முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை நடத்திவரும் பா.ஜ.க தலைவா்கள் !
குடியுரிமை திருத்தச்சட்டத்தில் தொடங்கி வக்பு சட்டத்திருத்த மசோதா என அடுக்கடுக்கான பிரச்சனைகளை உருவாக்கும் பாசிச சக்திகள். காசி, மதுரா, உ.பி. சம்பல் மஸ்ஜித், அஜ்மீர் தர்கா என முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களை கைப்பற்ற சதி.
ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை விடுத்தள்ளார்.
திருச்சி, காசி, மதுரா, உ.பி. சம்பல் மஸ்ஜித், அஜ்மீர் தர்கா என முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களை கைப்பற்ற நினைக்கும் பாசிச சக்திகளின் சதித்திட்டத்தை முறியடிக்க இந்தியா முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் 01.12.2025 ஞாயிற்றுகிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது
வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுகிறது ! – இப்படி ஒரு பழமொழி தமிழகத்தில் வழங்கி வருகிறது. வேதாளம் என்றால் பேய், பூதம், முனி என்பார்கள். முருங்கை மரத்தில் எது ஏறினாலும் சரசரவென ஒடிந்து விழுந்து விடும் ! ஆனால் இந்தப் பேய், பிசாசு, முனி, பூதம் எதுவும் முருங்கையில் ஏறினால் மரம் முறியாது ! ஆனால் அது மரத்தில் குந்தி, தான் செய்ய வேண்டிய அனைத்து குதர்க்கங்களையும் – குழப்பங்களையும் – கொடுமைகளையும் பிறர் அறியாதவாறு செய்து தீவினையை விளைவிக்கும்.
இந்த உதாரணம், தேசத்தில் பாரதீய ஜனதா கட்சியினரும், அவர்களின் ஆட்சியாளர்களும், ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் அமர்ந்து கொண்டு தாம் நினைக்கும் அனைத்து அதிமிதிகளையும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி
நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 135 கூட்டங்களில் கலந்து கொண்டார். அவற்றில் 110 கூட்டங்களில் இந்திய முஸ்லிம் சிறுபான்மையினரை இழுத்தும், தீண்டியும், தூண்டியும், தாக்கியும், இல்லாதது சொல்லாதது சொல்லி வசைபாடியும் உரை நிகழ்த்தினார் என ஆய்வே நடத்தியிருக்கிறார்கள்.
சிறுபான்மையினரை விரோதித்து பேசிவரும் உள்துறை அமித்ஷா
இந்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள் பேசிய கூட்டங்களில் எல்லாம் சிறுபான்மை முஸ்லிம்களை விரோதித்தே பேசி வந்திருக்கிறார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் இவ்வாறு ஒரு சார்பின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்வதால், அது மாநிலங்களிலும் அவ்வப்போது எதிரொலிக்கிறது. உத்திர பிரதேசம், உத்தராகண்டு, அஸ்ஸாம் போன்ற மாநில முதலமைச்சர்கள் தங்களின் பேச்சுக்கள் அனைத்துமே வெறுப்பு அரசியலாகத் தெரியும்படியே சிறுபான்மையினர் வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச்சட்டம் – வக்பு சட்டத்திருத்த மசோதா
குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்து கொந்தளிப்பை ஏற்படுத்தினர். வக்பு திருத்தச் சட்ட மசோதா மூலம் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக கிராம மக்களைத் தூண்டி விடும் ஆகிலாயத்தைச் செய்து வருகின்றனர்.
மதரஸா கல்விக்கூடங்கள்
இவற்றுடன் தங்களின் வெறுப்பு அரசியலை நிறுத்தவில்லை. நாட்டில் உள்ள பிரசித்தமான காசி, மதுரா மஸ்ஜிதுகள் பற்றிய அவதூறுகளைப் பரப்பினர். மஸ்ஜித் வளாகங்களில் நடத்தப்படும் மதரஸா கல்விக் கூடங்களை இழுத்து மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்தனர். உச்சநீதிமன்றம் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது.
ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹால் – இந்து கோயில் எனக் கூறி பிரச்சாரம் துவக்கினர்.
