சாம்பவான் ஓடை சிவராமன்- 14

சமகால வரலாற்றுத் தொடர்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

கள்ளுக்கடையில் கள் குடிப்பதற்காக நூறு பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள். பருந்தைக் கண்டு பதுங்கும் கோழிக் குஞ்சைப் போலக் கூட்டத்தில் ஒளிந்து இருந்தவன் முடியைப் பிடித்து வெளியே இழுத்து வருகின்றான். கீரிப்பிள்ளையைக் கண்ட நல்ல பாம்பைப் போலச் சோமுவின் சர்வநாடியும் ஒடுங்கிவிட்டது.

கள்ளுக்கடையில் நின்றவர்கள் ஏதோ கனவு காண்பதைப் போல பிரமைப் பிடித்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சிவராமன் சோமுவின் தலைமுடியை அப்படியே சேர்த்துப் பிடித்து இழுத்து வருகிறான். யாரும் அருகில் வரவே இல்லை.
முதலில் மூக்கணாங்கயிறு இல்லாத காளையைப் போலச் சோமு துள்ளினான். இப்போது சண்டி மாடு முன்னால் இழுக்கும் போது பின்னால் இழுப்பதைப் போல அவன் பிடியில் இருந்து விலகிக் கொள்ள எவ்வளவோ முயற்சி செய்கிறான், முடியவில்லை.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஞானசேகரன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இடத்திற்குச் சிறிது தூரத்திலேயே சோமு கீழே விழுந்து விடுகிறான். சிவராமன் விடவில்லை. பரபரவென்று போட்டு இழுத்து வருகிறான்.
சிவராமன் ஞானசேகரனின் முகத்தைப் பார்க்கிறான். அணையப் போகும் ஒளியைப் போலப் பிரகாசமாக இருக்கிறது.
சீக்கு வந்த கோழியின் உயிர் கீழ்த்தாடையிலும் காலிலும் துடிப்பதைப் போல ஞானசேகரனின் உயிர் போகலாமா, இன்னும் சிறிது நேரத்தில் போகலாமா என்றிருந்தது.
சிவராமன் சோமுவின் முகத்தைப் பார்க்கிறான். சர்வ நாடியும் ஒடுங்கி ஏற்கனவே உயிர் போனவன் முகம் போல இருந்தது. அப்படியே இழுத்து ஒரு சுற்று சுற்றி மல்லாக்கப் போடுகிறான். சிவராமன் முகத்தில் தெரிந்த கொலை வெறியைக் கண்டு சோமு பச்சைப் பிள்ளை பயந்து அலறுவதைப் போல அலறுகிறான். சிறுநீரும் கழித்து விட்டான் என்பது காற்சட்டையில் தெரிந்தது. சோமுவின் பேச்சுக் காட்டுப்பூனையின் வாயில் மாட்டிக்கொண்ட சேவலின் குரலைப் போன்று இருந்தது.

 

“அண்ணே.. என்ன விட்டுடுங்க. தெரியாம செஞ்சுட்டேன்.”
“நீ…நீயா தெரியாம செஞ்சே, பொ.. பொட்டக்காக்க எட்டிக்கொத்துனது மாரி எ… என்னோட கூட்டாளிய குத்திட்டே இல்லை?”
சிவராமன் சொல்லிக்கொண்டே சோமுவின் நெஞ்சில் வலது காலை எடுத்து வைத்து அழுத்துகிறான். மீண்டும் சோமு அலறுகிறான்.
“அண்ணே… அண்ணே….”
ஞானசேகரன் முதுகில் பாய்ந்திருந்த பிச்சுவாய்க்கத்தியை அசைத்து வெளியே எடுத்தான். உடம்பு நெளிந்தது. முகம் சோமுவைப் பார்த்தது. கண்கள் அகலமாக விரிந்து இருந்தன.

