உயர்கல்வி வணிகமயமாக்கலுக்கு எதிர்ப்பு! கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்!
உயர்கல்வியின் தனியார் மயமாக்கலுக்கும் வணிகமயமாக்கலுக்கும் வழிவகுக்கும் புதிய நடவடிக்கைகள் – தமிழ்நாடு அரசு உடனடியாக கைவி வேண்டும்.
கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் (AUT. TNGCTA. MUTA) கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சேவியர் செல்வகுமார் வெளியிட்டுள்ள கண்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டு முக்கியமான நடவடிக்கைகள் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று, தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான நிலம் மற்றும் நிரந்தர நிதி தொடர்பான நிபந்தனைகளைத் தளர்த்தும் வகையில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம். மற்றொன்று, ஆஸ்திரேலியாவின் University of Western Australia (UWA) சென்னையில் தனது சர்வதேச வளாகத்தைத் தொடங்குவதற்கு UGC இறுதி ஒப்புதல் வழங்கியிருப்பது. தனியார் பல்கலைக்கழகங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் மசோதா 2026 செப்டம்பர் 8 அன்று உயர்கல்வி அமைச்சர் பெ. விஸ்வநாதன் அவர்கள் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆசிரியர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான குறைந்தபட்ச நில அளவு 100 ஏக்கரிலிருந்து சென்னை மாநகரப் பகுதியில் 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 18 ஏக்கராகவும், பிற பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிரந்தர அறக்கட்டளை நிதியும் ரூ.50 கோடியிலிருந்து ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தளர்வுகள் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை அதிக அளவில் உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்பதோடு, உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான அரசின் தரக் கட்டுப்பாட்டு அணுகுமுறையும் தளர்த்தப்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.
இதன் தொடர்ச்சியாக, University of Western Australia சென்னையில் தனது வளாகத்தைத் தொடங்க UGC இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. அங்கு Business Management, Computer Science, Data Science, Artificial Intelligence, Information Technology, MBA உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்த நடவடிக்கை இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் சர்வதேசமயமாக்கல் நோக்கத்துடன் நேரடியாகத் தொடர்புடையது என்பதையும் மத்திய அரசின் கல்வி அமைச்சகமும் UGC-யும் வெளிப்படையாகக் குறிப்பிடுகின்றன.
இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் உயர்கல்வி தொடர்பான அணுகுமுறையாகும். NEP 2020 உயர்கல்வியின் சர்வதேசமயமாக்கலை முக்கிய நோக்கமாகக் குறிப்பிடுகிறது. உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் தொடங்க அனுமதிப்பதும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில்
வளாகங்களைத் தொடங்குவதும், சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதும் இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. UGC-யின் 2023 Foreign Higher Educational Institutions Regulations கூட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்திய நுழைவு NEP 2020-ல் ஏற்று செய்யப்பட்ட சர்வதேசமயமாக்கலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
எனவே, சென்னையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்குவதையும், தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்துவதையும் தனித்தனி நிகழ்வுகளாகப் பார்ப்பது முழுமையான அணுகுமுறையாக இருக்காது. இவை இரண்டும் உயர்கல்வியில் தனியார் முதலீடு, வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்பு மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றை அதிகரிக்கும் NEP 2020-ன் பரந்த கொள்கைச் சூழலுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம், தமிழ்நாடு அரசு இதுவரை தமிழகத்தின் தனித்துவமான உயர்கல்வி மற்றும் சமூகநீதி அணுகுமுறையை முன்னிறுத்தி வந்தாலும், நடைமுறையில் மத்திய அரசின் NEP 2020-ன் உயர்கல்வி சார்ந்த முக்கிய அம்சங்களில் ஒன்றான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்குள் கொண்டு வரும் கொள்கையை ஏற்றுக்கொள்வதைத் தெளிவாகக் காண முடிகிறது.
தமிழ்நாடு நீண்டகாலமாக அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் குறைந்த செலவில் உயர்கல்வியை வழங்கிய மாநிலமாக விளங்குகிறது. இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரத்தில், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறை, ஆசிரியர் காலிப்பணியிடங்கள், உள்கட்டமைப்பு குறைபாடுகள், ஆராய்ச்சி நிதி பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் போதுமான நிதி ஒதுக்காமல் புதிய தனியார் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை ஊக்குவிப்பது கல்விக் கொள்கையின் முன்னுரிமைகள் குறித்த தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. சமீபத்திய ஆசிரியர் அமைப்புகளின் எதிர்ப்புகளிலும் அரசுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அரசு கல்லூரிகளில் நிலவும் காலிப்பணியிடங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
NEP 2020-ஐ விமர்சன ரீதியாக அணுக வேண்டிய அவசியமும் இங்கு உள்ளது. கல்வியின் சர்வதேசமயமாக்கல், பல்துறைப் படிப்பு, ஆராய்ச்சி மேம்பாடு போன்ற நோக்கங்கள் தனித்தனியாகப் பார்க்கும்போது வரவேற்கத்தக்கவையாக இருக்கலாம். ஆனால் அந்த நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முறைதான் முக்கியமானது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்குள் கொண்டு வருவது மட்டும் உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் எண்ணிக்கை, ஆராய்ச்சி நிதி, ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும் உலகத் தரமான கல்வியை உருவாக்க முடியும்.
