கே.என்.நேரு  – அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும் !

எனக்கு விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இதைச் சொல்வது எனக்கு பெருமை தான். என்னுடைய அப்பா வழியில் எங்களுக்கு

0

கே.என்.நேரு  – அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும்

திமுக. கே.என்.நேரு
திமுக. கே.என்.நேரு

தமிழகத்தின் மையம் திருச்சி என்றால் திருச்சியின் மையம் கே.என்.நேரு என்று சொன்னால் அது மிகையாகாது. மையம் என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அது புயலாகும். ஆனால் அமைதியான பிறகு எத்தனை உதவிகளை செய்து செல்லும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.முன்பெல்லாம் முன்கோபத்தால் கை நீட்டிவிடும் அவர், அடுத்த சில நேரங்களில் கோபம் தணிந்து திட்டியவரை அழைத்து சப்பாடு போடுவார்.கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் திருச்சி அரசியலில் பெரும் ஆளுமையாக வலம்வருபவர் அமைச்சர் கே.என்.நேரு. நவம்பர் 9ந்தேதி அவருக்கு பிறந்தநாள். அரசியலில் அசைக்க முடியாத சக்தி. கிளையில் துவங்கி யூனியன் சேர்மென், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், முதன்மைச் செயலர், 13 வருடங்களுக்கு மேல் அமைச்சர் என தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைக்கும் ஆச்சரியம் கே.என்.நேரு எனில் அதில் கிஞ்சிற்றும் தவறில்லை.

https://businesstrichy.com/the-royal-mahal/

“ஒருமுறை ராஜிவ்காந்தி நடைபயணமாக லால்குடிக்கு வந்திருந்தார். அப்போது,மக்கள் கூட்டத்தில் இருந்த இளைஞர் ‘குடிநீர் தொட்டியை’ திறந்துவைக்க அவரிடன் தைரியமாக முறையிட்டார். அடுத்து ராஜிவிடம் “உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்” என்று சொல்லி, பிரதமரின் கவனத்தைக் கவர்ந்து, தனது யூனியனுக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டார். அதனால், அந்தப் பகுதியில் செல்வாக்கு உயர்ந்தது. காங்கிரஸ்காரர்களே பயந்திருந்த வேளையில் துணிச்சலாக முறையிட்ட இளைஞர்தான் நேரு. 1978ல் தீவிர அரசியலில் இறங்கினார் நேரு.

பி.யூ.சி., வரை படித்தவர், பள்ளி வாழ்வில் அவர் கொஞ்சம் பயமறியா கன்று.. அதனாலேயே அவரை கவனிக்கவே ஒரு ஆள் போடப்பட்டிருப்பார்களாம்.. அடுத்து அரிய நல்லூரில் மிளகாய் மண்டி வைத்தார். பிறகு, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி. கையில் பணமும் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் அறிமுகமும் கிடைத்ததும் அரசியலில் இறங்கினார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் ஆசியுடன் புள்ளம்பாடி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேர்தலில் நின்றார். தேர்தல் நடத்திய எம்.ஜி.ஆர். முழுமையாகத் தோற்று, அதுவரை தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க. மொத்தமாக வெற்றிபெற்ற தேர்தல் அது.

அன்று ஆரம்பித்த அரசியல் பயணம், தற்போது வரை தொடர்கிறது. 1989ல் நேருவுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. முதல் வாய்ப்பிலேயே வெற்றிபெற்ற நேரு, அமைச்சரானார். நேருவுக்கான பொன்வாய்ப்பு உருவானது, அப்போது திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் செல்வாக்காக விளங்கிய செல்வராஜ், முசிறியில் தோற்றார். அவருக்கு அடுத்த மலர்மன்னனுக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி, நேருவின் சாதுர்யமான காய்நகர்த்தலில் அவர் வசம்போனது. மின் துறை அமைச்சரானார். தி.மு.கவிலிருந்து வைகோ பிரியும்போது செல்வராஜும் மலர்மன்னனும் அணி மாறினார்கள்.

