பொதுமக்களை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் ! கலெக்டர் செய்த அதிரடி !
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் தளுகை ஊராட்சிக்குட்பட்ட மங்கபட்டி புதூரில் ரூபாய் 6.45 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் அமைப்பதற்காக கடந்த 15 7 2024 அன்று தொடக்க விழா நடைபெற்றது. இதை அடுத்து அங்கு 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் சமத்துவபுரம் வீடுகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிலையில் சமத்துவபுரத்தில் தளுகை ஊராட்சிக்குட்பட்ட முருங்கபட்டி, மங்கப்பட்டி , புதூர்,பாதர் பேட்டை கொப்பம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் தேர்வான பயனாளிகள் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்தவர்களுக்கும் , வசதி படைத்தவர்களுக்கும், அந்த ஒன்றியத்தில் வசிக்காதவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக கூறியும், தங்களுக்கு சொந்த வீடு சொத்து ஏதும் இல்லாமல், சமத்துவ புரத்தில் வீடு பெற தகுதி இருந்தும் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கடந்த 4-ம் தேதி உப்பிலியபுரம் யூனியன் அலுவலகத்தின் முன்பாக ஒன்று கூடி கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரான செந்தில்குமார் என்பவர், கோரிக்கை வைத்து கண்ணீர் மல்க தங்களது குறைகளை கூறிய பெண்களிடம் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களை மிரட்டும் தொனியில் , ஒருமையில் பேசியதாகவும், மேலும் அதனைத் தொடர்ந்து உப்பிலியபுரத்தில் இருந்து தளுகை ஊராட்சிக்கு சென்ற பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் த.பாதர் பேட்டையில் வீடு கிடைக்காத ஆத்திரத்தில் , துறையூர் தம்மம்பட்டி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் அந்த இடத்திற்கு, திருச்சியிலிருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கங்காதாரணி மங்கப்பட்டி புதூருக்கு வந்தும் கூட , உப்பிலியபுரம் யூனியன் ஆபிசில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் இது பற்றி தெரிந்தும் உடனடியாக செல்லாமல் அலுவலகத்திலேயே இருந்ததாகவும், யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசாரையும் சாலை மறியல் நடந்த இடத்திற்கு செல்ல விடாமல் பிடிஓ செந்தில்குமார் தடுத்ததாகவும், இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் செல்போனில் பி டி ஓ செந்தில்குமாரை தொடர்பு கொண்டு ஏன் இன்னும் சம்பவ இடத்திற்கு செல்லாமல் யூனியனில் இருக்கிறீர்கள் உடனடியாக செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்ததை தொடர்ந்து அங்கு சென்றுள்ளார்.
மேலும் அடுத்த நாள் முசிறி கோட்டாட்சியர் அவசர கூட்டம் தொடர்பாக காலை 9 மணிக்கு முசிறிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரை வரச் சொல்லி உள்ளார். மீண்டும் கோட்டாட்சியர் தொடர்பு கொண்ட போது பி டி ஓ வின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகார் கலெக்டருக்கு தெரியவந்ததை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலரான செந்தில்குமார் சஸ்பெண்ட் ஆவது இது மூன்றாவது முறை ஆகும்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்வதற்கு முதலாவது காரணங்களில் உப்பிலியபுரம் ஒன்றியம் ஆலத்துடையான் பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பணி நாளன்று பள்ளிக்கு விடுமுறை அளித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தியது தொடர்பான புகாரிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் அவர் வாகன விபத்து ஏற்பட்டு விடுமுறை எடுத்ததாகவும் அது குறித்து மாவட்ட ஆட்சியர் இடத்தில் எவ்வித தகவலும் அளிக்காமல் விடுமுறையில் இருந்ததால், உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை, எஸ்ஐஆர் பணிகளை விரைவாக செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளார் என்ற காரணத்திற்காகவும், இரண்டாவது தங்களது கோரிக்கையை கண்ணீரும் கம்பலையுமாக கூறிய பெண்களிடம் மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசியதும்.
மூன்றாவதாக அலுவலகத்தில் அனைவரிடமும் கடுமையாகவும் காரணம் இன்றி எந்தவித பணிகளையும் காலதாமதப்படுத்துவதாகவும் எந்தவொரு கோப்புகளிலும் கையெழுத்திடாமல் சக ஊழியர்களை காத்திருக்க வைப்பதாகவும், முசிறி ஆர்டிஓ அலுவல் காரணமாக கூட்டத்திற்கு அழைத்தும் செல்லாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் மூன்றாவது முறையாக உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தற்போது தான் தாங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாக கூறுகின்றனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.