கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட’ மன்மத ராஜா’ கைது!
தன்னை திருமணம் செய்ய மறுத்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் புகைப்படங்களை ‘மார்பிங்’ செய்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு அசிங்கப்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ‘மன்மத ராஜா’வை தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணம் செய்வதாகக் கூறி கல்லூரி மாணவிக்கு காதல் வலை விரித்த 35 வயதுடைய அந்த மன்மத ராஜாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த 19 வயதேயான இளம் பெண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்ற இளைஞர் முகநூல் பக்கம் மூலம் அறிமுகம் ஆனார்.
இருவரும் தொடர்ந்து முகநூல் பக்கம் வாயிலாக நட்பு ரீதியாக பழகி வந்தனர். இந்நிலையில், தான் கதிர் அறுக்கும் இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும், ஏற்கெனவே அப் பெண் வசித்துவரும் திருவையாறு பகுதியில் பணிபுரிந்து இருப்பதாகவும், அதன் மூலம் அப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் தனக்கு தெரியும் என்றும் காசிநாதன் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, காசிநாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருக்கு தனது மொபைல் நம்பரை அனுப்பியுள்ளார் அப் பெண்.
இந்நிலையில், அப் பெண்ணின் மீது மோகம் கொண்ட காசிநாதன், அப் பெண்ணைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
காசிநாதனின் புரபோசலை ஏற்க மறுத்த அப் பெண், சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தொடர்பு கொள்வதை தவிர்க்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில், காசிநாதனுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்ததுடன், அவரின் மொபைல் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார் அப் பெண்.
இதனால் ஆத்திரமடைந்த காசிநாதன் அப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார். அதனடிப்படையில், ஏற்கெனவே முகநூல் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அப்பெண்ணின் புகைப்படங்கள், அவரது தாயின் புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து அவற்றை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இதுகுறித்து தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில், சைபர் க்ரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
காசிநாதன் வேறொருவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி போலியாக தொடங்கப்பட்ட “annnussiyaatinnnees” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் அப்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு அப்பெண்ணை விபச்சாரியாக சித்தரித்திருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, சைபர் க்ரைம் போலீஸார் மடக்கிப் பிடித்து தஞ்சாவூர் கொண்டு வந்து அவரிடம் தீவிர விசாரணை செய்தனர்.
காசிநாதன் தனக்கு பழக்கமான பெண்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி 15க்கு மேற்பட்ட சிம் கார்டுகள் பெற்று, அவற்றின் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வiலைத்தளங்களில் வெவ்வேறு பெயர்களில் போலியாக கணக்கு தொடங்கி இதுபோல செயல்பட்டு வருவது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, சைபர் க்ரைம் போலீஸார் காசிநாதன் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம் மற்றும் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.