அவலத்தில் அரசுக்கல்லூரிகள் ! Editorial (ஆசிரியர் தலையங்கம்)
”மூன்று வருடமாக எங்களுக்கு பாடம் நடத்த வகுப்பறைக்கே வரவில்லை” என்பதாக பெண் பேராசிரியருக்கு எதிராக ஒரு தரப்பு மாணவர்களும்; ”பேராசிரியர்களுக்கிடையிலான ஈகோ பிரச்சினையில் மாணவர்களை தூண்டிவிடுகிறார்” என்று மற்றொரு தரப்பு மாணவர்களுமாக அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தியிருக்கும் விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி, துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் அரங்கேறியுள்ள இந்தக்கூத்து, அரசு கலைக்கல்லூரிகளில் நிலவும் கல்விச்சூழல் குறித்த விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
அரசு கல்லூாிகள்
திருச்சி மாவட்டத்தில், வேறு எந்தக் கல்லூரியிலும் சேருவதற்கு இடம் கிடைக்காத நிலையில் அவர்களின் கல்லூரி கல்விக்கான ஒரே வாய்ப்பாக இருந்து வருவது துவாக்குடி அரசு கலைக்கல்லூரிதான். இந்த கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை என்றால், அந்த மாணவன் வேறு எந்த ஒரு கல்லூரியிலும் சேர்ந்துவிட முடியாது என்பதுதான் நடைமுறை உண்மையாகவும் இருந்து வருகிறது.
இதுபோன்ற பின்னணியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களை நல் வழிநடத்த வேண்டிய பேராசிரியர்களே வகுப்புக்கு செல்லாமலும்; முறையாக பாடம் நடத்தாமலும்; ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துவேன் என்று அடம்பிடிப்பதும்; இதுகூடவா தெரியாமல் வந்துவிட்டாய் என்று ஏளனமாக பேசுவதையும் எப்படி புரிந்து கொள்வது?
அதேபோல், குறிப்பிட்ட பேராசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டை உரிய வழிமுறைகளில் அணுகாமல் மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதையும் எப்படி எடுத்துக் கொள்வது? மாணவர்களின் அடிப்படை வசதிகளுக்கான போராட்டமாகவோ, கல்வி கற்கும் உரிமைகளுக்கான போராட்டமாகவோ அல்லாமல், பேராசிரியர்கள் இருதரப்புக்குமிடையில் சிக்கிக்கொண்டு மாணவர்கள் தவிக்கிறார்கள் என்பது அவலமான ஒன்று.
குறிப்பாக, துறைத்தலைவர், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கே செல்லாமல் ஒரு பேராசிரியர் மூன்று ஆண்டுகளாக பாடமே நடத்தாமல் மாதந்தோறும் சம்பளம் வாங்கிவிட முடியுமா? அதுவும் தொட்டதற்கெல்லாம் போராட்டத்தை முன்னெடுக்கும் எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பு செயல்படும் கல்லூரியில் இது சாத்தியமா? இன்னும் சொல்லப்போனால், பேராசிரியர்களின் சங்கமான தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகமும் இந்தக் கல்லூரியில் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களின் கவனத்திற்கும்கூட எட்டாமல் இருந்தது எப்படி?” என்ற கேள்வியும் எழுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி மாவட்டத்திலேயே உள்காட்டு பகுதியில் கட்டப்பட்ட குமுளூர் அரசு கலைக்கல்லூரிக்கு முறையான பேருந்து வசதி இல்லாமல் அவதியுற்று வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக, பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில்தான் கல்லூரி இயங்கி வருகிறது. பல கல்லூரிகளில் போதுமான கழிவறைகளோ, தண்ணீர் வசதியோ இல்லாமல்தான் இயங்கி வருகின்றன.
அடுத்து, மூன்றில் இரண்டு பங்கு கௌரவ விரிவுரையாளர்களை கொண்டுதான் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவர்களும் பணிநிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். உயர் கல்வித்துறை அமைச்சர் தலையிட்டுக்காக காத்திருக்கிறது, அரசு கல்லூரிகளில் நிலவும் அவலம் !
– Editorial (ஆசிரியர் தலையங்கம்)