தற்போது அஜ்மீர் காஜா முயுனுத்தீன் சிஷ்தி தர்கா அனைத்து சமுதாயத்தவரும் ஆன்மீக நலம் நாடி, தேடி, பண்பாடி, கூட்டங் கூட்டமாக ஓடிவந்து சேரும் உள்ளம் கவர்ந்த தியானக் கூடம்! சூஃபி ஞானி தர்கா இல்லை ; அது சிவன் கோயிலாக இருந்தது எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் துன்பச் செய்தியும் நாட்டில் நடந்திருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தில் ஐநூறு வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகை நடத்தி வரும் சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிது ஒரு கோயிலாக இருந்தது அதைத் தோண்டி ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. சிவில் நீதிமன்றம், ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிது நிர்வாகக் குழுவை விசாரிக்கமாலும், அவர்களுக்கு தெரியாமலும், மஸ்ஜிதை தோண்டி ஆய்வு செய்வதற்கு ஒரு சார்பான உத்தரவு பிறப்பித்தது. அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மஸ்ஜிது வளாகத்தை அடைத்து, தோண்டும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.
அப்பகுதி முஸ்லிம்கள் இந்த அநியாயத்திற்கு ஒரு விடிவே கிடையாதா ? என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டாவது முறையாக மஸ்ஜிது வளாகத்தைத் தோண்டத் துணிந்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த முஸ்லிம்கள் மஸ்ஜிது வளாகத்தைத் தோண்டுவதைத் தடுத்து நிறுத்திடக் கூட்டமாகச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொடூரம் நிகழ்ந்தது. ஆறு பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். மஸ்ஜித் கமிட்டி நேரடியாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அவசர விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 29-11-2024 இல் இடைக்காலத் தீர்ப்பு ஒன்று தரப்பட்டிருக்கிறது.
சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிது தோண்டுவதற்கும் தடை: சிவில் நீதிமன்றம் எடுத்திருக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் தற்காலிகத் தடை 2025 ஜனவரி 8 ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று 29-11-2024 வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.
சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிதை தோண்டுவதையும், அதனை ஒட்டி ஏற்பட்ட கலவரம் பற்றியும், சமுதாய மக்கள் படுகின்ற அவதிகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு நடத்தப் போன நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்
இ.டி. முஹம்மது பஷீர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பி.வி.அப்துல் வஹாப், அப்துஸ்ஸமத் சமதானி, கே. நவாஸ் கனி, வழக்கறிஞர் ஹாரிஸ் பிரான் ஆகியோர் சென்றனர். அவர்களை சம்பல் நகருக்கு நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். ஜனநாயக நாட்டில் நடக்கும் ஜனநாயக முரண்பாடு இது!
இந்த ஜனநாயக விரோதச் செயலை நாடாளுமன்ற மேலவை இ. யூ மு. லீக் எம் பி., ஹாரீஸ் மீரான் அவர்கள் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெயிட்டிருக்கிறார். இ. யூ. மு. லீக் இளைஞர் அணியினர் இத்தகைய ஜனநாயகப் படுபாதகங்களைக் கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறிவிப்புச் செய்திருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சம்பல் நகரில் நடந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து சேலத்திலும், தஞ்சாவூரிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் 29-11-2025 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் சர்வ கட்சிகளையும் ஒன்று சேர்த்து பாண்டிச்சேரி இ யூ மு. லீக் மிகப் பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 29-11-2024 இல் நடத்தி இருக்கிறது.
நாட்டில் நடக்கும் கொடுமைகளை இனியும் பொறுத்துப் பார்த்துக் கொண்டிருக்க முஸ்லிம் சமுதாயத்தால் முடியாது என்பது வெளிப்பட்டு விட்டது ! பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது மாறி, இப்போது பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் ! என்று கூறும் காலமாகிவிட்டது ! .
இந்த ஜனநாயக விரோதத்தைக் கண்டித்து விரைவில் எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியாக வேண்டும் !
அஜ்மீர் தர்காவுக்கு ஆபத்தா ?
சம்பல் ஷாஹி ஜும் ஆ மஸ்ஜித்துக்கு பாதிப்பா ?
தாஜ் மஹாலுக்கு தடையா ?
மணிப்பூரில் நடக்கும் கோரத் தாண்டவம் மாநிலங்கள் தோறும் நடத்திடத் திட்டமா ?
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
சிந்திப்போம் ! சீரமைப்போம் !
பாசிச சக்திகளை முறியடிக்க
இந்தியத்துவம் ஏற்றிப் போற்றுவோம் !
இவ்வாறு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
தேசிய தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்