1992ல் திமுக பெரும் பிளவைச் சந்தித்தது. கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த வைகோ, திமுக தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கட்சியில் செல்வாக்கு பெறுவதையும், வளர்ச்சியடைவதையும் எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறினார் . அவரோடு சேர்ந்து சில மாவட்டச் செயலாளர்களும் வெளியேறினர். அதில் அன்றைய திருச்சி மாவட்டச் செயலாளரும் ஒருவர். எனவே, மாவட்டத்தில் கட்சிக்கான அடுத்த முகத்தை தெரிவு செய்யவேண்டிய நிலை வந்தது. அப்போது கட்சித் தலைமையின் தேர்வாக இருந்தவர் கே.என்.நேரு !அப்போது, “கிராமங்கள்தோறும் பயணித்து கட்சியின் கட்டுமானத்தை வலிமைப்படுத்தி, கட்சியை நிலைநிறுத்தினார்” அதுதான் இன்று வரை கட்சியின் கவனத்தை நிலை நாட்டியுள்ளது.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் என போகும் இடங்களில் இப்போதும் செல்வாக்காக உள்ளார்.கூடவே ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான முன்னாள் எம்.எல் ஏ அன்பில் பொய்யாமொழியின் அகால மரணம், இவருக்கு வழிவிட அடுத்து 1989 – 91 வரை தமிழக மின்சாரதுறை அமைச்சர், பால்வளம், செய்தித் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,1996 – 2001ல் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர், கடந்த 2006 – 2011 வரை போக்குவரத்து துறை அமைச்சர் என பலமிக்க பதவிகளில் இருந்தார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

பின்னர், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவாக, இருந்தார்.. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தி.மு.கவின் முதன்மைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரின் சாதுர்யத்தால் திருச்சி மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு  மொத்தமாக அனைத்து தொகுதிகளில் தி.மு.க பிடித்தது. அரசியலை கடந்து நேருவின் முதல் தேர்வும் விவசாயம்தான்.

இப்போதும் திருச்சியில் இருந்தால் அதிகாலையிலேயே எழுந்து, தன் நிலங்களை சுற்றி, பார்த்துவிட்டுதான் அடுத்த வேலை! காணக்கிளியநல்லூரைச் சுற்றி கொய்யா தோப்புகளும், சப்போட்டா தோப்புகளில் சில இப்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

அதோடு ஶ்ரீ நாராயணசாமி ரைஸ் மில் எனும் நவீன தொழில் நுட்ப மில்லை இங்கு கடந்த 2008லிருந்து நடத்திவருகிறார். நேருவின் சொந்த வீட்டிற்கு அருகில் இரண்டு கட்டிடங்கள் உள்ளது. ஒன்று பழங்குடியின மாணவர்கள் விடுதி, இன்னொன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி.அவரது தொகுதிக்குட்பட்ட சொலோமா சேரிப்பகுதி, தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 7 லட்ச ரூபாய் செலவுசெய்து ஜிம் கட்டியுள்ளார்.

திருச்சியில் சுமார் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். லால்குடி எனும் பின்தங்கிய பகுதியில் இருந்து வந்த ஒருவர், தொடர்ந்து தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகின்றார்.

இப்போதும் தன் அலுவலகத்திற்கு பார்க்க வருபவர்கள், இல்ல திருமணங்களுக்கு பத்திரிக்கை வைப்பவர்கள், கல்யாண வீடு என எது நடந்தாலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தராளாமாக எடுத்து நீட்டுவார். அதுதான் அவருக்கான பிளஸ். 1980ல் வட்டிக்கடை வைத்திருந்ததால், கடையின் வாசலில் அமர்ந்திருக்கும் நேரு, தன்னைப் பார்க்க வருகிறவர்களுக்கு 5,10 எனக் கொடுப்பார். ‘சும்மா செலவுக்கு வச்சுக்கங்க’ என்பார் அந்தப் பழக்கம்தான் இப்போது தொடர்கிறது.

நேரு என்றால் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் தனிப் பிரியம். அதை அதிகப்படுத்திக் காட்ட நேரு எடுத்த முயற்சி தான் திருச்சியில் திறக்கப்பட்ட ‘கலைஞர் அறிவாலயம். அடுத்து கொட்டப்பட்டு, பிராட்டியூர் என பல மாநாடுகள் நடத்தி தலைமையின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

தம்பி ராமஜெயம் இறந்தபிறகு சுத்தமாக சைவத்துக்கு மாறிவிட்டார். 2012ம் ஆண்டு கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். ஜீரணிக்க முடியாத வகையிலான அந்தக் கொடூர கொலை வழக்கில், இதுவரை யார் குற்றவாளி என்று கண்டறியப்படவில்லை. ராமஜெயத்தின் மரணம் கே.என்.நேருவை வெகுவாக பாதித்துள்ளது.