 

3

சோமுவின் மார்பில் இருந்த வலது காலைத் தரையில் வைத்து இரண்டு பக்கமும் காலைப்போட்டு அவன் வயிற்றில் சிவராமன் உட்கார்ந்து கொள்கிறான். பிச்சுவாய்க் கத்தியை ஓங்கினான். சோமு அலறுகிறான்.
“அண்ணே…”
சொல்லி வாய் மூடவில்லை. முதல் குத்து சோமுவின் மார்பில் விழுந்தது. அதைப் பார்த்தவுடன் ஞானசேகரனின் உடல் அசைவது தெரிந்தது.
“எ… எந்தம்பியயாடா குத்துனே…? எ… என்னோட கூட்டாளியயாடா குத்துனே.”
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே மார்பிலும் கழுத்திலும் முகத்திலும் குத்திக் குத்திக் கத்தியை வெளியே இழுக்கிறான்.
குத்த குத்த இரத்தம் ஊற்றைப் போலப் பீறிட்டுச் சிவராமன் உடல் முழுவதையும் சேறாக்கி விட்டது, உயிரும் போய்விட்டது. ஞானசேகரன் உடல் அசைவும் நின்றுவிட்டது.

 

வேண்டிய மட்டும் கொலை வெறி தீரச் சோமுவின் உடம்பில் குத்திவிட்டுக் களைப்போடு பக்கத்தில் உட்கார்ந்து இரண்டு பிணங்களின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறான். இரண்டிலும் பரிதாபமே மிஞ்சி இருக்கிறது.
கூட்டம் கிட்டே வரவே இல்லை. தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டே நிற்கிறது. ‘சின்ன நாய் குலைத்துப் பெரிய நாய் தலையில் வைத்துவிட்டது’ என்பார்கள். ஆனால் இப்போது பெரிய நாய்கள் குரைத்து சின்ன நாய்கள் தலையில் வைத்து விட்டன.
சற்று முன்னால் தான் பிணைத்துக் கட்டிய காளைப் போல் இருவரும் நடந்தார்கள். ஞானசேகரன் பக்கத்து வீட்டோடு நடந்த சண்டையைப் பற்றி விவரமாகக் கூறிக் கொண்டு வந்தான். நாட்டுச் சண்டையை விட வீட்டுச் சண்டையின் பயங்கரத்தைச் சிவராமனும் கேட்டுக்கொண்டே வந்தான். இருவரும் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். உலகச் சண்டை கூட ஓய்வு எடுத்துக் கொள்ளும். பக்கத்து வீட்டுச் சண்டைக்கும் மாமியார் மருமகள் சண்டைக்கும் ஓய்வே இல்லை என்று எண்ணிக் கொண்டே நடந்தான்.

 

4

நடந்தது போகட்டும். சமாதானமாகப் பேசுவோம் என்று சொல்லி ஞானசேகரனை அங்கேயே நிற்கச் சொல்லி விட்டுச் சிவராமன் பக்கத்திலுள்ள கொல்லையைப் பார்க்கச் சென்றான். கொல்லையைப் பார்த்துவிட்டு ஆற்றில் கால் கழுவி வருவதற்குள் இந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. இவனும் கூட்டாளிக்காகச் சோமுவைக் கொலை செய்து விட்டான். சொத்து மனிதனை எப்படியெல்லாம் பாடாய் படுத்துகின்றது என்று எண்ணிப் பார்த்தான்.
ஞானசேகரன் அகம்படியத்தேவர் இனத்தைச் சார்ந்தவன். வீட்டில் ஒன்றும் வசதி இல்லை. அவர்களுடைய சொந்தக்காரர் அமிர்தலிங்கத்தேவர் கடை வைத்து இருந்தார். நிறைய சொத்துக்கள் இருந்தன. பிள்ளையே இல்லை. எச்சில் கையால் காக்காய் ஓட்டமாட்டார். சொத்தும் அப்படிச் சேர்ந்தது.

