அப்போது எந்தத் திரைப்படமாக இருந்தாலும் அதில் எங்கேனும் ஓரிடத்தில் எம்.ஜி.ஆர். படத்தைக் காட்டுவது வழக்கமாக இருந்தது. காரணம், அவர் முதலமைச்சராக இருந்தார். சினிமாவிலிருந்து முதலமைச்சரானவர் என்பதால் அவரை ஆதரிக்கும் மனநிலையே பெரும்பாலான சினிமாக்காரர்களுக்கு இருந்தது.
முதல்வரானதால் நடிப்பைக் கைவிட்டிருந்த எம்.ஜி.ஆர், திரையுலகில் தனக்கான செல்வாக்கு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என நினைத்தார். நடிகர் விஜயகுமார் அ.தி.மு.க.வில் சேர்ந்து, கையில் பச்சைக் குத்திக் கொண்டதுடன், ‘மாங்குடி மைனர்’, ‘அல்லி தர்பார்’ போன்ற படங்களில் அ.தி.மு.க கொடியைப் பிடித்தபடி பாடி நடித்தார். தமிழ்த் திரைத்துறைக்குப் புதிதாக வந்திருந்த பாரதிராஜா உள்பட பலரையும் எம்.ஜி.ஆர். தன் வசமாக்கினார்.. அரசின் சார்பில் விருதுகள் வழங்கி ஊக்குவித்தார். ரஜினியை மட்டும் எம்.ஜி.ஆருக்கு ‘ஏனோ’ ஆகவில்லை. எனினும், ரஜினி நடித்த படங்களில் எம்.ஜி.ஆர். ஃபோட்டோவைக் காட்டும் வழக்கம் இருந்தது.
பாக்யராஜூம் தன் இயக்கத்தில் வெளியான முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்கள் தொடங்கி, அடுத்தடுத்த படங்களிலும் எம்.ஜி.ஆர். படங்களைக் காட்டினார். மௌன கீதங்கள் படத்தில் நாயகனும் நாயகியும் தியேட்டருக்குப் போகும் காட்சியில், திரையில் எம்.ஜி.ஆர். நடித்த மீனவ நண்பன் படத்தின் பாட்டு ஓடிக் கொண்டிருக்கும். தானே இயக்கி, தானே நடித்து வெற்றிப் படங்களைத் தந்த பாக்யராஜூக்கு பெண் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. இதை முதலமைச்சரான எம்.ஜி.ஆர். கவனிக்கத் தவறவில்லை. அ.தி.மு.க.வுக்கு ஆதரவானவராக பாக்யராஜை வைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர். விரும்பினார்.
பாக்யராஜின் முதல் மனைவியும், பாமா ருக்மணி என்ற படத்தில் அவருடன் நடித்த நடிகையுமான ப்ரவீணா இறந்த நிலையில், டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் தன்னுடன் நடித்தவரும், முந்தானை முடிச்சு படத்தில் கௌரவப் பாத்திரத்தில் வந்தவருமான நடிகை பூர்ணிமா ஜெயராமை திருமணம் செய்து கொள்ள பாக்யராஜ் முடிவு செய்தார். இந்தத் திருமணத்தை 1984ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமையேற்று நடத்தி வைத்தவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
அவர் வாழ்த்துரை வழங்கும்போது, திரைப்படங்களில் தன்னைப் போலவே பெண்களின் ஆதரவைப் பெற்றவராக பாக்யராஜ் இருப்பதைக் குறிப்பிட்டு, அந்த வகையில் ‘பாக்யராஜ் என் வாரிசு’ எனத் தெரிவித்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மறுநாள் பத்திரிகைகளில், “என் வாரிசு பாக்யராஜ்-முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவிப்பு’ என்ற வகையில் தலைப்புச் செய்திகள் வெளியாகின. அப்போது, அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தார் செல்வி. ஜெயலலிதா. அவருக்கு எதிராக அ.தி.மு.கவின் சீனியர்களான எஸ்.டி.எஸ்., ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் இருந்தனர்.
ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து வந்த முக்கியத்துவத்தை விரும்பாத சீனியர்கள், பாக்யராஜை பகடைக்காயாகப் பயன்படுத்த விரும்பினர். எம்.ஜி.ஆரின் வாரிசு பாக்யராஜ்தான் என அ.தி.மு.க.விலேயே சத்தம் அதிகமாகக் கேட்டது. இது ஜெயலலிதாவையும் அவர் தரப்பையும் முணுமுணுக்க வைக்க, எம்.ஜி.ஆரின் காதுக்கும் இந்த விவரம் போனதால், அதன்பிறகே, எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு பாக்யராஜ் எனக் குறிப்பிடத் தொடங்கினர்.
1984ஆம் ஆண்டு அக்டோபரில் எம்.ஜி.ஆர். உடல்நலன் பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பக்கவாதம், சிறுநீரகங்கள் செயலிழப்பு, பேச்சற்ற கோமா நிலை இவற்றால் எம்.ஜி.ஆரை யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. உயர் சிகிச்சைக்காக அவரை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் புரூக்ளின் டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டு, புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த ராஜீவ் காந்தி உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்தார். தமிழ்நாட்டிலும் சட்டமன்றத் தேர்தலை சேர்த்து நடத்துமாறு அ.தி.மு.க. சீனியர்கள் ராஜீவ் காந்தி மூலமாகத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்தனர். நாடாளுமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தபடியே, ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். அவருடைய விண்ணப்பத்தில் கைரேகைதான் வைக்கப்பட்டிருந்தது. கையெழுத்து இல்லை. அதனால், எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றிய வதந்திகள் இறக்கைக் கட்டிப் பறந்தன. தேர்தல் களத்திலும் அது எதிரொலித்தது. அந்த நேரத்தில், அமெரிக்காவுக்கு நேரில் சென்று, புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆரிடம் உடல்நலன் விசாரித்து திரும்பினார் பாக்யராஜ்.
