ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை: அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்!
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான
குளிரூட்டப்பட்ட ஓய்வறை:
அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் அரியலூர் கிளையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று திறந்து வைத்தார்.
பின்னர், போக்குவரத்து தொழிலாளர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அக் குறைகளைக் களைந்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் அமைச்சர் சிவசங்கர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், திருச்சி மண்டல பொது மேலாளர் எஸ்.சக்திவேல், பொது மேலாளர் (தொழில் நுட்பம்) கே.முகமது நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், அரியலூர் நகராட்சி மின்நகர் பூங்காவில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக மேம்பாட்டு திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இத்திட்டப் பணிகள் நிறைவடையும்போது அரியலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து சீரான அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார் அமைச்சர்.