ஆயிரம் பெரியார்களை உருவாக்க வேண்டும் ! வி.சி.க தலைவர்
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்களின் கலைப் பணிகளை சிறப்பிக்கும் வகையில் மருதோவியம் என்ற தலைப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழு நாள் நிகழ்விலும் பங்கேற்று உரையாற்றுபவர்களுக்கு ஓவியர் மருது அவர்கள், தான் வரைந்த பெரியார் படத்தை நினைவுப் பரிசாக வழங்குகிறார்.
மருதோவியம் நிகழ்வைத் தொடங்கி வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் எம்பி தன்னுடைய பேச்சில், மருது மற்றும் கவிஞர்கள் கலைஞர்களுடன் 2002ஆம் ஆண்டு ஈழத்திற்கு தானும் பயணித்த நிகழ்வினை விளக்கி, இதை மருது உட்பட யாரும் பீற்றிக் கொண்டு திரியவில்லை என்பதையும் சொல்லி, பெரியாருக்கு எதிராக பிரபாகரனை நிறுத்துகின்ற அரசியலின் பின்னணி என்ன என்பதை விளக்கினார்.

பிரபாகரனையோ ஈழத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாத எச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி வகையறாக்கள் பெரியார் எதிர்ப்புக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால், இப்படிப் பேசுபவர் யாருக்காக வேலை செய்து கொண்டு இருக்கிறார் என்பதை உணர்த்தினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஓவியர் மருதுக்கு வி.சி.க தலைவர் ஒரு கோரிக்கையும் வைத்தார். “தமிழ்நாட்டில் உள்ள ஓவியர்கள் ஆயிரம் பேரை ஓரிடத்தில் கூடச் செய்து, ஆயிரம் பெரியார்களை பல்வேறு கோணங்களில் வரையச் செய்ய வேண்டும். பெரியாரிய கருத்துகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்” என்ற திருமாவின் கோரிக்கைக்கு நிகழ்வை நடத்துபவர்களும் அரங்கத்தில் நிறைந்திருந்தவர்களும் ஒரு சேர கைத்தட்டி ஏற்பளித்தனர்.