சென்னை செம்மொழிப் பூங்காவில் ஊரும் உணவும் திருவிழா!
வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்போம், தேசம் கடந்தவர்கள் நேசம் பொங்க பரிமாறும் உணவின் சுவையை ரசிக்க மட்டுமல்ல; அவர்களின் வலி மிகுந்த வாழ்வியலை கண்டுணரும் ஒர் நல்வாய்ப்புக்காகவும்!
சென்னை செம்மொழிப் பூங்காவில் ஊரும் உணவும் திருவிழா!
சென்னை செம்மொழிப் பூங்காவில் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவிருக்கிறது. சீசனுக்காக நடத்தப்படும் வழக்கமான உணவுத் திருவிழாக்களுள் ஒன்றல்ல இது. முற்றிலும், தனித்துவமான ஒன்று. இந்த திருவிழாவில் பரிமாறப்போகும் உணவு வகைகளுக்காக மட்டுமல்ல, இந்த தனிச்சிறப்பு.
இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் என புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் சங்கமம் இந்த உணவுத் திருவிழா. ஐ.நா.வின் அகதிகளுக்கான உயராணையம் முன்னெடுப்பில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்கள் துவக்கி வைக்கவிருக்கிறார்.
புலம் பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் வாழும் உறவுகளின் வாழ்நிலையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட, “இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு” பல்வேறு முன்னெடுப்புகளை ஓசையின்றி கடந்த ஈராண்டுகளாக செய்துவருகிறது. தமிழக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை தலைவராகவும், கலாநிதி வீராசாமி எம்.பி. அவர்கள் துணைத் தலைவராகவும் அமையப்பெற்றுள்ள இக்குழுவில், மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின், கல்வியாளர்கள் கே.எம்.பாரிவேலன், ஈ.ரா.இளம் பரிதி, அரசமைப்பு சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் அங்கம் வகித்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்தோருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வேலை வாய்ப்பு முகாம்கள், சுயஉதவிக் குழுக்கள், கல்வி உதவித் தொகை, சமையல் எரிவாயு, மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்குவது என புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசிக்கும் அவர்களும் தமிழகத்தின் ஓரங்கமாக மரியாதையுடனும் உரிமைகளுடனும் நடத்தப்பட வேண்டுமென்ற நோக்கில் … உத்திரவாதமான வாழ்க்கைத் தரத்தை உருவாக்குவதற்குமான பணியை அக்குழு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இக்குழுவின் சீரிய முன்னெடுப்புகளுள் ஒன்று இந்த உணவுத் திருவிழா.
வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்போம், தேசம் கடந்தவர்கள் நேசம் பொங்க பரிமாறும் உணவின் சுவையை ரசிக்க மட்டுமல்ல; அவர்களின் வலி மிகுந்த வாழ்வியலை கண்டுணரும் ஒர் நல்வாய்ப்புக்காகவும்!
– இளங்கதிர்