புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி
புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி
திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான வெற்றிச்செல்வன் என்கிற விஜயகுமார் வழக்குரைஞர் சித்ரா இணையரின் புதல்வி கீர்த்தனா.பிகாம்.எல்எல்பி ஹானர்ஸ் சட்டப்படிப்பினை பயில்கிறார்.
இளம் வயதிலேயே தனது தந்தை செய்யும் யோகா பயிற்சியினைப் பார்த்து தானும் யோகா பயிற்சி செய்து அதை நூலாக வெளியிட வேண்டும் என்ற நோக்கில், ‘யோகா’ ‘எளிய உடற்பயிற்சி’, ‘சூரிய நமஸ்காரம்’, உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். தனது தாய், தந்தையுடன் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 2022 நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கூந்தலை தானம் செய்துள்ளார்.
இது குறித்து கீர்த்தனா பேசுகையில்,
புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக கூந்தலை தானமாக வழங்கியுள்ளேன். புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் கூந்தலை தானமாக வழங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. தலைமுடியை சரியாக கத்தரித்து வழங்காவிட்டால் தானமாக வழங்கும் முடி பயனற்று போய்விடும். தானம் செய்யக்கூடிய முடி குறைந்தபட்சம் 8 அங்குலங்கள் முதல் 14 அங்குலம் வரை இருக்க வேண்டும். குறைந்தபட்ச நீளத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலை முடியை விக் வடிவில் தயாரித்து வழங்கும் தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அவர்கள் முடியின் நீளம், அடர்த்தி போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான கூந்தலை தானமாக பெறுகின்றனர். சில தொண்டு நிறுவனங்கள் வண்ணங்கள் பூசப்பட்ட முடிகளை நிராகரித்துவிடுகின்றன. ரசாயன சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் அத்தகைய முடிகளை வாங்குவதில்லை. சில தொண்டு நிறுவனங்கள் நீளமான முடியை மட்டுமே வாங்குகிறது. முடியின் அடர்த்தி எப்படி இருக்கிறது என்பதையும் சில நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன. தானமாக கொடுக்கப்போகும் கூந்தலை இயற்கையான முறையில் பராமரித்து உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கூந்தலை எந்த பகுதியில் இருந்து வெட்ட போகிறீர்களோ அங்கு இறுக்கமாக ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். கூந்தலின் நுனிப்பகுதி வரை முழுவதுமாக வெட்டிவிடக்கூடாது. கூந்தலின் நீளமும், அடர்த்தியும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அதனால் கூந்தலின் நுனிப் பகுதிக்கு அருகில் மற்றொரு ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். இரு ரப்பர் பேண்டுக்கும் இடையே கூந்தல் எவ்வளவு நீளம் இருக்கிறது. அந்த நீளம் தானமாக பெறும் நிறுவனத்தின் விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு முடியை வெட்ட வேண்டும் என்றார்.