தவறான பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்… மெத்தனத்தில் கண்டுகொள்ளாத காவல்துறை… குமுறும் சமூக ஆர்வலர்கள்..!
தவறான பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்… மெத்தனத்தில் கண்டுகொள்ளாத காவல்துறை… குமுறும் சமூக ஆர்வலர்கள்..!
திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து அரியலூர் வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா கல்லக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கல்லக்குடி ராஜா தியேட்டர் பேருந்து நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி எனப்படும் டோல் பிளாசா வரை உள்ள சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை தனியார் பேருந்துகள் ஒரு பகுதி சாலையை புறக்கணித்து ஒன்வே எனப்படும் தவறான வழி சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இதை முன் உதாரணமாக கொண்ட டால்மியா சிமெண்ட் தொழிற்சாலைக்கு ஜிப்சம் ஏற்றி வரும் கனரக வாகனங்களும் அதே போல் தவறான சாலை பயணிப்பதால் உரிய முறையில் பயணிக்க வேண்டிய பயணிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் மனுக்கள் அளித்தும் காவல்துறையினர் மெத்தனத்தில் தொடர்ந்து உள்ளனர். விபத்து, உயிரிழப்பு போன்ற அபாயங்கள் நடைபெறாமல் தடுப்பதும் காவல்துறையின் கடமைதான். மேலும் இந்த விதிமுறை மீறல்கள் குறித்து டிராக் மெயின்டனன்ஸ் செய்யும் ஹைவே பேட்ரோல் அமைப்பினரும் கண்டுகொள்ளாமல் இருப்பதின் காரணம் தெரியவில்லை.
சாலை வழியாக கீழரசூர், ஆமரசூர், தென்னரசூர், கல்லகம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதி மக்கள் ,வணிகர்கள், மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், தொழிலாளிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பயணிக்கும் சாலையில் நடைபெறும் இந்த விதிமுறை மீறல்கள் குறித்து காவல்துறையும், நெடுஞ்சாலை துறையும் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகும்.