அங்குசம் பார்வையில் ‘டோன் ட்ரபுள் தி ட்ரபுள்’
தெலுங்கு சினிமாவின் மெகா டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படத்தை ஷஷாங் யேலேட்டி டைரக்ட் பண்ணியுள்ளார். ஃபஹத் பாசில், பேபி ஷாரா பலேகர், மகேஷ் மஞ்ச்ரேக்கர், செளரப் சச்தேவா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : பிராட் ஃபிரான்ஸிஸ், இசை : கால பைரவா, எடிட்டிங் :பிரவீன் ஆண்டனி, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் சூரி[ ஃபஹத் பாசி] லோக்கல் தாதா அஸ்லம் பாய் என்பவரிடம் எடுபிடியாக இருக்கிறார். அந்த அஸ்லம் பாய், மனித உறுப்புகளைத் திருடி விற்கும் கும்பலின் தலைவன். கிடா சண்டை ஒன்றில் திருட்டுத்தனம் பண்ணி ஜெயிக்கிறார். ஒருகட்டத்தில் அஸ்லம் பாய்க்கு 25 லட்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார் சூரி. இதற்காக பணக்கார குழந்தையைக் கடத்த திட்டம் போட்டு பள்ளிக்கூட வாசலில் மேஜிஷியனாக நிற்கிறார். இவரைப் பார்த்து வரும் திவ்யா[ஷாரா பலேகர்]வைக் கடத்துகிறார்.
முதலில் நார்மலாக இருக்கும் திவ்யாவின் ஆக்டிவிட்டீஸ் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. ஒருகட்டத்தில் தான் சூரிக்குத் தெரிகிறது, திவ்யா என்ற குழந்தை உயிருடன் இல்லை. தான் கடத்தி வந்தது ஒரு பேயை என்பது. திவ்யா எப்படி இறந்தாள்? திவ்யாவின் பெற்றோர் யார்? அவர்களின் கதி என்ன? என்பதற்கு க்ளைமாக்ஸில் விடை சொல்கிறது இந்த ‘டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’.
இந்த மாதிரியான கேரக்டர்கள் என்றால் ஃபஹத் பாசிலுக்கு அரவனை பாயாசம் சாப்பிடுவது மாதிரி. ஆம்புலன்ஸ் டிரைவராக அவரின் எண்ட்ரி சீனே செம கலகலப்பு. அதன் பின் பேபி ஷாராவைக் கடத்தி வந்து, அவரை, அவர் மட்டும் தான் பார்க்க முடியும், தொட முடியாது, மற்றவர்கள் கண்களுக்கு ஷாரா தெரியமாட்டாள் என்பது தெரிந்ததும் மனுஷன்படும் அவஸ்தை நடிப்பு, க்ளைமாக்ஸில் ஷாராவின் அம்மா-அப்பாவைக் காப்பாற்றிவிட்டு, ஷாரா இறந்ததையும் அவளுக்கு உணர்த்திவிட்டு, உயிர்விடும் காட்சியில் அசத்திவிட்டார் ஃபஹத் பாசில்.
“சூரி நீயும் நானும் பெஸ்ட் ஃப்ரண்ட், உனக்கு யாருமில்லைன்னு கவலைப்படாதே, எங்க அம்மாவையும் அப்பாவையும் கண்டு பிடிச்சதும் நீ எங்களோடவே இரு” என மழலை மொழியில் பேசுவது, ஃபஹத்தை வில்லன்கள் பொளக்கும் போது, தன்னிடமுள்ள பவரைக் காட்டி பந்தாடுவது, உட்பட எல்லா சீன்களிலும் மனதில் நிற்கிறாள் பேபி ஷாரா. இந்த ஷாராவுடன் வரும் சோஃபி என்ற நாயும் கவனம் ஈர்க்கிறது.
மெட்ரோ ரயில் ஆக்ஷன் சீனில் பின்னிப் பெடலெடுத்துவிட்டார் கேமராமேன் பிராட் ஃபிரான்சிஸ். காலைபைராவின் இசையும் ஓகே.தான்.
கொடுத்த காசுக்கு எந்த ட்ரபுளும் வராது.
அங்குசம் பார்வையில் ‘டோன் ட்ரபுள் தி ட்ரபுள்’ 49/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.