மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி சார்பதிவாளர் கண்மணி என்பவர் மீது பத்திரப்பதிவுகளுக்கு கையூட்டு பெறுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாக கூறி அவர்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக புறநகர் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர், குறிப்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சார் பதிவாளர் கண்மணிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
செல்லம்பட்டி சார்பதிவாளர் கண்மணி பத்திரப்பதிவுகளுக்கு கையூட்டு வாங்குவதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட பதிவாளர், மாவட்ட ஆட்சியர், பதிவுத்துறை தலைவர், பதிவுத்துறை துணைத்தலைவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பல்வேறு கட்டங்களில் மனுக்கள் அளிக்கப்பட்டதாக பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பாமகவினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர். மேலும் சார்பதிவாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாவட்டத்தலைவர் ராஜாராம் மாவட்ட துணைச்செயலாளர் பாக்கியநாதன் ஒன்றிய செயலாளர் தெய்வம்பிரசாத், கொள்கை பரப்பு செயலாளர் குமார், வழக்கறிஞர் அஜித்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாமக புறநகர் மாவட்டச்செயலாளர் முருகன் கூறுகையில் ..
செல்லம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக கண்மணி கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருவதாகவும் அவர்மீது அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் பாமக புறநகர் மாவட்டச் செயலாளர் முருகன் தெரிவித்தார்.
குறிப்பாக பதிவு செய்யக்கூடாத சில பத்திரங்களை பதிவு செய்வதற்காக குறிப்பிட்ட தொகை லஞ்சமாக பெறப்படுவதாகவும் லேஅவுட் அனுமதி உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளிலும் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் இருப்பதாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக பாமக சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். சார்பதிவாளர் மீதான புகார் தொடர்பாக மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் டிஐஜி மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகளிடமும் ஆதாரங்களுடன் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும். தமிழக முதலமைச்சரின் புகார் தொடர்பான வழிமுறைகளிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பத்திரப்பதிவுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய வருவாய் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தாலே முறைகேடுகள் தொடர்பான உண்மை நிலவரம் தெரியவரும் என்றும்கூறினார். எனவே, சார்பதிவாளர் கண்மணி மீது உடனடியாக விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையின்படி சென்னையில் கோட்டை நோக்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக பாமக புறநகர் மாவட்டச் செயலாளர் முருகன் தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.