அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கூட்டுக்கொள்ளை … செக் மோசடி … நிலமோசடி … பாலியல் வழக்கு : த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் குற்றப்பின்னணி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தீயசக்தி திமுக என்ற விமர்சனத்திற்கு அடுத்து, திமுகவுக்கு எதிராக த.வெ.க. முன்வைத்த பிரதான குற்றச்சாட்டு ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.” என்பது. ஆனால், ஆட்சிக்கு வந்த நாற்பது நாட்களில் அடுத்தடுத்து 200-க்கும் மேற்பட்ட கொடூர கொலைகள், பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பலியான சோகங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

அதிலும் குறிப்பாக, ஆளும் கட்சியை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளே இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதுதான் இதில் உச்சக்கட்ட கொடுமை. இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரையில் அடுத்தடுத்து பணியிட மாற்றங்களைத்தான் கண்டிருக்கிறதே, தவிர. குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சரவணன்
சரவணன்

இந்த பின்னணியில்தான், வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும், சமரசம் செய்ய முயன்றதாகவும் தூத்துக்குடி – ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ சரவணன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இதனை தொடர்ந்து, திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து நின்று வென்ற, த.வெ.க. எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி, சொந்தக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளரையே பச்சையாக திட்டித்தீர்த்த வீடியோ வெளியாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது.
முதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய த.வெ.க. தலைமை; நவல்பட்டு விஜி விவகாரத்தில், அவர் ஆபாசமாக பேசியதற்கு ஆறுதல் பரிசாக மாவட்ட செயலர் பதவியை தந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
இத்தகைய பின்னணியில்தான், தற்போது த.வெ.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்போர்களின் குற்றப்பின்னணியை அங்குசம் புலனாய்வுக்குழு ஆய்வு செய்தது. இதில் கிடைத்திருக்கும் பிரத்யேக தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கின்றன.
தற்போதைய 107 த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் 41 பேர் குற்றப்பின்னணியை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதில் முதல்வர் உள்ளிட்டு அமைச்சர்கள் 17 பேர்; சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் 2 பேர்; எம்.எல்.ஏ.க்கள் 22 பேர். குற்றப்பின்னணி கொண்ட 41 பேரில், 25 பேர் அரசியல் காரணங்களுக்காக வழக்கை எதிர்கொண்டிருப்பவர்கள். எஞ்சியுள்ள 16 பேர் அரசியல் காரணங்கள் அல்லாத வழக்கமான கிரிமினல் வழக்குகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதில், 4 அமைச்சர்களும் அடக்கம் என்பதுதான் ஹைலைட்.
தீவிர குற்றப்பின்னணி கொண்ட அமைச்சர்கள் :
ஆ.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும் நிதித்துறை அமைச்சருமான என்.மரிய வில்சனுக்கு எதிராக, கடந்த 2012 இல் சுங்குவார் சத்திரம் ஸ்டேஷனில் கொலையாகக் கருதப்படாத குற்றஞ்சார்ந்த மரணம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. 2022 இல் புதுச்சேரி லாஸ்பேட் ஸ்டேஷனில் இல் வீட்டில் அத்துமீறி நுழைந்து சேதத்தை ஏற்படுத்தியது, அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல், ஆபாசமான செயல்கள் மற்றும் பாடல்கள், குற்றவியல் மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக மற்றொரு வழக்கு பதிவாகியிருக்கிறது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சருமான ஆர்.நிர்மல் குமாருக்கு எதிராக, 2024 இல் கலவரத்தை தூண்டுதல், பொது மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துதல், வதந்திகளை பரப்பியதாக சைபர் கிரைம் போலீசில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
தவெக அமைச்சா்கள்காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான ஆர்.வி.ரஞ்சித்குமாருக்கு எதிராக, கடந்த 2024 இல் வாலாஜாபாத் ஸ்டேஷனில், , கணினி அமைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், குற்றமுறு மிரட்டல், ஆபாச சொற்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக வழக்கு பதிவாகியிருக்கிறது.
அரக்கோணம் (தனி) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் கூட்டுறவு துறை அமைச்சருமான வி.காந்திராஜ்-க்கு எதிராக கடந்த 2024 இல் கவுன்சிலராக இருந்தபோது, நிலத்தகராறில் ஈடுபட்டதாக அரக்கோணம் ஸ்டேஷனில் ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறது.
தீவிர குற்றப்பின்னணி கொண்ட எம்.எல்.ஏ.க்கள் :
தற்போது ஆபாச பேச்சு சர்ச்சையில் சிக்கியிருக்கும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயகுமார் (எ) நவல்பட்டு விஜிக்கு எதிராக, கடந்த 2019 இல் பொது இடத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியதாக நவல்பட்டு காவல்நிலையத்தில் ஒரு வழக்கும்; முகநூலில் அவதூறாக பேசி மிரட்டியதாக 2021 இல் ஒரு வழக்கும்; 2022 இல் மற்றொரு வழக்கும் திருச்சி சைபர் கிரைம் போலீசில் பதிவாகியிருக்கிறது.
பதவியேற்புவிழாவில், ”நான் வணங்கும் மனிதக் கடவுள் தளபதி” என செண்டிமெண்டாக பேசிய பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆர்.பிரகாசத்திற்கு எதிராக, 2026 இல் திருவள்ளூர் டவுன் ஸ்டேஷனில், பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகியிருக்கிறது.
உச்சக்கட்டமாக, கூட்டாக கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததாக, குற்றச்சாட்டில் சிக்கி கிறங்க வைக்கிறார், மதுரை கிழக்கு எம்.எல்.ஏ. எஸ்.கார்த்திகேயன். இந்த குற்றச்சாட்டின் கீழ், கடந்த 2003 இல் அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பதிவான வழக்கு கிறுகிறுக்க வைக்கிறது. மேலும், கடந்த 2024 இல் இவர் செயலாளராக இருந்த மனமகிழ் மன்றத்தில் மன்ற பணத்தை கையாடல் செய்ததாக மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவாகியிருக்கிறது. 2008 இல் திருமங்கலம் இடைத்தேர்தலில் அடிதடி சண்டையில் ஈடுபட்டதாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
கந்தர்வகோட்டை (தனி) தொகுதியின் எம்.எல்.ஏ. என்.சுப்பிரமணியனுக்கு எதிராக, வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டுதாக, கடந்த 2023 இல் சேலம் மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து கூட்டம் நடத்தியதாக சர்ச்சையில் சிக்கிய சூலூர் எம்.எல்.ஏ. சுகுமாருக்கு எதிராக, கடந்த 2012 இல் கோவை மாநகர குற்றப்பிரிவில் நிலமோசடி வழக்கு ஒன்று பதிவாகியிருக்கிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரையே வீழ்த்திய சாமானிய ஆட்டோ டிரைவர் என்பதாக முன்னிறுத்தப்பட்ட, ராயபுரம் எம்.எல்.ஏ. கே.வி.விஜய் தாமு தனது பிறந்தநாளில் 2 அடி நீள வாளில் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கினார். திருவான்மியூர் காவல் நிலையத்தில் அரசியல் ரீதியான 3 வழக்குகளோடு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு ஒன்றையும் எதிர்கொண்டு வருகிறார்.
தவெக எம்எல்ஏ-கள்இவரைப்போலவே, வீரபாண்டி எம்.எல்.ஏ. எம்.எஸ்.பழனிவேல்-க்கு எதிராகவும் கடந்த 2022 இல் பதிவான செக் மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது.
வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக சேலம் இலஞ்ச ஒழிப்புத்துறையில் 2012 இல் பதிவான வழக்கை எதிர்கொண்டு வருகிறார், சேலம் மேற்கு எம்.எல்.ஏ. எஸ்.லக்ஷ்மணன்.
இதுதவிர, மணப்பாறை எம்.எல்.ஏ, ஆர்.,கதிரவனுக்கு எதிராக, 2019 இல் வையம்பட்டி ஸ்டேஷனில் ஒரு அடிதடி வழக்கு பதிவாகியிருக்கிறது.
குடும்பத் தகராறில் அசிங்கமாக திட்டியதாக, மதுரை கிழக்கு எம்.எல்.ஏ, தங்க பாண்டியனுக்கு எதிராக, 2019 இல் செல்லூர் ஸ்டேஷனில் ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறது.
