தமிழக கலைக் கல்லூரிகளில் அரசாணையின் படி மாணவர் சேர்க்கை சரியாக நடைபெறுகிறதா ?
தமிழக கலைக் கல்லூரிகளில் அரசாணையின் படி மாணவர் சேர்க்கை சரியாக நடைபெறுகிறதா ? ஒற்றை சாளர சேர்க்கை முறையை அறிமுகப்படுத்தி தீர்வு காணுமா தமிழக அரசு?
கடந்த சில ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளை நாடி மாணவர்களும் பெற்றோர்களும் படையெடுத்த வேளையில் கலைக் கல்லூரிகள் பஞ்சமில்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. இந்நிலையில் தலைகீழ் மாற்றம் பெற்று, கலைக் கல்லூரிகளை நோக்கி மாணவர்களும் பெற்றோர்களும் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் கலைக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.
அதுவும் மாணவர்களும் பெற்றோர்களும் நினைக்கும் கல்லூரிகள் கிடைப்பது அரிதினும் அரிதாய் உள்ளன. அரசு கல்லூரி, அரசு உதவிபெறும் கல்லூரி, சுயநிதிப் பாடப்பிரிவுகள், சுயநிதிக் கல்லூரிகள் இவற்றில் மாணவர் சேர்க்கை எப்படி நடக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையைக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்த அரசாணையின்படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றதா என்பதையே இக் கட்டுரை ஆராய்கின்றது.
பொதுவாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கொடுப்பது +2 தேர்வு முடிவு வெளிவருவதற்கு 5 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2018-19-க்கான கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை பல கல்லூரிகள் 2018 ஏப்ரல் 15 தேதியே தொடங்கி விடுகின்றன. ஆன்-லைனில் விண்ணப்பங்கள் விற்பனை செய்ய தமிழக அரசாணையில் இதுவரை அனுமதி இல்லாத நிலையில் பல கல்லூரிகள் ஆன்-லைன் விண்ணப்ப விற்பனையை தொடங்கி விடுகின்றன.
விண்ணப்பப்படிவம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50/-க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இனத்தவருக்குச் சாதி சான்றிதழின் நகல் அடிப்படையில் விண்ணப்பப்படிவம் இலவசமாக வழங்கவேண்டும் என்ற அரசாணையின் விதி காற்றில் பறக்கவிடப்பட்டு, விண்ணப்பங்கள் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ரூ.100 என்றும் சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு பாடத்திற்கு ஒவ்வொரு விலையிலும் அதாவது ரூ.500 ரூபாயிலிருந்து ரூ.1,000-ம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பல கல்லூரிகளின் அறிவிப்பு பலகையிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச விண்ணப்பம் என்ற அறிவிப்பு வைக்கப்படவில்லை. விவரம் தெரியாத தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விலை கொடுத்து விண்ணப்பங்களை வாங்கினார்கள். விவரம் சொல்லிக் கேட்டபோது மறுக்கமுடியாது கொடுத்த கல்லூரிகளும் உண்டு. அரசாணையைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது காசு கொடுத்துத்தான் எங்கள் கல்லூரியில் வாங்கவேண்டும் என்று விற்பனை அலுவலகத்தில் கண்டிப்பாய்ச் சொன்ன கல்லூரிகளும் உண்டு.
கடந்த மே மாதம் 16ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் 10.00 மணிக்கு வெளிவந்தன. திருச்சியில் உள்ள பல கல்லூரிகளில் 10.30-க்கு மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. தேசிய அளவில் தரவரிசையில் இடம் பிடித்த கல்லூரி +2 தேர்வு முடிவு வெளிவந்த 16ஆம் தேதியே அனைத்துப் பாடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நிரப்பிவிட்டது.
150 ஆண்டுகளைக் கடந்த கல்லூரி 17ஆம் தேதி மாணவர் சேர்க்கையைத் தொடங்கி 2 நாளில் முடித்த வரலாறுகளும் உண்டு.
பெண்கள் கல்லூரி ஒன்றில் “1,000 மார்க் உள்ளவங்க வாங்க… அடுத்து 900 மார்க் உள்ளவங்க வாங்க… 800 மார்க் உள்ளவங்க வாங்க… 800க்கு குறைச்சலா உள்ளவங்களுக்கு, இங்கே இடம் கிடையாது. வேற கல்லூரிக்குப் போங்க…” என்று அடித்து விரட்டிய காட்சிகளும் அரங்கேறின.
அரசாணை சொல்கிறது…
+2 முடிவுகள் வெளிவந்து 10 வேலைநாள்கள் கழித்து விண்ணப்பம் பெறக் கடைசி நாள் என்றும் அதன் பின்னர் 3 நாள் கழித்து மாணவர் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும், தரவரிசைப் பட்டியல் வெளியிட்ட 3 நாள் கழித்து மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும். தர வரிசையை மாணவர் சேர்க்கைக்கான முதல்வர் அடங்கிய 4 பேர் கொண்ட குழு தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.
தேர்வு முடிவுகள் வெளிவந்த முதல் நாளே மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது என்றால் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள எதையும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் கவனத்தில் கொள்ளாமல் தங்களின் மனம்போன போக்கில் மாணவர் சேர்க்கையை நடத்தியிருக்கின்றன என்பது தெளிவாகின்றது.
சுயநிதி கல்லூரிகளில் விண்ணப்பம் கொடுக்கச் சென்றால், மாணவர்களைக் கோழிக்குஞ்சைப் பிடிப்பதுபோல அமுக்கி, நீங்க கேட்கிற பாடத்தை நாங்கள் தருகிறோம். இப்பவே சேர்ந்துகொள்ளுங்கள். 30,000 பணத்தை இப்பவே கட்டுங்க. அவ்வளவு பணம் இல்லையே என்று மாணவர்களிடம் பதில் வந்தால், இருப்பதை இப்ப கட்டுங்க… மிச்சத்த நாளைக்குக் கட்டுங்க… என்று எரிகின்ற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்ற பழமொழி போல் நடந்து கொள்ளும் கல்லூரிகளும் உண்டு.
2 நாள்கள் கழித்து விண்ணப்பம் வாங்க வந்த மாணவர்கள், விண்ணப்பங்களைக் கொடுக்க வந்த மாணவர்கள், மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது என்ற கல்லூரியின் அறிவிப்பு பலகையைப் பார்த்து அலறிப்போனார்கள். அந்த கல்லூரியின் அலுவலகத்துக்குச் சென்று நாங்க அரியலூர் தாண்டி வரோம், பெரம்பலூர் தாண்டி வரோம்… நாங்க புதுக்கோட்டை தாண்டி வரோம் என்ற அழுது புலம்பிய மாணவர்களிடம்,“வரலாறு, பொருளாதாரம், தமிழ் பாடங்களில் சேர்ந்துகொள்வதாக இருந்தால் சேர்ந்துகொள்ளுங்கள். உடனே பணத்தைக் கட்டணும்” என்று அறிவுறுத்திய கல்லூரி காட்சிகளும் உண்டு.
‘‘விடிஞ்ச கல்யாணம், கட்டுடா தாலியை’’ என்று சொல்லும் அவசரகதியாக இந்தக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் கடந்த ஆண்டைவிட இருமடங்கு தொகை எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கு அந்தப் பகுதி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அனுமதி வழங்கியுள்ளரா? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையே உள்ளது. மாணவர்களிடம் சேர்க்கைக்காக வாங்கிய பணத்திற்கு குறைவான தொகைக்கே ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன என்ற தகவலும் உள்ளன.
இந்த அவசரகதி மாணவர் சேர்க்கையில் எப்படி இந்தக் கல்லூரிகள் இனவாரி சுழற்சி முறையைப் பின்பற்றமுடியும் என்பதை ஆராயத் தொடங்கினால் தலைச்சுற்றத் தொடங்கிவிடுகின்றது.
அரசாணையின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்றதாக எல்லா ஆவணங்களையும் தயார் செய்துவிடுவார்கள். தமிழ், வரலாறு, பொருளாதாரம் போன்ற கலைப் படிப்புகளில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை மொத்த மாணவர் எண்ணிக்கையோடு கலந்து 18 விழுக்காடு 31 விழுக்காடு, 20 விழுக்காடு கொடுக்கப்பட்டுவிட்டது என்று கணக்கைச் சரி செய்துவிடுவார்கள்.
மேலும், விண்ணப்பத்திற்கு அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அரசாணை வலியுறுத்துகின்றது. இனவாரி சுழற்சியில் மாணவர்கள் போதுமான அளவில் இல்லையென்றால் காலதாமதமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு விதி இருப்பதை எத்தனைக் கல்லூரிகள் கவனத்தில் கொண்டிருக்கும் என்றால் ஒரு கல்லூரி கூடக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
அரசுக் கல்லூரி தவிர்த்து, அரசு உதவிபெறும் கல்லூரிகள், சிறுபான்மை நலஉரிமை பெற்ற கல்லூரிகள், சுயநிதிப் பாடப்பிரிவு, சுயநிதி கல்லூரிகளில் இத்தனை விழுக்காடுதான் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பட்டியல் வெளியிட்டுள்ளது.
