அங்குசம் பார்வையில் ‘பைக்கர்’
தயாரிப்பு: ‘ யூவி கிரியேஷன்ஸ் ‘ வம்சி கிருஷ்ணா ரெட்டி & பிரமோத் உப்பலபட்டி. டைரக்டர்: அபிலாஷ் ரெட்டி, ஆர்டிஸ்ட்: ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி, புரொடக்சன் டிசைனர்: ராஜீவன், ஒளிப்பதிவு: யுவராஜ், இசை: ஜிப்ரான், எடிட்டிங்: அனில்குமார் பலசா, ஸ்டண்ட் டைரக்டர்: திலீப் சுப்பராயன், பிஆர்ஓ : யுவராஜ்
மிகப்பெரிய பைக் ரேஸர் சுனில் நாராயணன் ( டாக்டர் ராஜசேகர்) தனது மகன் விகாஸுக்கும் ( ஷர்வானந்த் ) பைக் ரேஸ் மீது ஆர்வம் உள்ளதால் உலக அளவில் பெரிய பைக் ரேஸராக்க வேண்டும் என அவனுக்கு இளம் வயதிலேயே பயிற்சி கொடுக்கிறார். உள்ளூரில் விகாஸின் பைக் ரேஸ் சாகசத்தைப் பார்த்து அவன் மீது லவ்வாகிறார் மாளவிகா நாயர். கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமாகிறார். அதன் பிறகு அப்பா சுனிலுக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையாகிறார். இதனால் சிறிது காலம் பைக் ரேஸ் பயிற்சியை தவிர்க்கிறார். மகனை உலக சேம்பியன் ஆக்க வேண்டும் என்ற சுனிலின் கனவு நிறைவேறியதா? இதான் ‘ பைக் ரேஸர்’.

இந்திய சினிமாவுல இதுவரை நாம் பார்த்திராத பைக் ரேஸ் ஜானரில் அசாத்திய உழைப்பைக் கொட்டி அசத்தியிருக்கிறார் டைரக்டர் அபிலாஷ் ரெட்டி. வெவ்வேறு விதமான பைக் ரேஸ் ட்ராக்கிற்காக இந்தியாவின் எந்தப் பகுதியில் லொக்கேஷனை செலக்ட் பண்ணினாரோ? அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு அலைந்து திரிந்தாரோ? மேலும் பைக் ரேஸ் ட்ராக் வடிவமைப்பு, ரேஸ் பைக்குகளை வடிவமைக்கும் டெக்னாலஜி இதையெல்லாம் கைதேர்ந்த வல்லுநர்கள், பைக் ரேஸ் சாகச வீரர்கள் இவர்களின் துணையுடன் திரையில் கொண்டுவர, அபிலாஷ் ரெட்டி பட்ட கஷ்டங்களை நினைத்தாலே நமக்கு மெய் சிலிர்க்கிறது. சபாஷ்…. வெல்டன் அபிலாஷ் ரெட்டி. வெறும் பைக் ரேஸை மட்டுமே காண்பித்தால் டாக்குமெண்டரி ஆகிவிடும் என்பதை கணக்குப் போட்டு அப்பா – மகன் பாசம், லட்சியம், உறவில் சிறு விரிசல், மாளவிகா நாயருடன் ஷர்வானந்த் லவ் & ஃபேமிலி அட்டாச்மெண்ட், மகன் மீது வைத்துள்ள அதிக பாசம் என பக்கா எண்டெர்டெய்ன்மெண்ட்டையும் ஸ்கிரிப்ட்டில் கொண்டு வந்து நம்மை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார் அபிலாஷ் ரெட்டி.