மேலும், UGC விதிமுறைகளின்படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்திய வளாகத்திற்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்களைத் தங்களது சொந்த ஆட்சேர்ப்பு விதிமுறைகளின் அடிப்படையில் நியமிக்கவும், தகுதி, ஊதிய அமைப்பு மற்றும் பணிநிபந்தனைகளை நிர்ணயிக்கவும் கணிசமான தன்னாட்சியைப் பெற்றுள்ளன. இது ஆசிரியர் பணியின் நிரந்தரத்தன்மை, பணிப்பாதுகாப்பு, ஊதியச் சமத்துவம் மற்றும் கல்விப் பணியின் சமூகப் பொறுப்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆசிரியர் அமைப்புகள் தீவிரமாகக் கவலை கொள்ள வேண்டிய நிலையை உருவாக்குகிறது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கட்டண அமைப்பும் மிக முக்கியமான பிரச்சினையாகும். அதிக கட்டணம் செலுத்தக்கூடிய மாணவர்களுக்கு உயர்தர சர்வதேச கல்வி கிடைக்கும் சூழலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பல்கலைக்கழகங்களை மட்டுமே சார்ந்திருக்கும் சூழலும் உருவானால், உயர்கல்வியில் ஏற்கெனவே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும் அதிகரிக்கும். இதன் விளைவாக, ஒரே மாநிலத்தில் இரண்டு வகையான உயர்கல்வி அமைப்பு உருவாகும் அபாயம் உள்ளது.
மேலை நாடுகளின் அனுபவமும் இங்கு கவனிக்கத்தக்கது. குறிப்பாக இங்கிலாந்தில் உயர்கல்வி நிதியில் மாணவர் கட்டணத்தின் பங்கு காலப்போக்கில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் நிதியை விட மாணவர் கட்டணம் மற்றும் பிற தனியார் வருவாய் ஆதாரங்களை அதிகமாகச் சார்ந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. OECD தரவுகளும் பல நாடுகளில் உயர்கல்விக்கான தனியார் மற்றும் வெளிநாட்டு நிதியின் பங்கு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம் ஒரு முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்: உயர்கல்வியின் சர்வதேசமயமாக்கல் அவசியமானதாக இருக்கலாம்; ஆனால் அது அரசின் கல்விப் பொறுப்பை குறைக்கும் தனியார்மயமாக்கலாக மாறக்கூடாது.
தமிழ்நாடு அரசு தனது உயர்கல்விக் கொள்கையில் சமூகநீதி, சமத்துவம் மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய கல்வி என்ற அடிப்படைகளைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மத்திய அரசின் NEP 2020-ல் இடம்பெற்றுள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவிற்கு அழைக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன், அது தமிழ்நாட்டின் தனித்துவமான கல்வி மரபுக்கும் சமூகநீதி அடிப்படையிலான உயர்கல்வி அமைப்புக்கும் ஏற்புடையதா என்பதை விரிவாகப் பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கையை எந்தவிதமான விமர்சனப் பரிசீலனையும் இன்றி ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தமிழகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கல்விசார் தேவைகளின் அடிப்படையில் தனித்துவமான உயர்கல்விக் கொள்கையை உருவாக்குவதே மாநில அரசின் கடமையாகும்.
எனவே, கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JAC) தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவெனில், தனியார் பல்கலைக்கழகங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கி அவற்றின் தரத்தை உயர்த்த வேண்டும்; ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தமிழ்நாட்டின் உயர்கல்வி சந்தையின் தேவைக்காக அல்ல; சமூகத்தின் தேவைக்காக வளர வேண்டும். கல்வி ஒரு வணிகப் பொருள் அல்ல; அது ஒரு சமூக உரிமை. அரசின் பொறுப்பிலிருந்து உயர்கல்வியை விலக்கி, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் எந்த முயற்சியும் எதிர்காலத்தில் ஆழமான சமூக மற்றும் கல்வி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.
எனவே, உயர்கல்வியின் தனியார்மயமாக்கலையும் வணிகமயமாக்கலையும் தடுத்து, பொதுநிதியில் இயங்கும் அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை வலுப்படுத்துவதே தமிழ்நாட்டின் கல்வி எதிர்காலத்திற்கான சரியான பாதையாகும். என்றும் இயக்கப் பணியில்…
முனைவர். அ. சேவியர் செல்வகுமார்,
ஒருங்கிணைப்பாளர்,
கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JAC),
தமிழ்நாடு






Comments are closed, but trackbacks and pingbacks are open.