சொத்தைப் பிற்காலத்தில் பாதுகாக்கவும் செத்தால் கொள்ளி வைக்கவும் பிள்ளை வேண்டும் என்று ஞானசேகரனைச் சுவீகாரம் எடுத்துக் கொண்டார்.
அவன்தானே பிற்காலத்தில் சொத்துக்கு வாரிசு என்று நினைக்க மாட்டார். அவனைக் கல்லாவிலும் உட்கார வைக்க மாட்டார். ஈ, காக்கை தொடாமல் சொத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார்.
ஞானசேகரன் சிவராமனோடு நெருங்கிப்பழகிய பிறகு காரணம் சொல்லமுடியாத அன்பைப் பொழிந்தான். ‘ஒங்கக் கூட்டப் புட்டாக்கூடப் புட முடியாது போல இருக்கே’ என்று சுந்தரராசும் சுப்பிரமணியனும் அடிக்கடி கிண்டல் செய்வார்கள்.
அமிர்தலிங்கத் தேவர் வீட்டிற்குப் பக்கத்தில் அம்பலகார இனத்தைச் சார்ந்தவர்கள் குடிசைகள் இருந்தன. அவர்களுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கும்.

 

நத்தையை உடைத்துக் கூட்டை இந்தப் பக்கம் போடுகின்றார்கள் என்று சண்டை போடுவார். எலியை உரித்துத் தோலைப்போடுகின்றார்கள் என்று சண்டை வரும். ஆடு போகின்றது. மாடு போகின்றது. கோழி போகின்றது. குஞ்சு போகின்றது என்று சண்டைக்கு காரணமே இருக்காது. ஏழைக் குறும்பு என்பதும் ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் என்பதும் சரியாகவே இருந்தன.
அமிர்தலிங்கத் தேவருக்குப் பிள்ளையே இல்லாததால் அவர்களுக்கும் ஒரு இளக்காரம். ‘புள்ள இல்லாத இவருக்கு எவ்வளவு ஆச இருந்தா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்’ என்று சோமுவின் ஆயா பிள்ளை இல்லாததைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பாள்.

 

முத்துப்பேட்டையிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் அகம்படியத் தேவர் நிறைய வாழ்ந்தார்கள். பழகுவதிலும் விருந்தோம்புவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. இருந்தாலும் சண்டை என்பது அவர்களுக்கு சக்கரைப் பொங்கல் போல இருக்கும் சண்டை போட்டாலும் நியாயத்திற்குக் கட்டுப்படுவார்கள். அந்தப் பகுதியில் வாழ்கின்ற மற்ற இனத்தவர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களே.
அப்படிப்பட்ட குழுவில் அகம்படியத் தேவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது சோமுவின் ஆயா எல்லை மீறிப் பேசுவதை அமிர்தலிங்கத் தேவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 

முதல்நாள் கோழி எதையோ தின்றுவிட்டது என்று இரு குடும்பத்திற்கும் சண்டை. அமிர்தலிங்கத் தேவர் ஏதோ கெட்ட பேச்சுப் பேச, சோமுவின் ஆயாவும் திரும்பிப் பேசி இருக்கின்றாள்.

அந்த நேரத்தில் எங்கோ போன ஞானசேகரனும் வீட்டுக்குத் திரும்பி வருகிறான். சோமுவின் ஆயா காது கொடுத்துக் கேட்க முடியாத அளவிற்குப் பேசுகிறாள்.
அவன் இப்படி வரும் சண்டைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. இதனால் கணவன் மனைவிக்குத் தாங்கமுடியாத கோபம் ‘அகத்தி ஆயிரம் காச்சாலும் பெறத்தி பெறத்திதான்’ தங்கள் சொந்தப் பிள்ளையாக இருந்தால் இந்தச் சண்டையைக் கேட்காமல் இருப்பானா? என்று அடிக்கடி எண்ணுவார்கள். பலமுறை இப்படி அவர்கள் பேசியதால் இந்தச் சண்டையில் அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

