கல்லூரி ஆசிரியர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல….
கல்லூரி ஆசிரியர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல….
கலங்கரை விளக்கங்கள்
பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி பொதுவாகப் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் 70ஆயிரமும், 10 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் 1 இலட்சமும், 20 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் 1.60 இலட்சமும், 25 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் 1.75 இலட்சமும், 30 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் 2 இலட்சமும் ஊதியமாகப் பெறுகிறார்கள். இது மிகை ஊதியம் என்று எண்ணிட வேண்டாம். இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகக் மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்குப் பரிந்துரைகளின்படி வழங்கப்படும் ஊதியமாகும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி+இதரபடிகள் போன்றவை மாநிலக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சுமார் 30,000 மாநில ஆசிரியர்கள் மத்திய அரசின் ஆசிரியர்களை விட குறைவாகவே பெற்றுவருகிறார்கள்.
இந்திய விடுதலைக்குப் பின் வழங்கப்பட்ட மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும். இந்த ஊதிய உயர்வினால் அரசு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கல்லூரி நிர்வாகங்கள் மிகவும் மோசமாக நடத்தத் தொடங்கிவிட்டதன் அறிகுறிகள் மாநிலங்கள் எங்கும் தென்படத் தொடங்கிவிட்டன. முதலில் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வோம்.
அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் வழங்கிடும். அரசு உதவிபெறும் கல்லூரி (Government Aied Colleges) ஆசிரியர்களுக்கு அரசு நேரடியாக வழங்காமல் மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் (Regional Joint Director) அலுவலகம் மூலம் அரசு உதவிபெறும் கல்லூரி நிர்வாகங்கள் அனுப்பி வைக்கும் ஊதியபட்டியல் சரிபார்த்து பின்னர் கல்லூரிச் செயலர்களின் கையொப்பம் பெறப்பட்டு, மாவட்டக் கருவூலம் மூலம் வங்கிக் கணக்கின் வழியாக ஊதியம் வழங்கப்படும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஊதியமாக ஒரு பைசா கூட வழங்குவதில்லை.
இந்த ஊதிய உயர்வு அரசு உதவிபெறும் கல்லூரி நிர்வாகங்களின் பண்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது உண்மையே. இதன் தொடர்ச்சியாக அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 12 தற்செயல் விடுப்பு (CL) வழங்கப்படுகின்றது. இந்த விடுப்பை எடுக்க விண்ணப்பம் செய்தல், விடுப்பெடுக்கும் ஆசிரியரின் அந்நாளைய வகுப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு விண்ணப்பம் கொடுக்கவேண்டும் என்று துறைத் தலைவர்கள் வாய்மொழி ஆணை பிறப்பிக்கிறார்கள். ஒருவர் விடுப்பெடுத்தால் அவருக்கான பாடவேளைகளை மற்ற ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொடுப்பதும், பகிர முடியாத நிலையில் மாணவர்களை நூலகத்திற்குச் செல்லக் கட்டளையிடவேண்டிய பொறுப்பைத் துறைத் தலைவர்கள்தான் செய்யவேண்டும். அதனால் மற்ற ஆசிரியர்கள் 16 மணிநேரம் 18 மணி நேரம் வகுப்பெடுக்கும்போது துறைத்தலைவர்களுக்கு 12 மணிநேரம் வகுப்பெடுக்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றது. துறைத்தலைவர்கள் தங்களின் பொறுப்பைத் தட்டி கழித்துவிட்டு, மற்ற ஆசிரியர்கள் விடுப்பெடுக்கும் ஆசிரியரின் வகுப்பெடுக்கும் நேரத்தைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்றால் அவரின் விடுப்பு விண்ணப்பத்தில் துறைத் தலைவர் கையெழுத்திட மறுப்பார்.
இந்தப் பிரச்னையைக் கல்லூரி முதல்வர்களிடம் கொண்டு சென்றால் முதல்வர்கள் துறைத்தலைவர்களின் பக்கமே நின்று பேசுவார்கள். துறைத்தலைவர்கள் இப்போது கல்லூரி நிர்வாகத்தின் கங்காணிகளாக மாறிவருகிறார்கள். கங்காணிகள் இலங்கையின் மலையகத் தோட்டங்களிலும், மலேசியாவின் பால்மர காடுகளிலும்தான் இருப்பார்கள். இப்போது படித்து, பட்டம் பெற்று கல்லூரிகளிலும் இருக்கிறார்கள் என்பது வேதனையான செய்தியாகும்.
அடுத்து RH எனப்படும் எல்லா மதப் பண்டிகைகளுக்கும் வரையறுக்கப்பட்ட விடுமுறையாக 3 நாள்கள் அரசாணையின்படி வழங்கப்படுகின்றது. ஆசிரியர்கள் இந்த விடுப்பைப் பயன்படுத்த நினைத்தால், நீ இந்துதானே எதற்காக இஸ்லாமியப் பண்டிகைக்கு விடுப்பு? நீ கிறித்தவர் ஆயிற்றே எதற்கு இந்து பண்டிகைக்கு விடுப்பு? என்று விடுப்பு விண்ணப்பங்களை முதல்வர்கள் நிராகரிக்கும் கொடுமை இப்போது தலைகாட்டத் தொடங்கியுள்ளது. ஜெயலலிதாவின்(2001 – 2006) ஆட்சியில் வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை அந்தந்த மதத்தினர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. 2006 – 2011 ஆண்டுகளில் ஆட்சி செய்த கலைஞர் 3 நாள் விடுப்பை எந்த மதத்தினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. மேலும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2 நாள்களாக இருந்து விடுமுறை கலைஞர் ஆட்சிக் காலத்தில் 3 நாள்களாக உயர்த்தப்பட்டது. இதையெல்லாம் அறிந்தும் முதல்வர்கள் 3 நாளை விடுப்புக்குப் பயன்படுத்தினால் 2 நாள்தான் வரையறுக்கப்பட்ட விடுமுறை என்று சொல்லி விடுப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் உடல்நலக்குறைவு என்று மருத்துவ விடுப்பு எடுத்தால், விடுப்பு காலத்திற்குப் பாடம் நடத்துவதற்கு ஒருவரைப் பதிலியாக நியமிக்கவேண்டும். அவர் மணிநேரப்படி சுயநிதிப் பிரிவில் பணியாற்றுபவராக இருப்பார். சுமார் 15 நாள் விடுப்பு என்றால் பதிலியாக பணியாற்றுவோருக்குச் சுமார் ரூ.5000ம் மருத்துவ விடுப்பு எடுப்பவர் வழங்கவேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் கடந்த காலங்களில் இருந்தாலும் அதில் கடுமைகாட்டப்படவில்லை. தற்போது கல்லூரி நிர்வாகம் கண்கொத்தி பாம்பாக இருந்து கடுமைகாட்டுகின்றது.
ஒரு பருவத்திற்கு 90நாள்கள் கல்லூரிகள் பணியாற்றிட வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்கம் விதி வகுத்துள்ளது. இதன்படி அரசு கல்லூரிகள் 90நாள்கள் மட்டுமே இயங்குகின்றன. எல்லாச் சனிக்கிழமையும் விடுமுறை விடுகின்றன. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஒரு பருவத்திற்கு 110 நாள்கள் வேலைநாள்கள் உள்ளன. ஏறத்தாழ எல்லாச் சனிக்கிழமைகளும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைநாளாக உள்ளன. சில கல்லூரிகள் Non-Instructional Work day என்ற புதிய முறையில் ஆசிரியர் வருவார், கற்பித்தல் பணியைச் செய்யமாட்டார். கல்லூரிக்குத் தேசியத் தர மதிப்பீட்டு குழு (NAAC) போன்ற குழுக்கள் வந்தால் அதற்கான தரவுகளைத் திரட்ட வேண்டும். திரட்டிய தரவுகளைக் கணினியில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று ஆலையிலிட்ட கரும்பாக ஆசிரியர்கள் பிழியப்படுகிறார்கள்.
