ஆளுநரை எச்சரிக்கும் திமுக – முதல்வரின் மாஸ்டர் பிளான் !
தமிழக மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது முதல் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. இதைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சி எடுக்கும் என்று திமுக கூறியது. இந்த நிலையில் திமுக அரசு வெற்றி பெற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் இதற்கு முன்பு நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கேட்டு விரிவான அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்தமான தீர்மானத்தையும் தமிழ்நாடு அரசு ஆளுநரின் கவனத்திற்கும் அனுப்பியது. ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் திடீரென்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதன் பிறகு மீண்டும் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அவசர கூட்டத்தை நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஒரு மானதாக நிறைவேற்றி இருக்கிறது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஆளுநரும் கண்டிப்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக கூறியதாக தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்த அதே வேளையில் இந்திய நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு, தமிழ்நாடு அரசு கொண்டு வந்து இருக்கக்கூடிய நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தன்னுடைய வாதத்தை தொடங்கினார். ஆளுநர் முன்பு நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய செயல் வெட்கக்கேடானது என்று ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் உடனடியாக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார். அப்போது திமுக எம்பிக்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
சென்னை கிண்டியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்த அதே வேளையில் பாராளுமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக திமுகவினர் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான தன்னுடைய மாஸ்டர் ப்ளானை செயல்படுத்த தொடங்கிவிட்டார், இன்றைய நிகழ்வு ஆளுநருக்கான எச்சரிக்கை என்று அறிவாலய வட்டாரங்களில் பேச்சு எழுந்து வருகிறது.