“என்னாடி திமிரா? பெரிய மனுசன்னும் பாக்காம இப்படிப் பேசறே”
ஞானசேகரன் அவளிடம் கொஞ்சம் வேகமாகப் பேசுகிறான். அவள் இவனையும் விடவில்லை. “ஏ கடிச்ச பயலே, குடிச்ச பயலே, பூதிப் பயலே’ என்று கண்டபடி பேசுகின்றாள்.
ஞானசேகரனுக்குக் கோபம் தாங்க முடியவில்லை. வேலியைத் தாண்டி அவள் குடிசைக்குப் போய்விட்டான். தலை முடியை இழுத்துப் போட்டுச் சாத்து சாத்து என்று சாத்துகின்றான். அவளும் பேச்சை விடுவதாக இல்லை. பேசப் பேசக் கையாலும் காலாலும் மாறி மாறி அடித்து உதைக்கின்றான். அவளுடைய பேச்சு அடங்கவும் இவனுடைய கோபமும் அடங்கிவிட்டது.
வீமன், சூரன் மாதிரி அவளுக்கு மூன்று பையன்கள். சேரியிலும் அம்பலகாரத்தெருவிலும் எவ்வளவு வலிமை மிக்க ஆளாக இருந்தாலும் அகம்படியத் தேவர் வீட்டுச் சிறு பிள்ளைக்கு பயந்தாக வேண்டும். சோமுவின் ஆயாவை அடித்துப் போட்டுவிட்டு ஞானசேகரன் கடைக்குப் போய்விட்டான். யாரிடமும் இதைப்பற்றிப் பேசவில்லை.

எலி வேட்டைக்குப் போய்விட்டுச் சோமுவும், அவன் தம்பிகளும் குடிசைக்குத் திரும்புகிறார்கள். ஆயாவின் நிலையைப் பார்த்துச் சின்ன ஆள் இரண்டு பேரும் குதிக்கிறார்கள். சோமு எதுவும் பேசாமல் ஆயாவின் அருகில் சிலையாக உட்கார்ந்து விட்டான். தம்பிகள் இருவரும் ஆயாவைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள். சோமு குடிசையை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.

கடைக்குப் போன ஞானசேகரன் வீட்டுக்கு வரவில்லை. கடை வியாபாரம் சரியாக இல்லாததால் சிவராமனும் கடையைச் சீக்கிரம் மூடிவிட்டான். இருவரும் இரவு வெகுநேரம் வரை பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் ஞானசேகரன் சண்டையைப் பற்றி மூச்சு விடவே இல்லை. தூங்கியவுடன் புரிய முடியாத அளவில் ஒரே கனவு. சூரியன் உதிப்பதற்கு முன்னால் இருவரும் எழுந்தார்கள்.

ஆற்றுக்குப் போகும்போதுதான் நேற்று நடந்தவற்றை ஞானசேகரன் சிவராமனிடம் சொல்லிக்கொண்டு வந்தான். சோமுவின் ஆயாவைக் கன்னாவின்னா என்று அடித்ததற்காக வருத்தப்பட்டுப் பேசினான். சிவராமனும் அழைத்து வைத்துச் சமாதானம் செய்து வைப்பதாகக் கூறி விட்டுக் கொல்லைக்குப் போனான்.
சோமு ஒரு வேலி ஓரத்தில் ஒளிந்து இருந்து இவர்களுடைய நடவடிக்கையைக் கவனித்தான். சிவராமன் கொல்லைக்குப் போகிறான் என்பது சோமுவுக்கு தெரியாது. சாம்வான் ஓடைக்குச் செல்கிறான் என்றே நினைத்துக் கொண்டான்.

மறைந்து இருந்த சோமு திடீரென்று ஓடி வந்தான். வீமன் மாதிரி மூன்று பிள்ளைகள் இருக்கும் போது ஆயாவை அடித்து விட்டானே என்பதில் அவனுக்கு பயங்கரமாக வேகம். எப்படியும் ஞானசேகரனைத் தீர்த்துவிட வேண்டும் என்ற முடிவிலேயே இப்படி செய்தான்.

வளரும்..

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.