அவரை அந்த மரணத்தின் பாதிப்பிலிருந்து ஆற்றுப்படுத்தவோ, அவரால் அதன் பாதிப்பிலிருந்து இப்போதும் அவர் குடும்பம் மீள முடியவில்லை. நேருவின் பலம் என்பது அவரது குடும்பம்தான். அவரது தம்பிகள் இப்போதும் நேரு, முன்னால் அதிர்ந்துகூடப் பேச மாட்டார்கள். ராமஜெயம் உயிரோடு இருக்கும்வரை என்னதான் அதிகார மையத்தில் பலமிக்க நபராக இருந்தாலும், அண்ணன் நேரு முன் நின்று கொண்டுதான் பேசுவார். இப்போது அவரது தம்பிகள் மணிவண்ணன், ரவியும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.

அடிக்கிற கை தான் அணைக்கும் அவர் அமைச்சராக இருந்தாலும் இல்லையென்றாலும் பணியாளர்கள் அனைவரையும் அவர்களின் வயது முதிர்ந்த காலத்திலும் பண உதவி பராமரித்து வருகிறார்.. நேருவின் நையாண்டி, நக்கல், ஏதார்த்த பேச்சுக்களை தமிழகத்தின் அனைத்து முன்னணி கட்சி தலைவர்களுக்கு ரசித்து கேட்பார்கள். அவர் பேசுகின்ற பேச்சை வேறு யார் பேசினாலும் அது கோபத்தை தூண்டுவதாக தான் அமையும்.

யார் விசுவாசிகள் ?

நேரு திருச்சியின் அரசியல் சதுரங்கத்தில் எதிரிகளின் பலத்தை குறைப்பதற்கு அவர் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் எதிரியின் ஆதரவாளர்களை தன்னுடைய ஆதவாளர்களாக மாறுவதும் அவர்களுக்கு கட்சி பதவிகளை வாங்கி கொடுப்பார். இப்படி எதிர் அரசியல் செய்வதாலே இவருடைய ஆதரவாளர்கள் பலர் இனத்தின் பெயரால் பல சமயங்களில் முதுகில் குத்திய போதும், தன்னை சுற்றி தான் திருச்சி அரசியலை மாற்றியிருப்பதும் தான் அவருடைய அரசியல் முதிர்ச்சி.

கே.என்.நேருவை ஒரு தொழிலதிபர் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் பள்ளி, கல்லூரி நிர்வாகம், அரிசி ஆலை நிர்வாகம், பல ஏக்கரில் விவசாய நிலங்களை கையாளும் நிர்வாகம் என அனைத்தையும் குடும்பத்தினரின் மேற்பார்வையில் நிர்வாகம் செய்து வருபவர். அவரை தேடி வருபவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் “எங்கள் அமைச்சர்” என்று தான் கொண்டாடுகின்றனர்.

திருச்சியின் அரசியல் வரலாற்றில் 28 ஆண்டு காலம் 24×7 என கட்சிப் பணியில் இடையறாது பரபரப்பாக, பம்பரமா சுற்றிச் சுழன்று இன்று தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உச்சத்தில் இருக்கும் கே.என்.நேருவின் பலமே உள்ளொன்று வைத்திராத கோபமும் குறைவில்லாத அன்பும், அரவணைப்பும் தான்.கே.என்.நேரு திருச்சியில் இருந்தால் தவறாமல் கட்சிக்காரர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். அவரோடு காரில் பயணிப்பவர்கள் களைத்து போனாலும் அவர் ஓய்வதில்லை.

அதிகாலையே திருச்சி லால்குடி, திருவளர்சேலை பகுதிகளில் உள்ள வயல்களுக்கு சென்று பைல்களை பார்த்துவிட்டு தான் அடுத்தகட்ட வேலையை பார்ப்பதும், அவ்வப்போது திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆலோசனை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறார். அவரது தம்பிகளான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் மகன் அருண், ராமஜெயம் மகன் வினித் ஆகியோர் மூலம் டெக்ஸ்டைல் மற்றும் கட்டுமான தொழில்களில் கோலோச்சுகிறார்கள்.

