்குச் சிறிய தொகையே செலவாகும். இதன் மூலம் ஊழல், லஞ்சம் குறைந்து பெரும் பணம் அரசுக்கு மிஞ்சும். குறிப்பாகத் தேர்தலுக்குப் பணம் தரும் சூழலோ, அவசியமோ இருக்காது. இந்த நடைமுறை உள்ள நாடுகளில் ஊழல் மிக மிகக் குறைவு. இதை நோக்கிச் செல்லாமல் – குறைந்தபட்சம் குரல் எழுப்பாமல் – அவர் பெயர் சொல்லும் கட்சிகள்கூடப் பணம் கொடுக்கிறார்களே என்று குமைவது சரியல்ல.

சமஸ்: சாதி, மதத்துக்கு ஒருவர் அடிமையாக இருப்பது எப்படியோ, அப்படியே ஒருவர் சித்தாந்தத்துக்கு அடிமையாக இருப்பதும்.

விளக்கம்: சித்தாந்தத்துக்கும் கட்சிகளுக்கும் வேறுபாடு உண்டு. கட்சிகளுக்கு அடிமையாக இருப்பது சாதி, மதத்துக்கு அடிமையாக இருப்பது போலத்தான். ஆனால், திராவிட, பொதுவுடைமை சித்தாந்தங்களை ஏற்பது அடிமைத்தனமோ, அதிகாரத்தை நோக்கிய நகர்வோ அல்ல. திமுக, அதிமுக உள்ளிட்டவை கட்சிகள்; திராவிடம் என்பது சித்தாந்தம். இந்தப் புரிதல் வேண்டும். இது புரியாதது என்பது சமஸின் தற்குறித்தனமாகவோ, குயுத்தியாகவோ இருக்கலாம்.

சமஸ்: இவ்வளவு வெறுப்பையும் இழிவையும் சக மனிதர்கள் மீது கொட்டுபவர்களால் எப்படி வெட்கமே இல்லாமல் சமூகநீதியாளர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது?

விளக்கம்: தற்குறி என விளிப்பது சமூகத்தின் மீதான அக்கறையில், ஆதங்கத்தில் வெளிப்பட்ட அறச்சீற்றம் என்பதை ஏற்கனவே விளக்கிவிட்டேன். அதே நேரம், தற்குறிகளை – தற்குறிகளின் தலைவனை உயர்த்திப் பிடிப்பது, நியாயப்படுத்து, ‘திரும்பிப் பார்த்து சிரித்த விஜய்’ என வீடியோ போடுவதுதான் சமூக அக்கறை இல்லாத, வெட்கமற்றத் தன்மை.

– டி.வி. சோமு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.