திமுக கிளைச் செயலாளர் பதவி ரூ1 கோடி! சுவரொட்டிகளால் தஞ்சையில் பரபரப்பு
திமுக கிளைச் செயலாளர் பதவி ரூ1 கோடி!
சுவரொட்டிகளால் தஞ்சையில் பரபரப்பு
திமுகவில் கிளைச் செயலாளர் பதவிக்கு ஒரு கோடி ரூபாய் இருந்தால்தான் வரமுடியும் என ஒன்றியச் செயலாளர் சொல்வது உண்மையா என அக் கட்சி தலைமையிடம் கேட்டு தஞ்சாவூரை அடுத்துள்ள பூதலூர் பகுதிகளில் ‘பாதிக்கப்ட்ட / பாவப்பட்ட தொண்டர்கள்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதியில் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூதலூர் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் மருதகுடி, கோனார் மேட்டுத் தெரு உள்ளிட்ட பேருந்து நிறுத்தப் பகுதிகளில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு ஓர் கோரிக்கை!”
எனத் தொடங்கி,
பூதலூர் ஒன்றியச் செயலளார் மீதான திமுக தொண்டர்களின் அதிருப்தியை கட்சி தலைமைக்கு வெளிப்படுத்தும் வாசகங்கள் அடங்கிய கேள்விகள் அச் சுவரொட்டியில் கேட்கப்பட்டுள்ளன.
திமுகவில் கிளைச் செயலாளர் ஆவதற்கு ஒரு கோடி ரூபாய் இருந்தால்தான் வரமுடியும் என ஒன்றியச் செயலாளர் சொல்வது உண்மையா? என்றும்,
பூதலூர் தெற்கு ஒன்றியத்தில் 32 கிளைகளை பதிவு செய்யாமலும், பல கிளைச் செயலாளர்களை பதவிகளை எடுத்தும் கட்சி நடத்தும் ஒன்றயச் செயலாளருக்கு ஆதரவாக இருப்பது திருவையாறு சட்டப் பேரவை உறுப்பினரா? என்றும், பூதலூர் தெற்கு ஒன்றயச் செயலாளர் முருகானந்தம் மீது பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் அச்சுவரொட்டியில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிவுறுத்தும் வகையில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
இவரின் (ஒன்றியச் செயலாளரின்) செயல்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியுமா? எனவும் கேட்கப்பட்டுள்ளது.
இதுபற்றி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரின் கருத்தறிய, 777 என்று முடியும் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்ந்து மூன்று முறை தொடர்புகொள்ள முயற்சித்தும், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.