வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி! தடை விதிக்க ஆசிரியர் கழகம் வேண்டுகோள்!
“தமிழ்நாட்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் செயல்பட அனுமதி வழங்கக்கூடாது ” தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் பெரியதம்பி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் பெரியதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளின் தரம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் உயர்கல்வி அமைப்பையே பலவீனப்படுத்தும் வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நாட்டில் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் செயல்படுவதற்கும் வாய்ப்பளிப்பது கவலைக்குரியதாக உள்ளது
இந்தியாவில் கல்வி கற்றவர்களே இன்று உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும், பல்வேறு உயர் நிர்வாகப் பொறுப்புகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். உலகளவில் இந்தியர்களின் அறிவாற்றலும் தொழில்நுட்பத் திறனும் பாராட்டப்படும் நிலையில், நமது பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தையே குறைத்து மதிப்பிடுவது ஏன்?
நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதுமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், நவீன ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்துதல், நூலகங்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்குதல், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டை உறுதி செய்தல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய மத்திய மற்றும் மாநில அரசுகள், அதற்குப் பதிலாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நாட்டின் கல்வித் துறையின் கதவுகளைத் திறப்பது ஏன்?
“ஸ்வதேசி” என்றும் “மேக் இன் இந்தியா” என்றும் பெருமையாகப் பேசப்படும் நிலையில், “மேட் இன் இந்தியா” என்ற எண்ணத்தை கல்வித் துறையிலும் நடைமுறைப்படுத்த வேண்டாமா? நமது நாட்டின் அறிவு வளங்களையும், கல்வி நிறுவனங்களையும், திறமையான ஆசிரியர்களையும் வலுப்படுத்தாமல், வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பது எந்த வகையில் தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும்?
உலகின் முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் வகிக்கும் உயர் பதவிகளே, இந்தியக் கல்வி முறையில் திறமையை உருவாக்கும் ஆற்றல் இருப்பதற்கான மிகப்பெரிய சான்றாகும். குறைகள் இருப்பின் அவற்றைச் சரிசெய்வதே அரசின் கடமை; குறைகளைச் சுட்டிக்காட்டி உள்நாட்டு கல்வி அமைப்பை பலவீனப்படுத்துவது தீர்வாகாது.
இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு சமமான வாய்ப்பும் நிதி ஆதாரமும், உள்கட்டமைப்பும், ஆராய்ச்சி வசதிகளும் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், கல்வி என்பது அறிவைப் பகிரும் பொதுச் சேவையாக இல்லாமல், மிகப்பெரிய வணிக வாய்ப்பாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
ஒரு உண்மையான தேசபக்தர், இந்தியாவின் அறிவு வளங்களையும் கல்வி நிறுவனங்களையும் வலுப்படுத்துவதையே முதன்மையாகக் கருதுவார். நமது இளைஞர்களின் எதிர்காலத்தை வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான அரசியல் உறுதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளிப்படுத்த வேண்டும்.
இன்றைய Gen Z தலைமுறை அறிவையும் வாய்ப்புகளையும் உலகளவில் தேடும் தலைமுறையாகும். அவர்களுக்கு உலகத் தரமான கல்வி இந்தியாவிலேயே கிடைக்கச் செய்வதே அரசின் பொறுப்பு. இல்லையெனில், நாளைய தலைமுறை “நமது நாட்டில் உலகத் தரமான கல்வி நிறுவனங்களை ஏன் உருவாக்கவில்லை?” என்ற கேள்வியை எழுப்பும்.
இந்தியாவின் இளைஞர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கதவுகளை மட்டும் திறக்காமல், இந்தியப் பல்கலைக்கழகங்களின் கதவுகளை உலகத்திற்கே திறக்கும் வகையில் அவற்றை வலுப்படுத்துவோம். அதுவே உண்மையான தன்னிறைவு இந்தியாவிற்கான பாதையாகும்.
மத்திய மாநில அரசுகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்கும் முயற்சியை அனுமதிக்காது கைவிட்டு, அதை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்துகிறது. இந்த மத்திய மாநில அரசினுடைய மக்கள் விரோத முயற்சியை தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.