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய அரிசி ஆலை என்கிற பெருமை லால்குடி அடுத்த பூவாளூரில் இயங்கி வரும் எஸ்.என்.ஆர் ரைஸ் மில் பெற்றுள்ளது. தமிழக அளவில் அரிசி ஆலைகள் தொழில் நஷ்டத்தால் நலிவடைந்து வரும் நிலையில் எஸ்.என்.ஆர் ரைஸ்மில் எப்போதும் பிஸியாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 100 மெட்ரிக் டன் அரிசியை தரம் பிரிக்கும் தொழில்நுட்பம் வாய்ந்த அதிநவீன கருவிகள் இந்த ஆலையில் உள்ளது. இந்த ஆலையை நேருவின் தம்பி கே.என்.மணிவண்ணன் நிர்வகித்து வருகிறார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முடிவெடுத்த நேரு தங்களுக்கு சொந்தமான எஸ்.என்.ஆர் ரைஸ் மில்லில் இருந்து பல நூறு டன் அரிசி மூட்டைகளை திருச்சி மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சட்டமன்றத்தில் பேசும் போது, “நான் ஒரு விவசாயி””, என பெருமையாக பலமுறை பதிவு செய்திருக்கிறார். இது வெறும் பேச்சுக்காக மட்டுமல்ல. விவசாயத்தின் அத்தனை நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். எந்தப் பயிரை எப்படி விளைவித்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பதை அனுபவம் பூர்வமாக விளக்குகிறார் அந்த அளவுக்கு நேருவின் நாடி நரம்புகளில் கூட விவசாயம் உரமேறிக் கிடக்கின்றன.

ஆஸ்திரேலியா சென்று அங்கிருந்து அரிய வகை மாடுகளை வரவழைத்து தனது பண்ணையில் வளர்த்து வருகிறார்.

கே.என்.நேரு - விவசாயம்
கே.என்.நேரு – விவசாயம்

சமீபத்தில் கே.என்.நேரு அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய அப்பா மிகப்பெரிய விவசாயி. என்னுடைய தாத்தா காலத்திலிருந்தே விவசாயம் தான் எங்கள் முக்கியத் தொழில். அரிசி ஆலையும் வைத்திருக்கிறோம். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலைப் பார்த்துக் கொள்கின்றனர். நான் விவசாயத்தைக் கவனித்து வருகிறேன். எனக்கு விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இதைச் சொல்வது எனக்கு பெருமை தான். என்னுடைய அப்பா வழியில் எங்களுக்கு நிலபுலன்கள் நிறைய உண்டு. என்னுடைய மனைவியும் விவசாயத்தில், என்னைப் போலவே மிகுந்த ஆர்வம் கொண்டவர். எங்கள் பூர்விக நிலங்களை அவர் தான் பார்த்துக் கொள்கிறார்.

நான் கூட விவசாயத்தில் சில சமயம் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், அவர், இரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன்படுத்தியதே கிடையாது. மாட்டுச் சாணம், இலை தழைகள், பஞ்சகவ்யா போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யும் இயற்கை விவசாயத்தில், உறுதியாக இருக்கிறார்.

திருச்சியில் இருக்கும் நாட்களில், எனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அதிகாலையில் எழுந்து செய்தித்தாள்களைப் படித்து விட்டு, தோட்டத்திற்குச் சென்று விடுவேன்.  அதன்பின், கட்சித் தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகள், கட்சிப் பணிகள் முதலியவற்றைப் பார்த்துவிட்டு, மாலையிலும், தோட்டத்திற்குச் சென்று விடுவேன். பெரும்பாலும் காலை, மாலை வேளைகளில் தோட்டத்திற்குச் சென்று விடுவது வழக்கம்.

மேலும், டில்லி முர்ரா, ஹரியானா கிர், காங்கேயம் மாடுகள் என நிறைய மாடுகளை வளர்த்து வருகிறேன். எங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயமாகவே கொண்டு செல்வதற்காகத் தான், மாடுகளை வளர்த்து வருகிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வயல்வெளியில் செலவிடும் நேரம் என்பது ஒரு தனி சுகம் தானே?’’ “எங்கள் பரம்பரை விவசாயம் மிளகாய், மல்லி பயிரிடுவது. அதற்கு வேலை செய்ய சரியான ஆட்கள் கிடைக்காத காரணத்தால், அந்தப் பயிர்களைக் குறைத்துக் கொண்டு நெல், கரும்பு, மா, வாழை, தென்னை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, புளி, சோளம் போன்றவற்றைப் பயிர் செய்து வருகிறோம்.

