சர்ச்சை – பல்வேறு பிளவுகளுக்கு மத்தியில் ஒன்றுகூடிய TELC திருச்சபையினர் !
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தமிழகத்திற்கு பரிச்சயமான ஒன்று. TELC (Tamil Evangelical Lutheran Church) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திருச்சபைதான், இந்தியாவில் முதன்முதலாக அச்சுப்பிரதியை அறிமுகப்படுத்தியது. ஆர்.சி. வகை கிறிஸ்துவத்துவத்திலிருந்து பிரிந்த திருச்சபை. தமிழகத்தில் தரங்கம்பாடியை தலைமையகமாகக் கொண்டு, 1718 ஆம் ஆண்டு முதலாக TELC திருச்சபை இயங்கி வருகிறது.
திருச்சியில் இயங்கிவரும் ஜோசப் கண் மருத்துவமனை உள்ளிட்டு, இத்திருச்சபைக்கு சொந்தமான மருத்துவமனைகள், தேவாலயங்கள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரி, மருத்துவமனைகள், தொழிற்பயிற்சி பள்ளி, பாலர் பள்ளிகள், மாணவ, மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இத்திருச்சபைக்கு சொந்தமான சொத்துக்களும் சேவை நோக்கிலான நிறுவனங்களும் இயங்கிவருகின்றன.
இத்திருச்சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை நிர்வகிப்பதற்கென்றே தனிச்சிறப்பான சட்டத்திட்டங்களையும் கொண்டிருக்கிறது. பேராயரின் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனை சங்கம் ஒன்று செயல்படுகிறது. மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி புதிய பேராயர்களை தேர்வு செய்தும் வருகிறார்கள்.
இத்திருச்சபையை பின்பற்றும் கிறிஸ்துவர்கள் பலரும் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து கிடக்கிறார்கள். சிலர், பல்வேறு வகைகளில் பதவியை பிடித்துக் கொண்டு, தங்களது செல்வாக்கை பயன்படுத்தி திருச்சபைக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர், இத்திருச்சபைக்கான தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல் எழுந்து, நீதிமன்ற வழக்கு வரை போனது. பின்னர், ஓய்வுபெற்ற நீதிபதி பால்வசந்தகுமாரை நியமித்து தேர்தலை நடத்தியதெல்லாம் தனிக்கதை.
இந்நிலையில், இத்திருச்சபையையின் அங்கத்தினர்களான, “சங்கீதம் 133:1 – லுத்தரன் முன்னேற்ற இயக்கம்” என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் திருச்சியில் ஒன்றுகூடி, “திருச்சபையின் செயல்பாடு – இயக்கத்தின் நிலைப்பாடு” குறித்து விவாதித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, லுத்தரன் முன்னேற்ற இயக்கம் (R) , லுத்தரன் முன்னேற்ற இயக்கம் (EDC), லுத்தரன் முன்னேற்ற இயக்கம் (பிரின்ஸ்), லுத்தரன் முன்னேற்ற இயக்கம் (ஜீவா) என சுமார் ஆறுக்கும் மேற்பட்ட அணிகளாக இத்திருச்சபையினர் பிரிந்திருக்கும் நிலையில், அவர்களையெல்லாம் சகோதரத்துவத்துத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதற்காகவே, இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கிறார், . TELC திருச்சபையின் இணைப்பொருளரும், தலைமை நிலைய செயலரும், சங்கீதம் 133:1 – லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் ஆலோசனை சங்க உறுப்பினருமான ஜே.ஜான்சன் நேசப்பா.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சியில் இவர்கள் ஒருங்கிணைத்த நிகழ்வில், சங்கீதம் 133:1 – லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் Rev டி.ராபர்ட் வில்லியம் பால்ராஜ், பொதுச்செயலர் பி.கிரேனேப்பு கலாராணி, துணைப்பொதுச்செயலர் ஏ.ஜே.ராஜ்குமார், செயல்தலைவர் டி.எர்னஸ்ட் நெல்சன், பொருளர் ஐ.இஸ்ரவேல் உள்ளிட்டு, புரசைவாக்கம், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், கீழ்ப்பாக்கம், தரங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மறைமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டு பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்வை, ஊடகச்செயலர் ஐ.ஜேக்கப் ஜெயசீலன் ஒருங்கிணைத்தார்.
பிரிந்து கிடக்கும் திருச்சபையினரை ஒருங்கிணைக்கும் முயற்சியின் தொடக்கமாக, இந்நிகழ்வு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதேசமயம், ஒரு காலத்தில் குறிப்பாக, தமிழகத்தில் அடித்தட்டு ஏழை மக்களுக்கான கல்வி மருத்துவ சேவைகளை வழங்கிய பாரம்பரிய பெருமைகொண்ட திருச்சபைகளுள் ஒன்று TELC. துரதிர்ஷ்டவசமாக, திருச்சபையின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுள் சிலர் தங்களின் சுயநல நோக்கில் திருச்சபையின் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கிலும், முற்றிலும் வணிக நோக்கிலும் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்து வரும் நிலையில், திருச்சபையை சரியான திசையில் வழிநடத்திச் செல்ல வேண்டுமென்பதே, இத்திருச்சபையை பின்பற்றும் சாமானிய கிறிஸ்துவர்களின் ஏக்கமாக இருந்து வருகிறது.
— இளங்கதிர்.