“தவெக ஆட்சியை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். பின்னாலிருந்து இயக்குகின்றன. நடப்பது பாஜகவின் நேரடி ஆட்சிதான் என்று அரசியல் களத்தில் அதிரடி குண்டை தூக்கி வீசியிருக்கிறார், வி.சி.க. முதன்மை செயலாளர் ஆளுர் ஷநாவாஸ். பதறியடித்துக்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டிய த.வெ.க. படு சைலண்ட். ஆதவ்-இன் அடிப்பொடிகள்தான் அறிக்கை என்ற பெயரில் சில்லறையை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஷாநவாஸின் கருத்துக்கு சொந்தக் கட்சியிலிருந்தே, எந்த எதிர்வினையும் இல்லை. விஜய் பாணியில் அமைதி காக்கிறார், திருமா.
ஒரு ஆணியும் பிடுங்கல !
ஆளூர் ஷாநவாஸ் பேச்சு சர்ச்சையாகியிருக்கும் அதே பின்புலத்தில்தான், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையே இயற்றிய நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்த பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்ட அவலமும் அரங்கேறியிருக்கிறது. இதில் கொடுமை, ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகத்தான் பாடப்பட வேண்டுமென்று ஆளுநர் தமக்கு விடுத்த அன்பு மிரட்டல் குறித்து பல்கலை துணைவேந்தர் ஊடகங்களிடம் முறையிட்டும் எந்த ஆணியும் பிடுங்கப்படவில்லை. மாறாக, எல்லாம் முடிந்தபிறகு, “தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படவேண்டும். இதில் சமரசத்திற்கு இடமில்லை” என்ற முதல்வரின் பஞ்ச் டயலாக்தான் அறிக்கை டெலிவரியாக கிடைத்தது.

காவிரி டெல்டா – டால்டா டயலாக் !
காவிரி நீர் விவகாரத்தில், திமுகவை போல கடிதம் எழுதிக்கொண்டெல்லாம் இருக்க மாட்டோம்; டெல்டா காரன் என்று சொல்லி டால்டா லா கொடுக்க மாட்டோம்னு டயலாக் பேசுனவரு த.வெ.க. தலைவர் விஜய். கடைசியில், மோடிக்கு கடிதம் எழுதி களைத்துப்போனதுதான் மிச்சம். இந்த ரணகளத்துக்கு நடுவுல இந்த நயினார் நாகேந்திரன் வேற. “எப்படி எங்க முதல் அமைச்சரை வா- னு சொல்லிட்டு இப்போது வரவேண்டாம்னு சொல்லி அவமானம் செய்வதா?” என்று பொங்க பதிலுக்கு கர்நாடகா சி.எம். சிவகுமார், “பெங்களூரூ வருவதாக கூறியவர் உங்கள் முதல்வர் விஜய்தான்” என்று உண்மையைப் போட்டு உடைக்க, பரிதாபத்துக்கு ஆளாகிப்போனார் நயினார்.