எங்கள் வயலில் விளையும் நெல்லை, எங்கள் ஆலையிலேயே அரைத்து, அதிலிருந்து வரும் தவிட்டை, எங்கள் மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துகிறோம். அந்த மாடுகளின் சாணத்தை, எங்கள் நிலத்திற்கே உரமாக்குகிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணியில் இருப்பவர்களுக்கு நிகரான மரியாதை விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

விவசாயம் என்பது எங்கள் உடம்போடும் உயிரோடும் கலந்தது. எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும், நான் பதவியில் இருந்த போதும் சரி, பதவியில் இல்லாத போதும் சரி, விவசாயத்தை விட்டதில்லை. விவசாயமே என் உயிர் மூச்சாக இருந்து கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு நான், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் கூட, அதை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டு, குலையாத அதே ஈடுபாட்டோடு விவசாயத்தைத் தொடர்கிறேன். இது என் இறுதி வரை தொடரும்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்ன்னு பாடுன பாரதி, விவசாயத்தைத் தான் முதல்ல சொன்னாரு. ஆனா, இன்னிக்குத் தொழிலுக்குத் தான் அரசாங்கம் முன்னுரிமை குடுக்குது. தொழிற்சாலையில உற்பத்தி செய்யிற பொருள்கள் பணத்தைக் கொடுக்கும். சோத்தைக் கொடுக்குமா?”. “செய்ய முடியாதது எதுவும் இல்லை. கட்சிப்பணி, தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகள் முதலியவற்றை முடித்து விட்டு, மீதமிருக்கும் நேரத்தில் தான் வயலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளேன். எத்தனை பிஸியாக இருந்தாலும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது வயலுக்குச் சென்று விடுவேன். அதற்கு ஏற்ற வகையில், நேரத்தை ஒதுக்கி விடுவேன்.” என்கிறார் சந்தோஷமாக.

பிறந்த நாளில் கலைஞருக்கு மரியாதை
பிறந்த நாளில் கலைஞருக்கு மரியாதை

சரியான நேரத்தில் உதவுபவர்கள் தான் உண்மையாகவே கடவுள் என்று சொல்வார்கள். அந்த வகையில் கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சியில் இருந்தாலும் கட்சி காரர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அவர் சில சமயங்களில் கடவுளாகவே காட்சி தருகிறார் என்ற கமண்ட்ஸ் உண்டு.

நம்ம ஊர் மீசைக்காரர்

நம்ம ஊர் மீசைக்காரர் என கட்சியினரால் அன்போடு கூறப்படும் கே.என்.நேரு. கஷ்டப்படும் தொண்டருக்கு அள்ளிக் கொடுப்பதும், கட்சித் தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டபடுத்துவதும் அவரது தனி சிறப்பு. இவை அனைத்திற்கும் நேருவுக்கு கைகொடுப்பது அவரது குடும்பத்தினருடன் இணைந்து பார்க்கும் சகித தொழில்கள் தான்.

திமுக தலைவரிடம் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெறும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு
திமுக தலைவரிடம் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெறும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு 

திருச்சியிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் உள்ள லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர்தான் நேருவுக்கு சொந்த ஊர். அப்பா நாராயணசாமி ரெட்டியார், அம்மா தனலெட்சுமி, உடன் பிறந்தவர்கள் ஏழுபேர், அதில் மூத்தவர் நேரு. தென்னந்தோப்புகள், நெல் விவசாயம், நிலபலம், என பலநூறு ஏக்கர் என பெருநிலக்கிழாரான நாராயணசாமி, ஒரு காங்கிரஸ்காரர். அந்த விசுவாசத்தால் 1952ம் ஆண்டு பிறந்த மூத்தமகனுக்கு நேரு என்றும், மகளுக்கு காந்தி என பெயரிட்டார். அவரின் மருமகனுக்கு ‘ஜனநாயகம்’ என பெயர் வைத்தார். அந்த அளவுக்கு அரசியல் மீது அக்கறையுள்ள குடும்பம். 1960ம் ஆண்டு தமிழகத்தில் திமுக செல்வாக்கு பெற துவங்கிய காலகட்டம். மாற்று அரசியல் தேடி நாராயணசாமி காங்கிரசிலிருந்து திமுகவுக்கு சென்றார்.

