மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க கோரிக்கை மனு !
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அம்பேத்கர் சிலை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பொட்டபாளையத்தைச் சேர்ந்த பி.வீரபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை அம்பேத்கர். இதை அங்கீகரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பொது நூலகத்திலும், ஆஸ்திரேலியாவிலும் அம்பேத்காரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு சிலை அமைத்துள்ளனர்.

மதுரையில் தென் மாவட்ட மக்களுக்கு நீதிபதி வழங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் அமர்வு 2004-ல் தொடங்கப்பட்டு 20ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாடு சுதந்திரமடைந்து 75-வது குடியரசு தினத்தை கொண்டாடி வரும் நேரத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் அவருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சருக்கு கடந்த 16.12.2024-ல் மனு அனுப்பினேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் அம்பேத்கருக்கு வெண்கல சிலை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளேட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் மகேந்திரபதி, பாஸ்கர்மதுரம், ஆனந்தமுருகன் ஆகியோர் வாதிட்டனர். அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, உயர் நீதிமன்ற கட்டிடக்குழு அனுமதி அளித்தால் அரசு பரிசீலிக்கும் என்றனர். இதையடுத்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்.