1984ஆம் ஆண்டு நடந்த தேர்தல் களத்தில் பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆர். இல்லாத நிலையில், ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர். தி.மு.க.வில் கலைஞர் தொடங்கி டி.ராஜேந்தர் வரை அனல் பறக்க பிரச்சாரம் செய்தார்கள். அ.தி.மு.க.வுக்காக நேரடியாகப் பிரச்சாரம் செய்தார் பாக்யராஜ். எம்.ஜி.ஆரின் உடல்நலன் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “மரியாதைக்குரிய தி.மு.க தலைவரை நான் வேண்டுமானால் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆரை பார்க்க வைக்கிறேன். உண்மையை அவர் தெரிந்துகொள்ளட்டும்” என்று பாக்யராஜ் பல ஊர்களிலும் பேசினார். பின்னர், எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெறும் வீடியோக்களும் வெளியாகி, தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அ.தி.மு.க.வுக்கு வெற்றியைக் கொடுத்தது.
சிகிச்சை முடித்து, 1985 பிப்ரவரி மாதத்தில்தான் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். மீனம்பாக்கம் விமானம் நிலையம் அருகிலேயே ஒரு மேடை போடப்பட்டிருந்தது. எதிரில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் உட்கார்ந்திருந்தனர். மேடைக்கு வந்த எம்.ஜி.ஆரால் பேச முடியாத நிலை. ஆனால், அமைச்சர்களை ஒவ்வொருவராக அடையாளம் கண்டு மேடைக்கு அழைத்தார். முக்கியமான அமைச்சர்களையடுத்து, எம்.ஜி.ஆர் மேடைக்கு அழைத்தது பாக்யராஜைத்தான். அந்தளவுக்கு எம்.ஜி.ஆரிடம் செல்வாக்குப் பெற்றிருந்த பாக்யராஜூக்கு, 1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர். இறந்த பிறகு தன்னுடைய அரசியல் பயணம் குறித்த குழப்பம் ஏற்பட்டது.
ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக அ.தி.மு.க. பிளவுப்பட்டு தேர்தல் சந்தித்தது. ஜெயலலிதா தரப்பு தன் மீது கடுப்பாக இருந்ததால், ஜானகி அணியில் பாக்யராஜ் இருந்தார். அந்த அணியின் வேட்பாளர் பட்டியலில், பாக்யராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பழனிசாமிக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தான் பரிந்துரைத்த மற்றவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தன் ரசிகர் மன்ற நிர்வாகியும் போட்டியிட மாட்டார் என பாக்யராஜ் அறிவித்தார். எம்.ஜி.ஆர். இருந்தவரை தனக்கு அ.தி.மு.க. சீனியர்கள் காட்டிய மரியாதையையும், அதன்பிறகு அவர்களிடம் தெரிகின்ற மாற்றத்தையும் புரிந்துகொண்டு, 1989 சட்டமன்றத் தேர்தலில் பெரியளவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்தார் பாக்யராஜ்.
அவருடைய ரசிகர்களிடம் அரசியல் ஆர்வம் இருந்தது. அவர்களுக்காகவும், தனக்கான அடையாளமாகவும் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 1989-ல் மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. அதில் பாக்யராஜ் கட்சி போட்டியிடவில்லை. மதுரை கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சங்கரய்யாவை ஆதரித்தது பாக்யராஜ் கட்சி. மருங்காபுரியில் காங்கிரசுக்கு ஆதரவு தந்தது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.

1989 நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை. 1991-ல் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. அதிலும் போட்டியிடவில்லை. பெயரளவுக்குக் கட்சியைப் பதிவு செய்து, இது நம்ம ஆளு உள்ளிட்ட திரைப்படங்களில் கொடியைக் காட்டிய பாக்யராஜூம் அவருடைய கட்சியும் தேர்தல் களத்திற்கே வரவில்லை.
சினிமாவுக்கான ஸ்க்ரீன்ப்ளேவை பக்காவாக எழுதும் திறமை கொண்ட அவருக்கு, அரசியலுக்கான ஸ்க்ரீன்ப்ளே கைகொடுக்கவில்லை. காற்றடிக்கும் திசைக்கேற்ப அ.தி.மு.க, தி.மு.க. என அவ்வப்போது ஆதரித்தார். எம்.ஜி.ஆர் காலத்தில் அரசியலிலும் சினிமாவிலும் போட்டியாளர்களாகக் கருதப்பட்ட பாக்யராஜூம் டி.ராஜேந்தரும் 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்காகப் பிரச்சாரம் செய்தனர். பிறகு, பாஜக ஆதரவு குரலாகவும் பேசியவர், ஒரு கட்டத்தில் சாதிப் பெருமை பேசக்கூடியவரானார். அரசியல் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. ஆனால், நிறைய அனுபவங்களை அள்ளிக் கொடுத்திருந்தது.
— கோவி.லெனின்







Comments are closed, but trackbacks and pingbacks are open.