எந்தக் கல்லூரியும் இந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தியிருக்க வாய்ப்பே இல்லை. மாணவர் தரவரிசைப் பட்டியல், காத்திருப்போர் பட்டியல் என்று வெளியிட்டால்தானே அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை என்பதை அறிந்துகொள்ள முடியும். தரவரிசை எதுவும் வெளியிடாமல் இருக்கும்போது பெற்றோர் மாணவர் எப்படி இதுபோன்ற செய்திகளை அறிந்து கொள்ளமுடியும்?
எல்லாவற்றிக்கும் மேலாக ஒவ்வொரு இனவாரி சுழற்சியிலும் 100க்கு 5 மாணவர்கள் மாற்றுத் திறனாளிகள் இருக்கவேண்டும் என்று அரசாணை வற்புறுத்துகின்றது.
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சுயநிதி கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாகக் கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பே அதிகம் என்ற உண்மை நம் நெஞ்சைச் சுட்டாலும், கல்லூரிகளுக்குக் காசு பார்க்கவே நேரமில்லாத சூழலில் இதைக் கவனத்தில் கொள்ள எங்கே நேரம் இருக்கப்போகிறது? என்பதை இதயம் உள்ளவர்களால் அவ்வளவு எளிதில் கடந்து செல்லமுடியாது.
அறிவுக் கண்ணைத் திறக்கின்றோம் என்று பணிசெய்யும் கல்வி நிறுவனங்கள் தங்களின் கண்களைக் கருப்புத்துணி கொண்டு இறுக மூடிக்கொண்டிருப்பது முரண்களின் உச்சம் என்றால் மிகையில்லை.
மாணவர் சேர்க்கையின் இவ்வளவு குளறுபடிகளையும் மாணவர், பெற்றோர் முறையாக எங்கும் முறையிடுவது கிடையாது.
அப்படியே மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களுக்குப் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதற்குள் பருவத் தேர்வுகள் வந்துவிடும். அரசுக்கு முறையீடு செய்தாலும் அதை மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி விசாரணை நடத்தப் பணிக்கப்படுவார்கள். இணை இயக்குநர் அலுவலகங்கள் கல்லூரிகளுக்குச் சென்று முறையாக விசாரணையை நடத்துவார்கள்.
அரசுக்கு அனுப்பப்படும் இறுதி அறிக்கையில், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளின்படியே மாணவர் சேர்க்கை நடைபெற்றது என்று அறிக்கை வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே அமைந்துள்ளது. கல்லூரிகளுக்கும் இணை இயக்குநர் அலுவலகங்களுக்கும் அப்படியொரு பிரிக்கமுடியாதப் பாசவலையால் பின்னப்பட்டுள்ளன.
அரசாணையை மீறிக் கல்லூரிகளில் நடைபெறும் அதிரடி மாணவர் சேர்க்கைக்குத் தீர்வே கிடையாதா? என்றால் ‘‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது’’ என்னும் பட்டுக்கோட்டையின் வாய்மொழியைப் போல் கல்லூரிகள் திருந்தவேண்டும் அல்லது தங்களின் எண்ணங்களை மாற்றி கொள்ளவேண்டும்.
கல்வி வணிகமயமாகிவிட்ட சூழலில் இவை சாத்தியமில்லை என்றாலும் ஒரு சாத்தியப்பாட்டை நாம் முன்வைக்கிறோம். அது என்னவெனில், பொறியியல் கல்லூரிகளுக்கு மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கைக்கு Single Window system என்னும் ஒற்றைச்சாளர முறை பின்பற்றப்படுவதுபோல இணைவு பெற்ற கலைக் கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழக அளவில் ஒற்றைச்சாளர முறையைத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை அறிவிக்கவேண்டும்.
இதனால் தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்விப்பெற பெரும் வாய்ப்பாக அமையும். மேலும் தமிழக அரசு அரசாணை எண் 92-ன் மூலம், தாழ்த்தப்பட்ட மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உயர்கல்வி வாய்ப்பு கிடைத்து மாணவர் சேர்க்கையின்போது எந்தத் தொகையும் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்தவேண்டிய தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி தாழ்த்தப்பட்ட, மதம் மாறிய கிறிஸ்தவர்களின் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. ஒற்றை சாளர முறையில் இதுபோன்ற முறைகேடுகள் களையப்படும் வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை எதிர்வரும் கல்வியாண்டில் (2019-20) ஒற்றை சாளர முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதே கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
அரசு ஆணையின்படி மாணவர்கள் சேர்க்கை
எப்படி நடைபெற வேண்டும் என்பதை
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்…