இந்த வார அங்குசம் பிளாஸ்ட் (12.11.2026 – 18.11.2026)
சோனியாகாந்தி சுயசரிதையும் சர்ச்சைகளும் !
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர், சுயசரிதை நூலில் பாபர் மசூதி இடிப்பு, வாஜ்பாய் குறித்து உள்ளிட்டு சில திருத்தங்களை செய்யக் கோரிய நிலையில், அதனை சோனியா காந்தி மறுத்துவிட்டதன் காரணமாக பெங்குயின் ராண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் விலகியதையடுத்து, தற்போது ஹார்பர்காலின்ஸ் இந்தியா பதிப்பகம் நூலை வெளியிட்டிருக்கிறது.
வழக்கம் போலவே, சுயசரிதை என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. 19 வயதில் பிரிட்டனில் வைத்து ராஜீவ்காந்தியை காதலித்தது தொடங்கி, திருமணம்; தான் இத்தாலிக்கு விரட்டியடிக்கப்பட்டது; இந்திராகாந்தி படுகொலை அதனை தொடர்ந்து ராஜீவ்காந்தி பிரதமரானது; ராஜீவ்காந்தி படுகொலை அதனை தொடர்ந்து விருப்பமின்றி தான் அரசியலுக்குள் காலெடுத்து வைத்தது என பல்வேறு எக்ஸ்க்ளூசிவ் தகவல்களும் இடம்பெற்றிருக்கிறதாம். குறிப்பாக, பெங்குயின் ராண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் ஆட்சேபனை தெரிவித்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் வாஜ்பாய் குறித்த பதிவுகள் நிச்சயம் எதிர்பார்ப்புகளை எகிற செய்திருக்கின்றன.
ஆட்சிக்கவிழ்ப்பு நெருக்கடியா?
ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டு, கோட்டையில் ஒன்று கூடியிருக்கிறார்கள். தேசிய அளவில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு பெயர்போன தாமரை கட்சியின் ஷா-ஆனவரின் பார்முலாவை கையில் வைத்துக் கொண்டு சில பல முன்னெடுப்புகள் நடந்துகிட்டிருக்காம். இலை கட்சியும் சூரிய கட்சியும் ஒன்றிணைந்து, கதர் கட்சியின் ஆதரவோடு ஆட்சியை அமைக்க திட்டமாம். தாமரை கட்சியின் தலையசைவோடு, கதர் கட்சியின் எக்ஸ் தலைவர் செல்வமானவரை முன்வைத்தே காய்கள் நகர்த்தப்படுகிறதாம். இந்த பின்னணியில்தான் திடீர் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு என்றே கிசுகிசுக்கிறார்கள் கோட்டை தரப்பில்.
வாரண்ட்டே இல்லாமல் ரெய்டு ஏன்?
பணக்கார கடவுளின் பெயரை கொண்ட பிக்பாஸ் பிரபலம் வீட்டில் தீபாவளி நேரத்தில் வாரண்ட் எதுவும் இல்லாமல் 15-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) போலீசார் அதிரடி சோதனையை நடத்தியது சர்ச்சையாகியிருக்கிறது. தான் மருத்துவ சோதனைக்கு உட்பட தயார் என்று முன்வந்தபோதும், அதனை ஏற்காமல் ரெய்டு நடத்தியதன் நோக்கம் என்ன என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். போலீஸ் தரப்பில் ரகசிய புகார்; 15 பேர் எல்லாம் போகவில்லை என்றார்கள். அதற்கும் வீடியோ ஆதாரத்தை வெளியிட சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. புகாரும் இல்லாமல், முறையான வாரண்டும் இல்லாமல் அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற அதிரடிகள் ஆளும் அரசை நோக்கிய அம்புகளாக மாறியிருக்கின்றன.
மெத் கடத்தல் சர்வதேச கூட்டணி !
தாமரை கட்சியின் நிழல் தலைவரும் நாட்டின் போலீசு துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சருமான ஷா-ஆனவரின் தலைமையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். அப்படி ஒரு கும்பலை 526 கிலோ மெத்-உடன் இந்திய கடற்கரையோரம் மடக்கிப்பிடித்திருக்கிறது ஸ்பெஷல் டீம். சிக்கிய டீம் பாகிஸ்தானை சேர்ந்த 5 பேரை கை காட்ட அவர்களை மடக்கிப்பிடித்திருக்கிறது. அவர்கள் கக்கிய தகவல்கள் ஷாக் ரகம். சப்ளையே இந்தியாவிலிருந்துதான் போயிருக்கிறதாம். பிரதமர் முதல்வராக இருந்த மாநிலம்தான் இவர்களுக்கான மையமாம். ஆர்டர் போட்டது, நைஜீரிய கும்பலாம். சப்ளை செய்தது யார் என்ற கேள்வியின் தொடர்ச்சிதான் தமிழக கடலோர மாவட்டத்தில் நடந்த அந்த கைது என்கிறார்கள்.
கலெக்டருக்கு பறந்த எஸ்.எம்.எஸ்.! கண்டுக்காத மினிஸ்டர்ஸ்!
ஆளும்கட்சி ஆட்சிக்கு வந்து ஆறுமாதம் தாண்டுவதற்குள்ளாகவே அடுத்தடுத்து சர்ச்சைதான். இந்த ஆட்சியில் பெண் கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் அந்த எஸ்.எம்.எஸ். சர்ச்சையும் கூட இப்போ நடந்த விவகாரம் இல்லையாம். மூன்று மாசத்துக்கு முந்திய மேட்டராம். அப்போதே, இந்த விவகாரம் கூட்டணி கட்சி அமைச்சரின் கவனத்துக்கு போயிருக்கிறது. அடுத்து, ஆளும் கட்சியின் ஆனந்தமானவரின் நேரடி கவனத்துக்கு போயிருக்கிறது. அவரும் அழைத்து விசாரிக்க, நெடுஞ்சான்கிடையாக விழுந்து கப்சிப் ஆக்கிவிட்டு வந்தாராம். இதையெல்லாம் கண்டு வெகுண்ட ஐ.ஏ.எஸ். தம்பதியினர் நேரடியாக அதிகாரிகளின் தலைமையானவருக்கே புகார் அனுப்பியதற்குப் பிறகான ரியாக்ஷன்தான் இது என்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ். vs அமைச்சர்ஸ் !
அதிகாரிகளுக்கும் ஆளும்கட்சி அமைச்சர்களுக்கும் ஒரு நிழல் யுத்தமே நடந்துகிட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். கலெக்டரா இருக்கிறவங்களுக்கே மரியாதை இல்லை. எம்.எல்.ஏ. ஒருவரின் அத்துமீறலை சக மினிஸ்டர்கிட்ட சொல்லியும் எந்த ரெஸ்பான்சும் இல்லை. கலெக்டருக்கே இந்த நிலைமைனா எப்படி? என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடும்பத்தில் கொந்தளித்திருக்கிறார்களாம். கீழ்மட்டத்துல எம்.எல்.ஏ. கூட சர்ச்சைனா அமைச்சர் தலையிட்டு சரிபண்ணனும். அமைச்சரோட சர்ச்சைனா சி.எம். தலையிட்டு சரிபண்ணனும். ரெண்டுமே இல்லைனா, நம்ம பவரை காட்ட வேண்டியதுதான்னு டாக் ஓடிட்டு இருக்காம். ஆட்சிக்கே புதுசுங்கிறத மறந்து, அதிகாரிகளை பகைச்சுகிட்டா முதலுக்கே மோசமாகிடும்னு புரிஞ்சிக்காம ஆடுறாங்களேனு ஆளும் கட்சியின் ஆதரவு கட்சிகளே புலம்புறாங்களாம்.
பள்ளிக்கல்வித் துறையின் பவர்ஃபுல் அதிகாரி !
முத்துக்கு பெயர் போன மாவட்டத்தில், சர்ச்சைக்கு பெயர் போன கல்வித்துறை அதிகாரி ஒருவரின் அட்ராசிட்டியை கண்டு அதிர்ந்து கிடக்கிறதாம் ஆசிரியர் தரப்பு. ஊழல் குற்றச்சாட்டு தொடங்கி, பெண்களிடம் அத்துமீறுவதை வரையில் ஏகப்பட்ட வில்லங்கமான ஆசாமியாம். கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், ஆசிரியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தியும் கூட அந்த அதிகாரியை அசைக்க முடியவில்லையாம். மற்றவர்களையெல்லாம், 2 வருடத்தில் இடமாற்றம் செய்யும் அதிகாரிகள், இவரை மட்டும் 3 வருடமாக ஒரே இடத்தில் தொடர விட்ருக்காங்களாம். துறையின் எக்ஸ் அமைச்சரே பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையிலும்கூட, தனது மவுசு குறையாமல் வலம் வரும் அந்த அதிகாரி வட்டார அளவிலான கல்வி அதிகாரி என்பதுதான் ஹைலைட்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.