திமுக கூட்டணி தொகுதிப்பங்கீடு : ரொம்ப ஹேப்பி … கொஞ்சம் சலசலப்பு !
மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை வாக்குவங்கி உள்ளது? அக்கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்குவது என்பது எங்களை அவமதிப்பதைப் போல் உள்ளது ...
திமுக கூட்டணி தொகுதிப்பங்கீடு : ரொம்ப ஹேப்பி … கொஞ்சம் சலசலப்பு !
திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு முதலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுப் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை வெளியிடப்பட்டது. தற்போது கூட்டணிக் கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றது. கொங்கு நாடு மக்கள் கட்சி நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகின்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடுகின்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மற்றும் மதுரையில் போட்டியிடுகின்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளின் பெயர்களும், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தொகுதியின் பெயரும் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. திமுக கூட்டணியில் இணைந்துள்ள நடிகர் கமலஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்கப்படவில்லை. 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே 2025 மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி வேண்டி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையைத் திமுக நிராகரித்துள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்துள்ள அக்கட்சியின் தலைவர்கள்,
“மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை வாக்குவங்கி உள்ளது? அக்கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்குவது என்பது எங்களை அவமதிப்பதைப் போல் உள்ளது” என்று கூறியுள்ளனர். திராவிட இயக்க உணர்வாளர்கள் சமூக ஊடகங்களில், நடிகர் கமலஹாசன் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் திமுக வழங்கியிருப்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. காரணம் அண்ணா, கலைஞர் தங்களின் கூட்டணியில் பார்ப்பனர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. தளபதி ஸ்டாலின் தற்போது கமலஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க இருப்பது பார்ப்பன எழுச்சிக்கு வழிகோலும் வகையில் உள்ளது”
என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டதில் விசிக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். பொதுத்தொகுதியை திமுக வழங்காமைக்குத் தொண்டர்கள் அங்கங்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அக் கட்சியின் தலைவர் தொல்.திருமா தொண்டர்களிடையே பேசும்போது,“சனாதனம் பிடித்த பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்ற முன்னுரிமையில் விசிக செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. கூட்டணியில் நமக்கு எத்தனை இடங்கள் என்பது முக்கியமல்ல, நம் எண்ணம்தான் முக்கியம்” என்று தொண்டர்களை அமைதிபடுத்தியுள்ளார்.
திமுக கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதால் கட்சிகளிடையே சமூகமான ஒத்துழைப்பும், கொஞ்சம் சலசலப்பும் உள்ளது என்பது உண்மையே. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா… இந்தச் சலசலப்பும் விரைவில் அடங்கிப்போகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆதவன்