அப்பா-மகன் உறவைப் பேசும் சமுத்திரக்கனியின் ‘ராமம் ராகவம்’
அப்பா-மகன் உறவைப் பேசும் சமுத்திரக்கனியின் ‘ராமம் ராகவம்’ பிருத்தவி போலவரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ‘ராமம் ராகவம்’. தெலுங்கு மற்றும் தமிழில் ரிலீசாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஏப்ரல் 27-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசியவர்கள்.
தயாரிப்பாளர்பிருத்தவி, “சமுத்திரக்கனி அண்ணனின் உதவி இல்லாமல் இந்தப் படத்தை என்னால் தயாரித்து இருக்க முடியாது. தந்தை- மகன் உறவுச் சிக்கல் குறித்து பேசும் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. கட்டாயம் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”.
ஹீரோயின் மோக்ஷா, “தமிழில் இது என்னுடைய முதல் படம். தமிழ்ரசிகர்கள் கட்டாயம் ஆதரவு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”.
இயக்குநர் பாண்டிராஜ், “என்கூடப் பிறக்காத அண்ணன் கனி அண்ணன் கிட்ட ஒரு குணம் இருக்கிறது.
பெரிய கம்பெனி நிறைய சம்பளம் வாங்கி இல்லாதவங்களுக்கு கொடுப்பாரு.சின்னக் கம்பெனி புது இயகுநர் படத்திற்கு சும்மா நடித்து கொடுப்பார். தன்னுடைய படமாக இருந்தாலும் சரி வேறொருவர் இயக்குகிற படமாக இருந்தாலும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுக்கக்கூடியவர். இந்த படத்திலும் அவருடைய உழைப்பை டீசரில் பார்க்க முடிந்தது. இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்”.
நடிகர் தம்பி ராமையா, “அன்பினால் எல்லோரிடமும் உறவுக்காரராக மாறிவிடுபவர் என்னுடைய அருமைத் தம்பி சமுத்திரக்கனி.அவர் இந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்றய சூழலில் அப்பா செண்டிமெண்ட் திரைப்படங்கள் தேவைப்படுகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்”.
நடிகர் சூரி, “அப்பா மகன் உறவு தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப்படமும் கட்டாயம் வெற்றி பெரும். ஒரு படம் எடுப்பதை விட மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் சிரமமாக இருக்கிறது. இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல நிறைய சிரமம் எடுத்துள்ளனர். கனி அண்ணன் நெகட்டிவாக பேசினதா நான் கேட்டதே இல்லை.. உங்கள் உழைப்பு இந்தப்படத்திலும் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்”.
இயக்குனர் தன்ராஜ், “இந்த நாளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. சிவபிரசாத் எழுத்தாளரின் கதை இது. இந்தக் கதையை கனி அண்ணனிடம் கூறினேன். கதையை நீயே டைரக்ட் பண்ணு என ஊக்கப்படுத்தினார். நான் நடித்த படங்களின் இயக்குனர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதை வைத்து படத்தை இயக்கி இருக்கிறேன். சமுத்திரக்கனி அண்ணன் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகி இருக்காது. கனி அண்ணன் போல நல்ல கதைகளை ஆதரித்து ஊக்கம் அளித்தால் சினிமாவிற்கு நல்ல திரைப்படங்கள் வரும். ஒவ்வொருவரும் தன் அப்பாவோடு வந்து கட்டாயம் இந்தப் படத்தை பாருங்கள்”.
கதையின் நாயகன் சமுத்திரக்கனி, ” நெகிழ்வான தருணம் இது. ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை.
தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும். நம்பிக்கையை மட்டுமே வைத்திருப்பவர்கள் சிறப்பாக படம் பண்ணிடுவாங்க. தன்ராஜை அப்படி நம்பி இந்த படத்துக்குள்ள வந்தேன்.
தயாரிப்பாளரை படப்பிடிப்பில்தான் முதல் முறையாக பார்த்தேன். என்னைப் பார்க்காமலே என் மீது நம்பிக்கை வைத்த தம்பி. மாபெரும் உறவோடு வந்து இருக்கிறார் வாழ்த்துகள் தம்பி. இந்தப் படத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன்”.
இயக்குனர் பாலா… “சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர். மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்”.