நமுத்துப்போய் கிடக்கும் தமிழகம் !
சரி, விசயத்துக்கு வருவோம். “காவிரியின் குறுக்கே கட்டுமானம் செய்வதற்கு பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறவில்லை. ” என்று ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த விவகாரத்தை மாநிலங்களவையில் விவாதப்பொருளாக்கியிருக்கிறார் எம்.பி. அன்புமணி ராமதாஸ்.
“கடைமடை மாநிலங்கள் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே எந்த வேலையும் செய்ய முடியும்” என்பதையும், அந்த ஆதாரம், எந்தப் பக்கத்தில் எந்த வரியில் இருக்கிறது என்றும் விலாவரியாக பல்வேறு நீதிமன்றத் தீர்ப்பு நகல்களைக் காட்டி தற்போது சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத திமுகவின் பொதுச்செயலர் துரைமுருகன் பதிலடி கொடுக்கிறார். இங்கே, ஒன்றிய அமைச்சரே இப்படி தவறான தகவல் கொடுக்கிறாரே? என கேள்வி எழுப்பி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குண்டை தூக்கிப்போட்டதில் நாடாளுமன்றமே அதிர்ந்துதான் போனது. அதேசமயம், கொதித்து எழுந்திருக்க வேண்டிய தமிழகம் நமுத்துப்போய் கிடப்பதாக ஆதங்கத்தையும் பதிவு செய்தார்.
பாஜகவை விஞ்சிய பெர்ஃபாமன்ஸ் !
நிர்மல்குமார் வழக்கம்போல ஆதாரம் இல்லாமலும் தேவையில்லாமலும் வாயைவிட, அமைச்சரே இப்படி பொய் பேசலாமா? என்று கூட்டணி கட்சியினரே கேள்வி கேட்கும் அளவுக்கு போனது. ச்சும்மா அடித்து விடுவதில், ஆதவ்-க்கு நிகராக நிற்கிறார் நிர்மல்குமார். நிற்க, தனது துறை சார்ந்த காவிரி விவகாரத்தில் இப்போது வரையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வாய்த்திறக்கவே இல்லை. ஒருவேளை மனம் இறங்கி கர்நாடகா அணையைத் திறந்தாலும், இவர் வாய் திறக்கப்போவதுமில்லை. எந்த விவகாரம் குறித்தும் புஸ்ஸி ஆனந்த் வாயைத் திறக்காமல் இருப்பதே உத்தமம் என்று தலைமை கருதுகிறதோ, என்னவோ?
அது அமைச்சர் ஆனந்த் வாய். அவரது உரிமை. அதில் தலையிட எதுவுமில்லை. ஆனால், தங்களை மீறி தமிழகத்தில் யாரும் எதுவும் பேசிவிடக்கூடாது என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்? உச்சபட்சமாக, திராவிடர் கழகத்தின் நீட் – எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சாரத்துக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டதை எப்படி புரிந்து கொள்வது? இதைத்தான் பாஜகவின் சாயல் – நகல் ஆட்சி என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.
இதைவிட, இவ்வளவு அபத்தமான கேலிக்கூத்தை தமிழக அரசியல் கண்டதே இல்லை எனும் அளவுக்கு, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டிய வேளாண்துறை நிதி நிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் திருப்பதி கோயிலில் வைத்து பூஜை செய்து அதிர வைத்திருக்கிறார். யோகி ஆதித்யநாத்தின் மூளை கூட இப்படி யோசித்ததில்லை. பாஜகதான் பரம எதிரி என்று சவடால் பேசியவர்கள், பாஜகவை விஞ்சிய பெர்ஃபாமன்ஸை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதயநிதி கைது ! விஜய்க்கு அழுத்தம் கொடுத்தது யார் ?
இன்னும் சொல்லப்போனால், பிஹாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவரும் நாடறிந்த அரசியல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கியிருக்கிறார். இதற்கு முன்னர் 2025 இல் நடைபெற்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன் சுராஜ் வெறும் 3.3% வாக்குகளுடன் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலையில் இந்த வெற்றியை வசமாக்கியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
பாஜகவுக்கு பேரிடியாகவும் இறங்குமுகமாகவும் அமைந்த பிரசாந்த் கிஷோரின் வெற்றி குறித்து, நாடே விவாதத்தை கிளப்பும் என்று எதிர்பார்த்த நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை அதிரடியாக கைது செய்து திரிஷா குறித்த விவாதத்தை தேசிய செய்தியாக மாற்றியதும் பக்கா பிஜேபி பிளான் என்றே சந்தேகிக்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.

ஆளுநரையே தலைதெறிக்க ஓடவிட்டது கடந்த ஆட்சியின் பாஜக எதிர்ப்பு அரசியல். “ஓடு…ஓடு… வர்றான் பாரு வேட்டைக்காரன் ..” என்ற பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டபடி, ரீல்ஸ்க்காக ஓடிக்கொண்டிருக்கிறது, மாற்றத்துக்கான நாயகன் விஜயின் ஆட்சி!
– மாஸ்டர் ஆதவன்









Comments are closed, but trackbacks and pingbacks are open.