ஒரு சில கல்லூரிகளில் நிர்வாகத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள செயலர்கள் “கல்லூரியே பாதி நாள்தான் காலையில் 8.30 மணிக்குத் தொடங்கிப் பகல் 1.30 மணிக்கு முடிந்துவிடுகின்றது. உடனே ஆசிரியர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்கள். பிற்பகல் 3.30 மணி வரை இருந்து ஆசிரியர் தொடர்பான பல பணிகளில் ஈடுபடலாமே” என்ற அறிவுரைகளும் இப்போது செயலர்களின் மூளையில் உதிக்கத் தொடங்கியுள்ளன. கல்லூரி அரைநாளில், ஒருநாளில் நடக்கவேண்டிய 5 பாடவேளைகள் நடைபெறுகின்றன. கல்லூரியை அரைநாள் வைப்பதற்கு ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் சங்கங்கள் காரணம் அல்ல. எல்லாம் கல்லூரி நிர்வாகம் எடுத்த முடிவு. எஞ்சியுள்ள அரைநாளில் சுயநிதிப் பாடப்பிரிவுகள் நடைபெறுகின்றன.
சுயநிதிப் பாடப்பிரிவுகள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான தொகைக்கும் நிதிஉதவிப் பெறும் ஆசிரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
ஆசிரியர்களின் பாடம் கற்பிக்கும் ஒருநாள் பாடவேளையும் வாரத்திற்கான (6நாள்) பாடவேளைகளைக் கல்லூரிக் கல்வி இயக்கம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவுறுத்தலின்படி பல்கலைக்கழகங்களும் முடிவு செய்கின்றன. தமிழ் மொழி பாடத்திற்கு 6 மணி நேரம் கற்பித்தல் நேரமாக ஒதுக்கியுள்ளது. சில கல்லூரிகள் 4 மணிநேரம் மட்டுமே கற்பித்தல் பணிக்கான நேரமாக ஒதுக்கியுள்ளது. ஆங்கில மொழிப் பாடத்திற்கு 6 மணிநேரம் என்பதற்குப் பதிலாக 5 மணிநேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. முதுகலைப் பாடங்கள் ஒரு மணிநேரம் நடத்தினால் ஒன்னரை மணிநேரம் என்று கணக்கிடப்படும். கல்லூரிக் கல்வி இயக்கத்தின் எந்த உத்தரவும் இல்லாமல் 1 மணி நேரமாகச் சில கல்லூரிகளில் குறைக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகள் குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இதனால் ஆசிரியர் எண்ணிக்கை குறையும். ஆசிரியர்களுக்கான பணிச்சுமை அதிகரிக்கும். ஆள் குறைப்பு செய்து வருவாயை எப்படி மிச்சப்படுத்துவது என்று அரசு காத்திருக்கும் வேளையில் அரசு உதவிபெறும் கல்விநிறுவனங்கள் இதற்கு வழிகாட்டும் வகையில் செயல்படுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்?
ஆசிரியர்களின் ஊதியம் உயர்ந்திருக்கிறது. அதுபோலவே செலவுகளும் உயர்ந்திருக்கின்றன என்ற பேரூண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் ஆண்டுக்கு 12 மாதச் சம்பளத்தில் ஏறத்தாழ 2 மாத ஊதியம் வருமான வரியாகச் செலுத்தப்படுகின்றது. அரசு உதவிபெறும் கல்லூரி நிர்வாகங்கள், சுயநிதி ஆசிரியர்கள் நம்மைப் பார்த்து வணங்குகிறான், பயப்படுகிறான், இந்த உதவிபெறும் ஆசிரியர் அப்படி இல்லையே என்ற காரணமும் இந்த ஒடுக்குமுறைக்கு ஒரு காரணமாக உள்ளது என்பதும் வெளிப்படையான உண்மை. எல்லா ஆசிரியர்களும் கல்லூரி நிர்வாகத்தினர்க்கு வணக்கம் செலுத்துகிறார்கள். ஆசிரியர்கள் அஞ்சவேண்டும், பயப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்பது புரியவில்லை. நோபல் பரிசு பெற்ற வங்கத்துக் கவிஞர் தாகூர் தான் எழுதிய கீதாஞ்சலியில், “எங்கே மனம் அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ, அங்கே அறிவு விடுதலை பெறாது. எங்கே விடுதலை உணர்வு இருக்கின்றதோ அங்கே அறிவு வளரும், ஒளிவிடும்” என்று குறிப்பிடுகின்றார்.