புல்லட் மீது காதல் கொண்டவர்

பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் திமுக நோக்கி நகர்ந்தார்கள். அந்தக் குடும்பத்தின் வாரிசான நேரு, அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞராகவும், அந்த ஊர் கிராம மக்களுக்கு உதவும் இளைஞராக வளர்ந்தவர், ஊருக்குப் பிரச்னை என்றால் நேருவிடம்தான் ஓடுவார்கள். புல்லட்டில் வலம் வரும் “நேரு அப்போதே, போக்குவரத்து வசதிகள் குறைவான அந்த காலத்தில் மண் ரோட்டில் நடந்துவருபவர்களுக்கு வாங்க வந்து ஏறிக்கோங்க என ‘லிப்ட்’ கொடுப்பார். ஒரேநேரத்தில் 5 பேரைக்கூட ஏற்றிப் போவார் நேரு. இப்போதும் ஊருக்குப் போனால் காரை ஓரமாக வைத்துவிட்டு புல்லட்டில் வலம்வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கலகல சிரிப்பு, எடக்குமுடக்கான பேச்சு

கே.என்.நேரு எந்த இடத்தில் இருந்தாலும் கலகல என சிரிக்கும் சிறப்பு கொண்டவர். ஆனால் அவர் பேசும் போது டேய், யோவ் என அது யாராக இருந்தாலும் பேசிவிடும் எடக்குமுடக்குமான பேச்சும் எதார்த்தமாய் அமைந்துவிடும். சில சமயங்களில் அவர் அப்படித்தான். அந்த கிராமத்து பாஷை அப்படியே வந்துவிடும். உள்ளே ஒன்று வைத்து வெளியே எதுவும் அவர் பேசுவதில்லை. திடீரென யாராக இருந்தாலும் தோளில் கை போட்டு என்னப்பா எப்படி இருக்குற… என்ற விசாரணையில் அவருடன் ஒன்றாகி விடும் மனநிலை ஏற்பட்டு விடும். இப்பவும் சொல்கிறோம், திருச்சியின் தவிர்க்க முடியாத வரலாற்று கல்வெட்டு கே.என். நேரு என்பதை உணர்ந்து கொள்வோம்.

தமிழகம் தவிர்க்க முடியாத சக்தி

கே.என்.நேரு  - அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும்
கே.என்.நேரு  – அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும்

திருச்சியில் மட்டும் கோலோச்சிய கே.என்.நேரு. இன்று தமிழகம் முழுவதுமே தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது அனைவரையும் வியக்க வைக்கிறது. அதற்கு காரணம் நிறைய வயசை தாண்டினாலும், அந்த சுறுசுறுப்பு வேறு யாருக்கும் வராது என்பதே உண்மை. தமிழ்நாட்டின் உட்கட்சி விவகாரங்களில் கூட நேரடியாக களம் இறங்கி சமாதானப்படுத்தும் பாங்கு அனைவரையும் ஈர்த்துள்ளது என்றே சொல்ல வேண்டும். ஒரே வார்த்தை வாய்யா பார்த்துக்கலாம். போய்யா இதெல்லாம் சின்ன விஷயம். நான் இருக்கேன் இல்லை விட்டுடுவேனா போன்ற அந்த சிலாங் மூலமே நிறைய பிரச்னைகளை தீர்த்து விடுகிறார். அவரின் சுறுசுறுப்பு, பேராண்மை, செயல்பாடு, எதற்கும் அசராத தன்மைகள் எல்லாமே இன்றைய அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாக, முன் உதாரணமாக இருக்கும் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் வருங்காலம் அல்லது தமிழக வரலாற்றில் அவரை தவிர்த்து எழுதி விட முடியாத உச்சத்தை அவர் தொட்டு விடுவார் என்றே கூறப்படுகிறது. அத்தகைய ஈரநெஞ்சம் கொண்ட திருச்சியின் அஞ்சாநெஞ்சன் அமைச்சர் நேருவின் பிறந்தநாளில் நாமும் வாழ்த்துவோம்… வெல்க அவரது சிந்தனையும், செயல்களும்.

தொகுப்பு – அங்குசம் – செய்தியாளர் குழு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.