விருதுநகர் எம்.எல்.ஏ. பி.செல்வத்துக்கு எதிராக, ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக 2016 இல் விருதுநகர் கிழக்கு ஸ்டேஷனில் ஒரு வழக்கு; 2018 இல் வனவிலங்கு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
”உன்னமாதிரி எத்தனை பேர பார்த்திருப்பேன்னு” குவாரி நடத்துபவர்களிடம் பேசி வைரலான, போளூர் எம்.எல்.ஏ.ஆர்.அபிஷேக்குக்கு எதிராக, 2017- இல் நாட்ராம்பள்ளி காவல் நிலையத்தில் விபத்து தொடர்பான வழக்கு ஒன்று பதிவாகியிருக்கிறது.
கவனத்தை பெற்ற வழக்குகள் :
கடலூர் சட்டமன்ற உறுப்பினரும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான பி.ராஜ்குமார், கடந்த 2022 இல் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடாததை கண்டித்து நடத்திய போராட்டத்தை நடத்தியதற்காக வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
tvk ministersஇதைவிட சுவாரஸ்யம். திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆறுமுகத்துக்கு எதிராக, அனக்காவூர், வந்தவாசி வடக்கு, செய்யார், திருவண்ணாமலை கிழக்கு, செங்கம், போளூர் ஆகிய காவல் நிலையங்களில் 2023 – 2025 இல் அடுத்தடுத்து 13 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அத்தனை வழக்குகளும் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தியதற்காக போடப்பட்ட வழக்குகள்.
தியேட்டருக்கு படம் வரவில்லை என்று போராடியவருக்கு கிடைத்த அமைச்சர் யோகம் விவசாயிகளின் உரிமைக்காக போராடிய போராளிக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமானதுதான்.
பொதுவான ஆர்ப்பாட்ட – அரசியல் வழக்குகள் :
2026 இல் பேரவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்ததாக வழக்கு. மதுரையில் நடைபெற்ற ரேம்ப் வாக்கில் வாலிபரை பவுன்சர்களை கொண்டு தூக்கி எறிந்ததாக கூடக்கோவில் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என இரண்டு வழக்குகளை முதல்வர் சி.ஜோசப் விஜய் எதிர்கொண்டு வருகிறார்.
இதுதவிர, கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கு; தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு; பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது; அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது; அனுமதியின்றி கூடியது; போக்குவரத்துக்கு இடையூறாக பேரணி சென்றது; அனுமதியின்றி பேனர் வைத்தது போன்ற அரசியல் காரணங்களுக்காக, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா; ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார்; கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெ.முகம்மது பர்வாஸ்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்; வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.தென்னரசு; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை வி.சம்பத்குமார்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே.விக்னேஷ்; போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.விஜய் தமிழன் பார்த்திபன்; வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள்.
தவெக அமைச்சர்கள்பொது இடத்தில் குந்தகம் விளைவித்ததாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிராக ஒரு வழக்கும்; அனுமதியின்றி பேனர் வைத்ததாக துணை சபாநாயகர் எம்.ரவிசங்கருக்கு எதிராக ஒரு வழக்கும் பதிவாகியிருக்கிறது.
எம்.எல்.ஏக்களில், கல்லாணை (மதுரை வடக்கு) ; பாலமுருகன் (திருப்பூர் தெற்கு); எம்.சுதாகர் (காட்பாடி); பி.சரவணன் (சோழிங்கநல்லூர்); ஜெ.முனிரத்னம் (உத்திரமேரூர்) ; ஆர்.விஜய் சரவணன் ( தஞ்சாவூர்) ; ஜி.சரவணன் (ஸ்ரீவைகுந்தம்); வி.பி.தமிழ்ச்செல்வி (பவானிசாகர் (தனி); வி.சத்யபாமா (திருப்பூர் வடக்கு) ஆகியோர் அரசியல் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
அரசியல்ரீதியாக எதிர்கொள்ளும் வழக்குகள் நீங்கலாக, கூட்டுக்கொள்ளை … செக் மோசடி … நிலமோசடி … பாலியல் வழக்கு என தீவிர குற்றச்சாட்டில் 4 அமைச்சர்கள் 12 எம்.எல்.ஏ.க்கள் சிக்கியிருக்கும் பின்னணியில் த.வெ.க. தூய சக்தி என்று தங்களை மார்தட்டிக் கொள்வதில் தார்மீக உரிமை இருக்கிறதா, என்ன?

முழுமையான வீடியோவை காண 

– அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.