கூட்டணி முடிவு ; மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம் – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு க ஸ்டாலின் பேச்சு!
டிசம்பர் 18 நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை திமுக பெற வேண்டும், அதற்கு ஒவ்வொரு நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் கட்சியினர் தீவிரம் காட்ட வேண்டும், கட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக இளைஞர்களை பெரும்பான்மையாக கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்படும் பூத் கமிட்டியில் 2 பெண்கள், 4 இளைஞர்கள் உட்பட 10 நபர்கள் இடம் பெற வேண்டும் என்றும் கூறினார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, கூட்டணியை முடிவு செய்வது என்று அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட செயலாளர்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின் தவறு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதைக் கொண்டாடுவது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் பேசினார்.