ஷர்வானந்தின் அப்பா சுனில் நாராயணனாக தெலுங்கு சீனியர் நடிகர் டாக்டர் ராஜசேகர் செம கம்பீரம். பயிற்சியில் கடுமை, கண்டிப்பு காட்டினாலும் மகனை உலக சேம்பியன் ஆக்க வேண்டும் என்ற உத்வேகம் உள்ளுக்குள் இருப்பதையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி அனுபவ நடிகர் என்பதை நிரூபித்து விட்டார் டாக்டர் ராஜசேகர். அதேபோல் பைக் ரேஸ் வீரராக ஷர்வானந்தும் ” சூப்பர் ப்ரோ” போட வைக்கிறார். நிஜமான பைக் ரேஸ் வீரர்கள் அவருக்கு டூப் போட்டிருந்தாலும் கடுமையான பயிற்சி எடுக்கும் சீன்களிலும் அப்பாவுடன் செல்லமாக கோவித்து வீட்டைவிட்டு வெளியேறும் சீனிலும் ஜெர்மனியில் நடக்கும் உலக சேம்பியன் போட்டியில் வெற்றி பெற்று ராஜசேகரை பெருமைப்படுத்தும் சீனிலும் ஷர்வானந்துக்கு சபாஷ் போடலாம். இந்த மாதிரி சினிமாக்களில் ஹீரோயின்களுக்கு நடிப்பதற்கு சான்ஸே கொடுக்கமாட்டாய்ங்க. ஆனால் மாளவிகா நாயர் நடிக்க சான்ஸ் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.
கர்ப்பமாக இருக்கும் போது ஷர்வானந்த் ரேஸில் கலந்து கொள்வதை டிவியில் பார்த்து படபடப்பாவது, குழந்தை பிறந்ததும் ஷர்வானந்த் தோள் மீது சாய்ந்து கண்ணீர்விடுவது இதிலெல்லாம் மாளவிகா நாயர் டபுள் ஓகே. இவர்களுக்கு அடுத்து நாம் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள் பைக் ரேஸ் சாகச வீரர்கள் தான். அதிலும் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் பைக்கை படு ஸ்பீடாக ஓட்டிய அந்த மாவீரனுக்கும் க்ளைமாக்ஸில் சேறு, சகதி, குறுகலான வளைவுகள் கொண்ட ஜெர்மன் ட்ராக்கில் சாகசம் புரிந்த மாவீரர்களுக்கும் ரெட் சல்யூட். மயிர்க்கூச்செரியும் இந்தக் காட்சிகளை யெல்லாம் படம் பிடித்த கேமராமேன் யுவராஜும் ஒரு சாகச வீரன் தான்.
நமது ஜிப்ரானின் பேக் ரவுண்ட் ஸ்கோரில் பைக் ரேஸ் சீன்கள் இன்னும் ஸ்பீடாக தெரிகிறது. பொதுவாக தெலுங்கு படங்களை தமிழில் டப் பண்ணும் போது ரொம்பவும் சிரத்தை எடுக்க மாட்டார்கள். ஆனால் இதில் தமிழில் பெயர் ப்பலகைகள், ( மிகவும் கவனிக்கபடவேண்டியது: சுவற்றில் நான்கு அடியில் தலைவர் கலைஞரின் நடுவகிடு ஓவியம்) படத்தின் உணர்வையும் உத்வேகத்தையும் நம் மனசுக்குள் கடத்தும் தமிழ் வசனங்களை மிகவும் சிறப்பாக, அருமையாக எழுதிய வசனகர்த்தாவுக்கும் படக்குழுவுக்கும் நன்றி. இதற்கு சின்ன உதாரணம், “கண்டிப்பாக நமக்கு பயம் இருக்கணும்டா. பயம் தான் தோற்பதற்கு காரணம். ஜெயிப்பதற்கான ஆயுதம்” ஷர்வானந்திடம் டாக்டர் ராஜசேகர் பேசும் இந்த வசனம். தமிழனே… நீ வாழ்க வளமுடன். மொத்தத்தில் இந்த ‘பைக்கர்’ சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ்.
அங்குசம் பார்வையில் ‘பைக்கர்’ 60/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.