ஆளுநர் Vs முதல்வர் தொடங்கியது பனிப்போர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆளுநர் Vs முதல்வர் தொடங்கியது பனிப்போர்

ஆளுநர் இரவி தமிழ்நாடு அரசுக்கு இணையாக ஆட்சி நடத்துவதாக ஆளும் கட்சி மட்டுமல்லாது ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளும் கூறிவந்தன. நீட் விலக்கு மசோதா உட்பட 18 மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் (கள்ள) மௌனம் காத்துவருவதாகவும் பல கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன. ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே பனிப்போர் இருந்துவந்தது. தற்போது பனி வெடித்துப் போர் தொடங்கியுள்ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

ஏப்ரல் 25 மற்றும் 26 நாட்களில்ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்டினார். “2047இல் உலகத் திற்கு இந்தியா தலைமை தாங்கும்” என்னும் பொருண்மையில் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங் கியது. இதில் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மட்டுமல்லாது, பேராசிரியர் மற்றும் இணைப்பேராசிரியர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்துக் கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஆளுநர் என்பதால்தான் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்று அழைக்கப்படுகின்றார். இது அரசியல்சாசனத்தில் இல்லை. வழிவழியாகக் கடைபிடிக்கப்படும் மரபு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஆளுநரின் அதிகாரம்
துணைவேந்தர்களை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நியமிக்க முடியாது. மாநில அரசு பரிந்துரைத்த 3 பேர் அடங்கிய குழுவிலிருந்து ஒருவரை ஆளுநர் நியமனம் செய்வார். அதன் பின் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது, நடைபெறும் ஆட்சிக்குழுக் கூட்டத்திற்கு வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தலைமை தாங்குவார். இதைத் தவிரப் பல்கலைக்கழகங்களின் எந்தப் பணியிலும் வேந்தர் என்ற போர்வையில் ஆளுநர் தலையிடமுடியாது.

ஆளுநரின் மக்களாட்சிக்கு இணையான ஆட்சி
ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டிற்குப் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தர் பொறுப்பிலிருக்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அழைக்கப்படவில்லை. அவருக்குத் தெரிவிக்கப்படவுமில்லை. இதன்மூலம் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட் சிக்கு இணையாக ஓர் ஆட்சி நடத்துகிறார் என்பது சந்தேகம் இன்றி உண்மையாகி உள்ளது.

மாநில அரசை கண்டுக்காமை
மாநில அரசின் ஆலோசனையின்றி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குரிய காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில் சுதாசேஷை யனுக்கு ஓராண்டு காலம் ஆளுநர் நீட்டிப்பு கொடுத்துள்ளார் என்பது மாநில அரசை ஒரு அரசாக ஆளுநர் நினைக்கவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது” என்றார்.

துணைவேந்தர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட பழைய நடைமுறைகள் என்ன? தற்போது என்ன மாற்றம் நடந்துள்ளது? என்பது குறித்து, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் AUT மாநில முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களிடம் கேட்டோம். அப்போது அவர்,

துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் முறை
‘துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே ‘துணைவேந்தர் தேடுதல் குழு’ (Vc Search Committee) அமைக்கப்படும். ஆட்சிக்குழுவிலிருந்து ஒரு பிரதிநிதி, பேரவைக் குழுவிலிருந்து ஒரு பிரதிநிதி, அரசின் சார்பில் ஒரு பிரதிநிதி அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு தேடுதல் குழு தொடர்பாக அரசாணை வெளியிடும். சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு மட்டும் கூடுதலாக ஆளுநர் பிரதிநிதி என்று தேடுதல் குழுவில் 4 பேர் இருப்பார்கள்.

தேடுதல் குழுவிற்கு அரசு பிரதிநிதி தலைமை தாங்குவார். இந்தத் தேடல் குழு துணைவேந்தருக்குத் தகுதி படைத்த நபர்களைத் தேடும். பலருடைய ஆளுமையை ஆராய்ந்த தேடுதல் குழு 3 பேர் அடங்கிய பட்டியலை இறுதி செய்யும்.
இறுதி செய்யப்பட்ட பட்டியல் மாநில அரசின் பார்வைக்குச் செல்லும். பின்னர்த் துணைவேந்தரைத் தேர்வு செய்யப் பட்டியலை ஆளுநருக்குக் கோப்பு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் மாநில அரசின் கருத்துரைப்படியே துணைவேந்தரைத் தேர்வு செய்வார். பின்னர்த் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டவருக்குப் பணி ஆணையை வழங்குவார். இதுதான் 2017ஆம் ஆண்டுக்கு முன்புவரை நடைபெற்ற வந்த நடைமுறை.

எடப்பாடியால் நிகழ்ந்த மாற்றம்
2017 எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், பன்வாரிலால் புரோகித் ஆளுநராக வந்தவுடன் துணைவேந்தர் நியமனங்களில் பெரும் மாற்றங்கள் நடைபெற்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தேடுதல் குழுவில் ஆட்சிக்குழு பிரதிநிதி, பேரவை பிரதிநிதி, அரசு பிரதிநிதி இவர்கள் அனைவரும் ஒரு நீதிபதியின் தலைமையில் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆளுநர் தேடுதல் குழுக் கூட்டத்தை நடத்த ஒரு ஒருங்கிணைப்பாளரையும் நியமனம் செய்வார்.
நாளிதழ்களில் துணைவேந்தர் தேடுதல் குழு ஒருங்கிணைப்பாளர் பெயரில் அறிவிப்பு வெளியிடப்படும். அதில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று அதில் இருக்கும். 100க்கும் மேற்பட்டோர் இந்தியா முழுமையும் விண்ணப்பம் செய்வார்கள்.
அதில் 6 பேரைத் தேர்வு செய்வார்கள். அவர்களை ஆளுநர் நேர்காணல் செய்வார். பின்னர் 3 பேர் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்படும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் வேந்தர் என்ற முறையில் நியமனம் செய்வார்.

இந்த நியமனங்களில் மாநில அரசின் ஆலோசனையைப் பெறுவது என்ற நடைமுறை புரோகித் காலத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டது மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்து துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்

வெண்சாமரம் வீசிய எடப்பாடியார்
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநருக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு வெண்சமாரம் வீசிக் கொண்டிருந்தார். ஆளுநர் ‘வேந்தர்’ என்ற முறையில் பல்கலைக்கழகங்களில் தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று ