தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறை மாணவர் !
தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கு பரிசு வழங்கும் விழா, 07.02.2025 அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது.
இத்திட்டம் மூலமாக மரபுக் கவிதை, புதினம், சிறுகதை, நுண் கலை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம் என 33 வகைப்பாடுகளில் நூல்கள் பெறப்பட்டு ஒவ்வொரு நூலையும் மூன்று அறிஞர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்படுகின்றடன.
விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் பேசுகையில், ”ஒவ்வொரு ஆண்டும், எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படுகின்றன.
”நுால் ஆசிரியருக்கான பரிசுத்தொகை 50,000 ரூபாயாகவும், பதிப்பகத்தாருக்கான பரிசுத்தொகை, 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களை தவிர்த்து, இந்த முறை புதிய படைப்பாளிகளுக்கு பரிசுகள் வழங்குகிறோம்,” என்றார்.

தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு 33 நூலாசிரியர்களுக்கும் , அவற்றைப் பதிப்பித்த 33 பதிப்பாளருக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவ்விழாவில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில், ‘சிவாலயம்’ வெளியீடான ‘தமிழ்ச் சமயச்சான்றோர் தணிகை மணி வ.சு.செங்கல்வராய பிள்ளை’ எனும் நூல் தேர்வானது. இந்நூலுக்கான பரிசினை நூலாசிரியர், செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறை ஆய்வு மாணவர், பா. எழில் செல்வன் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் வே. ராஜாராமன், இயக்குநர் ஔவை ந.அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
— அங்குசம் செய்திப்பிரிவு.