500 ரூவாக்கு 1 கோடி : மளிகைக் கடையில் மெகா வசூல் : அண்ணாச்சியின் அல்வா ஸ்கீம் !

நாங்கள் ஏமாந்த கதை : பாகம் – 04

ஊரில் உள்ள மோசடிக் கும்பல்களெல்லாம், தங்களது புதுவிதமான மோசடிகளை முதன்முதலாய் கோயம்புத்தூரில்தான் பரீட்சித்து பார்ப்பார்கள் போல.

பின்ன என்னங்க? வெறும் 500 ரூபாயை இன்று கொடுத்தால், 5 ஆண்டுகளின் நிறைவில், 1 கோடியாக திருப்பித்தருகிறேன் என்று ஒரு மளிகை அண்ணாச்சி சொன்னதை கேட்டு கூட்டம் குவிந்திருக்கிறது என்றால் என்னத்த சொல்ல? அதுவும் அண்ணாச்சி 1 கோடி என கிறுக்கி கையால் கிழித்துக் கொடுத்த துண்டுச்சீட்டை முதலீட்டுப் பத்திரம் போல பீரோவில் பத்திரப்படுத்திய நம்மூர் மக்களைத்தான் என்னவென்று சொல்வது?

டேவிட்சன் அண்ணாச்சி (எ) நடராஜன்
டேவிட்சன் அண்ணாச்சி (எ) நடராஜன்சாக்ரடீஸ்

இந்த நூதன மோசடி குறித்து, கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஜே.டி. சாக்ரடீஸ் தனது முகநூலில் பதிவிட்டதையடுத்து, கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்யாகுமரி அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த டேவிட்சன் அண்ணாச்சி (எ) நடராஜனை கைது செய்திருக்கிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இப்படி ஒரு வசூல்வேட்டை நடைபெற்றிருப்பதாகவும்; Easy Life International என்ற பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்ததாகவும்; ஒரு இலட்சம் கட்டினால் மாதம் 35,000 சம்பளம் தருவதாகவும்; இன்று 2000 ரூபாய்க்கு அண்ணாச்சியிடம் மளிகைப்பொருட்கள் வாங்கினால், 6 மாதம் கழித்து அந்த 2000 ரூபாயையும் அவர் திருப்பித் தந்துவிடுவதாகவும்; 2000 கட்டினால் தினமும் 1 கிலோ அரிசி என்பது உள்ளிட்டு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அண்ணாச்சி அவிழ்த்துவிட்டிருப்பதாகவும் விரிகிறது எஃப்.ஐ.ஆர்.

அண்ணாச்சியின் அல்வா ஸ்கீம் !ஆனால், Easy Life International என்றொரு நிதிநிறுவனத்தை அண்ணாச்சி மட்டுமே தொடங்கி நடத்தி ஏமாற்றி வந்தாரா?; இதில் யாருக்கெல்லாம் தொடர்பு? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருவதாக குறிப்பிடுகிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.

எதற்கும் இணையத்தில் துலாவித்தான் பார்ப்போமே என்று, Easy Life International என்ற பெயரை தட்டியதும் கொட்டிய தகவல்கள் நம்மை கிறுகிறுக்க வைத்துவிட்டது. உண்மையில், இந்த இணையதளத்திற்கும் டேவிட்சன் அண்ணாச்சிக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா? என்பதையெல்லாம் போலீசார்தான் விசாரணையில் முடிவு செய்தாக வேண்டும்.

ஆனால், அப்படி ஒரு பெயரில் இயங்கும் இணையதளத்தில் முதல் நாளில் 100 செலுத்தினால், 5-ஆம் நாளில் 1600 ஆகவும்; 10 ஆம் நாளில் 64,000 ஆகவும்; 15 ஆம் நாளில் 20 இலட்சமாகவும்; 20 ஆம் நாளில் 6 கோடியாகவும்; 35 ஆம் நாளில் 1 இலட்சம் கோடியாகவும் மாறிவிடும் என்பதாக கவர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். வெறும் 500 மட்டுமே முதலீடு. அடுத்து வெறும் 2 நபர்களை சேர்த்துவிட்டால் போதும் என்பது நிபந்தனை.

கராத்தே கண்ணதாசன் என்பவர் நாட்டுநடப்பு என்ற பெயரில் பத்திரிகையை நடத்தி வருவதாகவும்; அவரது தமிழ் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதம் 1 இலட்சம் தருவதாகவும்; தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் வீட்டுக்கு ஒரு பணம் அச்சடிக்கும் மெஷின் தருவதாகவும் அந்த இணையத்தில் பதிவான தகவல்களை படிக்க படிக்க தலைசுற்றல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகாத குறைதான்.

கராத்தே கண்ணதாசன்
கராத்தே கண்ணதாசன்

ஆனாலும், இப்படி மறை கழண்ட கேசுகளை நம்பி முதலீடு செய்ய ஒரு பெருங்கூட்டமே காத்திருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு. வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நின்றோ, ஆன்லைனில் ஒரே நொடியில் ஒரு கிளிக் செய்துவிட்டோ பணத்தை இழந்துவிட்டு பின்னர் போலீஸ் ஸடேஷனில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசாரையே குறை சொல்லும்; பிரிட்டிஷ்காரன் காலத்து சட்டப் புத்தகங்களிலிருந்தும்கூட குறிப்புகளை எடுத்து வந்து வாதாடும் இவர்களையெல்லாம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் என்று வகைப்படுத்த முடியுமா?

—  வே.தினகரன்

Comments are closed, but trackbacks and pingbacks are open.