சரிவர மூடப்படாத பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியதால் டெப்போவிலிருந்து எந்த பேருந்தும் வெளியே செல்ல முடியாத அவலம் !
சரிவர மூடப்படாத பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியதால் டெப்போவிலிருந்து எந்த பேருந்தும் வெளியே செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் கண்டோண்ட்மெண்ட் பகுதியில் அரசு போக்குவரத்து கழக டெப்போ, மற்றும் பிரபல ஓட்டல்கள்,தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது.
அந்த வகையில் டெப்போ மெயின் கேட் முன்புறமும் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு திரும்ப மூடப்பட்டது.
ஆனால் பள்ளத்தை பெயரளவுக்கு மூடிவிட்டு சென்று விட்டனர்.
மாலை 6.20 மணியளவில் திருச்சியில் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் கண்டோன்மென்ட் டெப்போவில் இருந்து வெளியூர் செல்வதற்காக அரசு பேருந்து டி.என் .45 என். 42 04 புறப்பட்டது.
டெப்போ மெயின் கேட் ஸ்பீடு பிரேக்கர் தாண்டி சாலைக்கு இந்த பேருந்து திரும்ப முற்பட்டபோது குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு பெயரளவு மூடப்பட்டிருந்த பள்ளத்தில் மாட்டிக் கொண்டது .
டெப்போ மெயின் கேட்டுக்கும் சாலைக்கும் குறுக்காக இந்த பேருந்து மாட்டிக்கொண்டதால் இந்த சாலையில் எந்த வாகனமும் போக முடியாத நிலை ஏற்பட்டது.
இதை அடுத்து போக்குவரத்து கழக தொழில்நுட்ப பணியாளர்கள் விரைந்து கிரேன் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பேருந்தை மீட்டனர்.
இதைக்கண்ட பொதுமக்கள் ,இந்தப் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக டெப்போக்கள் இரண்டு இயங்குகின்றன. 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இந்த சாலையில் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது தவிர நான்கு சக்கர வாகனங்களும் அதிக அளவில் இந்த சாலை வழியே செல்கின்றன.
அப்படி இருக்கும் போது சாலையில் குழி தோண்டி குழாய் பதித்தவர்கள் அந்த குழியை முறையாக மூடாமல் பெயரளவுக்கு மூடி சென்றது வேதனையானது.
அமைச்சர்கள் வருவதற்காக அவசரம் அவசரமாக புத்தம் புது சாலை போடும் துறையினர் போக்குவரத்துக் கழக டெப்போ பகுதியில் அதுவும் வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதியில் சாலை பள்ளங்களை எவ்வாறு மூட வேண்டும் என்று தெரியாமலேயே பெயரளவுக்கு செய்தது கண்டிக்க வேண்டிய விஷயம் என்றனர்.
இந்தப் பேருந்து டெப்போவின் மெயின் கேட்டுக்கும் சாலைக்கும் இடையே சிக்கிக் கொண்டு ஒரு மணி நேரம் வரை ஆனதால் டெப்போ உள்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த எந்த பேருந்தையும் வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல டீசல் பிடிப்பதற்காக வந்த மற்ற பேருந்துகள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
– அரியலூர் சட்டநாதன்