கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்த வனிதா. – சமுத்திரக்கனி ஷாக்!
கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்த வனிதா. — சமுத்திரக்கனி ஷாக்! தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். க்ரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார், பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் ஆகஸ்ட் 04- ஆம் தேதி மாலை நடைபெற்ற விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் பேசியவர்கள்…
இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், “இந்தப்படத்தில் நடித்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.தொடரும் இந்த அனுபவம் படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் தொடர வேண்டும் என விரும்புகிறேன். படத்தின் வெற்றி விழாவில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்
நடன இயக்குநர் கலா பேசுகையில், ”நண்பர்கள் தின வாழ்த்து. தியாகராஜனுடன் ஏற்பட்ட நட்பு கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக நீடிக்கிறது. இந்த திரைப்படத்தில் பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன. கலை இயக்குநர் மிக நேர்த்தியாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார். பாடலுக்கான நடனக் காட்சிகளை எட்டு மணி நேரத்தில் நிறைவு செய்தோம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை சுடச்சுட வழங்கினார். அதாவது நான்கு மணிக்கு படப்பிடிப்பு என்றால்.. இரண்டு மணிக்கு பாடல்கள் எங்களை வந்தடையும். எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கின்றன.
” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார்
“அந்தகன் திரைப்படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். நானும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்திரைப்படம் ஆகஸ்டு ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகை பிரியா ஆனந்த், ”இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் இயக்குநர் தியாகராஜனைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் அவர்களது வீட்டில் இருவர் இருக்கிறார்கள். பிரீத்தி மற்றும் பிரசாந்தின் அம்மா. பிரசாந்தும் தியாகராஜனும் இப்படி இருப்பதற்கு அவர்கள் தான் காரணம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் நிச்சயமாக சந்திப்போம். இப்படம் விஷுவலாக பிரம்மாண்டமாக இருக்கிறது”.
நடிகை சிம்ரன் ”அந்தகன் படத்தின் கதை, திரைக்கதை நன்றாக இருக்கிறது. தியாகராஜனின் இயக்கத்தில் இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாத்துடன் நான் நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன்”.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், ”இறைவனுக்கு நன்றி. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
எப்போதும் பிரசாந்த்தை நினைத்துக் கொண்டே இருப்பேன். அப்போது திடீரென்று காரணமே இல்லாமல் அவர் எனக்கு போன் செய்து பேசுவார். நானும் அவரும் ஐயா என்று தான் பேசிக் கொள்வோம்.
எனக்கு தியாகராஜனை பார்த்தாலே பயம். எப்படி என்றால் நான் திரையரங்கத்தில் ஆப்பரேட்டராக பணியாற்றிய போது ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தை ஓட்டி இருக்கிறேன். ‘கொம்பேறி மூக்கன்’ படத்தை திரையில் பார்க்கும்போதே எனக்குள் பதட்டம் வந்து விடும்.
அவர் போனில் வணக்கம் என்று சொன்னவுடன், நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என சொல்லிட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நேரில் அவருடன் பழகும் போது தான் அவரின் பேரன்பினை உணர்ந்தேன்.
படப்பிடிப்பு தளத்தில் வனிதா விஜயகுமார் இதுவரை யாரும் என்னை திட்டிராத வகையில் கெட்ட வார்த்தையால் திட்டினார். அந்தக் காட்சியில் அவர் என்னை திட்டிக் கொண்டே இருந்தார். நான் இயக்குநரை பார்க்கிறேன். அவர் என்னிடம் வந்து நான் சொல்லியதை கடந்தும் அவர் திட்டிக் கொண்டிருக்கிறார் என விளக்கம் அளித்தார்.
அதன் பிறகு வனிதா விஜயகுமாரைப் பார்த்தபோது… இயக்குநர் தான் உங்களை இப்படி எல்லாம் திட்டச் சொன்னார் என தியாகராஜனை கை காட்டினார்.
இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாந்த் இந்த படத்திற்குப் பிறகு இன்னும் மும்மடங்கு வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ”இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம். உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம்.
இந்தப் படத்தில் ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். பிறகு மற்றொரு சஸ்பென்ஸ் வரும். இதையெல்லாம் கடந்து என்ன நடக்கிறது? என்ன ஆச்சு? இது உண்மையா? பொய்யா? என பல கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழும்.
‘அந்தகன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவே எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே ஆரோக்கியமான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நானூறு திரையரங்குகளில் ‘அந்தகன்’ திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம். இன்னும் கூடுதலாக வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பமுடன் இருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை என கருதுகிறேன்” என்றார்.
நடிகர் பிரசாந்த் பேசுகையில், ”அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
‘அந்தகன்’ அருமையான படைப்பு. – நான் ஒவ்வொரு நேர்காணலிலும் தவறாது குறிப்பிடும் விஷயம் ஒவ்வொரு படப்பிடிப்பின் போதும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வேன், கற்றுக் கொண்டே இருக்கிறேன் எனக் குறிப்பிடுவேன். அந்த வகையில் சமுத்திரக்கனி ஐயாவிடமிருந்து நடிப்பின் மீதான தொழில்முறையிலான பெரு விருப்பத்தை கற்றுக் கொண்டேன்.
நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. இந்த நண்பர்கள் தினத்தின் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என்னுடைய தந்தை தியாகராஜன். மிகச் சிறந்த மனிதர். தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜனுக்கும், எனது தங்கை பிரீத்தி தியாகராஜனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை வழங்கும், அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.