காவல்துறையில் 8 மணிநேரம் பணிநேரம். ஆனால் ஒவ்வொரு காவலரும் குறைந்தது 12 மணிநேரம் வேலைபார்க்கிறார்கள். காவல்துறையில் வேலை பார்க்க வேண்டியது, வீட்டிற்கு வந்து உறங்க வேண்டியது. உறங்கி விழித்து வேலைக்குப் போகவேண்டியது என்ற சுழற்சி முறையால் காவலர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுப் பணியாற்றும் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. விடுமுறை கொடுக்கவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போவதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஆசிரியர்களின் மனநிலையும் இவ்வாறாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் எல்லாச் சனிக்கிழமை வேலைநாள். 20 நாள் வேலை நாள் அதிகமாக உள்ளது. அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் ஏறத்தாழ ஆசிரியர்களின் சித்திரவதைக் கூடங்களாக மாறிவரும் சூழலை உணரமுடிகின்றது. இது உடனே தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு வேலைபெற்றுத்தரும் தொழிற்சாலைகள் அல்ல. ஆசிரியர்களும் நல்ல மாணவர்களை உருவாக்கும் தொழிற்சாலையில் பணியாற்றவில்லை. அறிவு இது என்பதைச் சுட்டிக்காட்டி மாணவர்களின் மனங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளை மட்டுமே செய்யமுடியும்.
மாணவனும் ஆசிரியரின் அறிவார்ந்த செய்திகளை எடுத்துக்கொண்டு உயரவேண்டும். உயர மறுத்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை பாய்கிறது. மாணவர்கள் பருவத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு மெமோ என்னும் குறிப்பாணை வழங்கப்படுகின்றது. அதில் “அடுத்த கல்வியாண்டில் தங்களின் கற்பித்தல் திறன் உயரவேண்டும். இல்லையெனில் தங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்ற மிரட்டலும் அச்சுறுத்தலும் தொனிக்கிறது. ஒரு வகுப்பில் 10 பேர் தேர்ச்சி பெறவில்லை என்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிற அதே வேளையில் 40 தேர்ச்சி பெற்றிருக்கிறார்களே என்ற புள்ளிவிவரங்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்ற சோகமான செய்தியும் உள்ளன.
பணிகளில் புனிதப் பணி ஆசிரியர் பணி. அதில் ஒன்றிரண்டு களைகள் இருக்கலாம் என்பது விதிவிலக்காகக் கொள்ளவேண்டும். கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மதிக்கப்படும் சமுதாயம்தான் முன்னேற்றத்தை அடையும். ஆசிரியர்கள் மதிக்கப்படாத சமுதாயம் வாழாது… என்னும் முதுமொழியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் புரிந்துகொண்டு ஆசிரியர்களைக் கண்ணியத்துடன் நடத்த முன்வரவேண்டும். அப்போதுதான் ஆசிரியர் கடமையை உணர்ந்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார்கள். கல்வி வாளாகச் சூழலில் வளம்கொள்ளும். எந்த ஆசிரியர்களை ஒடுக்க நினைக்கிறார்களோ… அந்த ஆசிரியர்களால்தான் அந்தக் கல்லூரி வளர்ச்சிப்பெறுகிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, ஆசிரியர்களோடு கைகோர்த்துக்கொண்டு உதவிபெறும் கல்லூரிகள் கல்வி பணி செய்தால் மாணவர்களின் அறிவுத்திறன் மேலோங்கும். ஆசிரியர்களைப் பலவீனப்படுத்தி, மனஉளைச்சலுக்கு ஆளாக்கிக், கல்வியில் எந்தச் சாதனையும் எந்தக் கல்வி நிறுவனமும் செய்திட முடியாது. ஆசிரியர்கள் கிள்ளுக்கீரைகளும் அல்ல…… கொத்தடிமைகளும் அல்ல…. கலங்கி நிற்கும் மாணவர்களுக்கு ஒளியூட்டும் கலங்கரை விளக்கங்கள்.
-ஆசைத்தம்பி