“பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – சொல்கிறார் விஜய் பட பெண் தயாரிப்பாளர்!
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மே.18- ஆம் தேதி மதியம் நடைபெற்றது.
‘பிளாஸ்ட்’ படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு :அருண் ராதாகிருஷ்ணன், இசை:ரவி பஸ்ரூர், கலை இயக்கம்: வீரமணி கணேசன், பிஆர்ஓ: நிகில் முருகன். இந்தப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.
*இயக்குநர் சுபாஷ் கே ராஜ்*
”என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.
இந்தப் படத்தை முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன்.
‘பிளாஸ்ட்’ ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”.
*இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்* “தமிழ்த் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழுப் படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் பல சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்”.
*பிரீத்தி முகுந்தன்*
” பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.

ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு நன்றி”.
*அபிராமி*
“பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள்.
நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கும் அவருடைய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது”.

*கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி* ‘
‘ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.
இது பெண்களை உலக அளவில் பெருமைப் படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதைப் போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி. அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது.

இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை அவர் சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.
இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.
இந்தப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்திருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்”.
*அர்ஜுன்*
“பிளாஸ்ட் படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போது தான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

ஏஜிஎஸ் நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அபிராமி நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ப்ரீத்தி முகுந்தன் படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடனக் கலைஞர். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன்”. *–ஆண்டவர்*









Comments are closed, but trackbacks and pingbacks are open.