அங்குசம் பார்வையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’
கேரளத்தின் அங்கமாலி பகுதியில் நண்பர்களின் துணையுடன் கேட்டரிங் தொழில் நடத்துகிறார் ஜஸ்டின் [நிவின் பாலி]. அம்மாவும் அப்பாவும் இவருக்கு உதவியாக இருக்கிறார்கள். இவரது தம்பி ஜோயல் [சங்கீத் பிரதாப்] ஷாட் பிலிம் டைரக்டர். சில பிரச்சனைகளால் சொந்த ஊரில் சொத்துகளை விற்றுவிட்டு, அங்கமாலியில் ஜஸ்டின் வீட்டுக்கு எதிரே இருக்கும் வீட்டுக்கு குடி வருகிறது ஆஷ்லி[மமிதா பைஜு]குடும்பம். ஆரம்பத்தில் ஜன்னல் வழியே எதேச்சையாக ஜஸ்டினைப் பார்க்கும் ஆஷ்லி, பிறகு அவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். தனக்கும் ஆஷ்லிக்கும் 12 வயது வித்தியாசம் என்பதாலும் இது ஊருக்க்குத் தெரிந்தால் மானக்கேடாகிவிடும் என்பதாலும் ஆஷ்லியை காதலிக்க மறுக்கிறார் ஜஸ்டின். ஆனாலும் தனது காதலில் உறுதியாக இருக்கிறார் ஆஷ்லி. ஜஸ்டின் ஆஷ்லியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? இதான் இந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.
கேரளத்தின் கிறிஸ்தவக் குடும்பங்களில் இருக்கும் பல பிரிவுகளில் ஒன்று தான் பெத்லகேம் குடும்பம். சினிமாவுக்காக குடும்ப யூனிட்டாக்கியிருக்கிறார்கள்.
ரொம்ப சிம்பிளான கதை தான். அதை மலையாள சினிமாவுக்குரிய அழகான திரைக்கதையால் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் கிரிஷ் ஏ.டி. இந்தக் காட்சிகளை தங்களது மிக இயல்பான நடிப்பால் மேலும் மேலும் சிறப்பாக்கிக் கொண்டே போகிறார்கள் நிவின் பாலியும் மமிதா பைஜுவும்.
ஆரம்பத்தில் மமிதா பைஜுவின் காதலை நிராகரித்தாலும், மெல்ல மெல்ல அவரின் காதலுக்குள் விழுவதை அவ்வளவு நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிறார் நிவின் பாலி. காரில் நிவினும் மமிதாவும் பேசிக் கொண்டே போகும் அந்த சீன் அற்புதமான காதல் கவிதை. அந்த சீனில் இருவருக்கும் டைட் குளோசப் வைத்து கவிதைக்கு ரசனையைக் கூட்டுகிறார் கேமராமேன் அஜ்மல் சாபு. க்ளைமாக்ஸில் சங்கீத் பிரதாப்பின் கல்யாணத்தில் டைனிங் டேபிளில் குடும்பமே உட்காந்திருக்கும் போது நிவினும் மமிதாவும் எதிரெதிரே உட்கார்ந்து பேசும் சீன் நம் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்கிறது.
நிவினின் தம்பியாக வரும் சங்கீத் பிரதாப் ஷாட் பிலிம் எடுப்பது, சரக்கடிக்கும் போது நிவினை சகட்டுமேனிக்கு லந்து பண்ணும் அவரின் கூட்டாளிகள், சரக்குக்கு ‘அடிக்ட்’ஆன மமிதாவின் அப்பா தங்கச்சனாக வரும் நடிகர் என எல்லோருமே அவர்களின் காமெடி வசனங்களால் தியேட்டரையே கலகலப்பாக்குகிறார்கள். அதே போல் மமிதாவும் அவரது தோழிகளும் சரக்கடித்துவிட்டு அலம்பல் பண்ணும் சீன் செம காமெடி கலாட்டா. நிவினின் அத்தை கன்னியாஸ்த்ரியாக வரும் அந்த நடிகையின் உருவமும் நடிப்பும் அவ்வளவு அற்புதம்.
“இது இந்து வீட்டுக் கல்யாணமா? கிறிஸ்டியன் வீட்டுக் கல்யாணமா?” டயலாக் உட்பட சில சீன்களில் டைரக்டரின் ‘டச்’ தெரிகிறது. அதே போல் கிறிஸ்தவத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளையும் விட்டுவைக்கவில்லை கிரிஷ் ஏ.டி.
திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை, குபீர் குபீர் ட்விஸ்டுகள் இல்லை, சத்தம் இல்லை, ரத்தம் இல்லை. இப்படி பல இம்சைகள் இல்லாமல் வந்திருக்கும் இதமான குடும்பப் படம் தான் இந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.
அங்குசம் பார்வையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ 50/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.