செலவு பிடிக்கும் பல்சிகிச்சை மருத்துவம் – சீர்படுத்துமா அரசு?
செலவு பிடிக்கும் பல்சிகிச்சை மருத்துவம் – சீர்படுத்துமா அரசு?
‘பல் போனால் சொல் போச்சு சொல்லைக் காக்க பணம் போச்சு’ என்ற நிலையில் தான் உள்ளது இன்றைய பல் மருத்துவம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் நாட்டில் அதிநவீன வசதிகள் கொண்ட இன்றைய பல் மருத்துவம் நடுத்தர மக்களுக்கும் ஏழைகளுக்கும் எட்டாக்கனியாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பற்களை பாதுகாக்கும் சிகிச்சையான வேர்சிகிச்சை, ஈர் சம்மந்தப்பட்ட சிகிச்சை, சிலிக்கான் பல் மாதிரிபல் செட் பொருத்துதல், லேசர் சிகிச்சை, பல்வரிசை சீரமைத்தல் பல் தாடை சீரமைத்தல் போன்ற சிகிச்சைகள் மற்றும் பல் ஈர் புற்றுநோய் சிகிச்சை ஆகிய பல்வேறு பிரச்சனைகளுக்கு அதிநவீன வசதிகளைக் கொண்ட தரம் வாய்ந்த சிகிச்சைகள் கிடைக்கிறது. என்றபோதிலும், அதற்கான செலவுகள் என்பது மிக அதிகமாக உள்ளது. அது சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பது என்பது அரிது. பணமில்லாதவர்கள் பற்களை இழந்தாக வேண்டிய நிலையே உள்ளது என்பது தான் வேதனை.
தமிழகத்தில் சென்னையில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் பிற மாவட்டங்களில் 18 சுயநிதிக்கல்லூரிகளும் உள்ளன. அதில் முறையே அரசு கல்லூரிகளில் 100 இடங்களும் சுயநிதிக் கல்லூரிகளில் 1520 இடங்களும் உள்ளன. மேலும் 6 நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் 560 இடங்கள் என மொத்தம் 2180 மாணவர்கள் ஒரு வருடத்திற்கு பல் மருத்துவம் படித்து வெளியே வருகின்றனர். என்றாலும் பல் மருத்துவம் என்பது எட்டிப்பிடிக்க வேண்டிய உயரத்தில் தான் உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பல் மருத்துவர்களிடம் பேசினோம்.
“பல் மருத்துவத்தில் பொருளாதார சிக்கல் என்பது மக்களுக்கானது மட்டுமல்ல மருத்துவர் களுக்கானதாகவும் உள்ளது. மற்ற மருத்துவ சிகிச்சை படிக்கும் மாணவர்கள் போல் எங்களுக்கான பயிற்சிகள் வெளியே தனியார் மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. பெரும்பாலான மருத்துவமனைகளில் பல் மருத்துவ பிரிவு என்பது கிடையாது. அதனால் வேலைவாய்ப்பு என்பது மிகக் குறைவு. அதேபோல் கல்லூரியில் எடுக்கும் பயிற்சிக்கு பிறகு மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதற்கான கருவிகளின் அதிக விலை கொடுத்து வாங்கி பல் மருத்துவமனை ஆரம்பிக்க வேண்டும். மேலும் மக்களிடம் பல் சிகிச்சை சார்ந்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதால் பல் மருத்துவர்களை அணுகும் தேவைகள் குறைந்து போவதாலும் கூட பல் மருத்துவர்களின் பொருளாதார நிலை பெருமளவு பாதிக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த பல் மருத்துவ பேராசிரியர் மேற்பார்வையின்கீழ் தான் பயிற்சியெடுக்கிறோம். சிகிச்சையின் தேவைகளுக்கேற்ப அடுத்தடுத்த கட்ட இளநிலை முதுநிலை பயிற்சி மாணவர் களைக் கொண்டு சிறப்பான சிகிச்சையை தான் தருகிறோம்.
பொதுவாக மருத்துவத்துறையினை பொறுத்த வரை மக்களுக்கு மருத்துவர்கள் மீது நம்பிக்கை வேண்டும், இன்றைய சூழ்நிலையில் மருத்துவர்களை சந்தேக கண்கொண்டு பார்க்கும் மனநிலையே மக்களிடம் உள்ளது. இது மக்களின் அறியாமையை தான் காட்டுகிறது. குறைந்த கட்டணம் வாங்குபவர்கள் தரமற்ற சிகிச்சை கொடுப்பார்கள் என்பது அவர்களின் எண்ணம். இந்த அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி காசு பார்க்கும் மருத்துவர்களும் உண்டு” என்கிறார்கள்.
இது குறித்து குணா பல் மருத்துவமனையின் பல் சிகிச்சை மருத்துவர் ஆர்.பிரசன்னா சம்பத் கூறும் போது, “இன்றைய பல் மருத்துவத்தில் அதிநவீன வசதிகள் ஏராளமாக வந்துவிட்டது. வலிகளோ இரத்த கசிவோ இல்லாமல் காலவிரயமும் இல்லாமல் மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள் இன்று வந்துவிட்டது. அதற்கான கட்டணம் என்பது அதிகம் தான். ஆனால் அதற்கான கருவிகளின் விலையும் அதிகம். பற்களுக்கு பயன்படுத்தும் மருந்துப் பொருட்களின் விலையும் அதிகம். தரமான நவீன வசதிகளுடன் சிகிச்சை வேண்டும் என்றால் செலவு செய்துதான் ஆகவேண்டும். வேறுவழியில்லை.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பற்களுக்கு பயன்படுத்தும் சிலிக்கானை இந்தியா உட்பட நிறைய நாடுகள் தயாரிக்கிறது. அதில் சீன நாட்டு சிலிக்கான் தரமானதாக உள்ளது. அதன் விலை மற்ற நாட்டு சிலிக்கானைவிட விலை சற்று கூடுதல் தான். நோயாளிகளின் இயலாமைக்காக தரமில்லாத மருத்துவ முறையை கையாள்வதும் தவறு. பல் எடுப்பதாகட்டும் பல் கட்டுவதாகட்டும் அதில் தரமிருக்க வேண்டும். அப்போதுதான் நோயாளிகளுக்கு அது மிக நீண்ட கால தீர்வாக அமையும். தரமற்ற சிகிச்சை தந்தோம் என்றால் அதனால் ஏற்படும் நஷ்டம் நோயாளிகளுக்கு தான். மீண்டும் மீண்டும் மருத்துவமனை வரவேண்டியிருக்கும். இதனால் அவர்களின் பணமும் விரயமாகும்.
அதுமட்டுமல்ல முன்பெல்லாம் ஒரு பல் ஈரில் பாதிப்பு ஏற்பட்டால் ‘பிரிட்ஜ்’ என்ற முறையில் சிகிச்சை கொடுத்தோம். இரண்டு பக்கமும் உள்ள பல்லில் துளையிட்டு பிடிப்பாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய பல் நிறுத்தும் முறை தான் ‘பிரிட்ஜ்’ முறை. இப்போது அப்படியல்ல. மற்ற பற்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த பற்களின் ஈர்ப்பகுதியில் இம்பிளண்ட் என்ற “நடுதல்” முறையில் கத்தி கொண்டு கிளறாமலும் இரத்தம் வராமலும் பொருத்தும் வசதி வந்துவிட்டது. இதைப்போலவே பல் வரிசை சீரமைத்தலில் முன்பு போல் கம்பிக் கட்டிக் கொண்டு இரண்டு மூன்று முறை மருத்துவரை பார்க்க அலைய வேண்டியதில்லை. ‘அலைனர்’ என்ற கருவியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை பொருத்திக் கொண்டால் போதும். இதை பொருத்தியிருப்பது வெளியே கூட தெரியாது. இதைப்போன்று ஈறு பிரச்சினைகளுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன” என்றார்.
பல் மருத்துவத்தில் நோயாளிகளின் பொருளாதார அவலநிலை எப்படி உள்ளதோ அதே போன்று பல் மருத்தவர்களின் பொருளாதார ரீதியிலான அவலநிலையும் அதிகமாகவே உள்ளது. இதற்கான தீர்வு அரசிடமே உள்ளது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய அரசு பல் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லுரிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கனவே உள்ள அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவ பிரிவினை விரிவுப்படுத்த வேண்டும். தேவையான மருத்துவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். இதனால் மக்களும் மருத்துவர்களும் ஒருங்கே பயனைடைவார்கள். அப்போது தான் விளிம்பு நிலையில் உள்ள ஏழைகளுக்கும் பல் மருத்துவத்தில் தரமான சிகிச்சைகள் கிடைக்கும்.
பல்லக் காட்டுங்க…
பல் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பல் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு என்பது மிகக் குறைவாக உள்ளது. சர்க்கரை வியாதி இருக்கிறது என்பதற்காக பல் மருத்துவம் செய்யாமலேயே காலம் கடத்திகிறார்கள் சிலர். இதனால் பல் தேய்மானம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அனைத்து பற்களையும் இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனோடு ஈருகளும் பாதிக்கப்பட்டு புற்றுநோயாக மாறக்கூடிய அபாயங்கள் உள்ளது.
சர்க்கரை நோய் என்பது நோயல்ல. அதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் போதும். அதுமட்டுமல்ல.. இரத்த கசிவே இல்லாமல் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை, அதேப்போல் குழந்தைகள் பல் சிகிச்சையும் விழப்போகும் பல் தானே என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. விழும் பற்களுக்கும் வரையறை உள்ளது. எப்போது எந்த வயதில் பல் விழவேண்டும் என்பதும், பிரச்சனைக்குள்ளான பற்களை எடுக்கலாமா வேண்டாமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். ஏனெனில் குழந்தையிலேயே முறையான சிகிச்சை கொடுத்துவிட்டால் பின்னாளில் வரும் 80% பல் பிரச்சினைகளை தவிர்க்கலாம்” என்றார்.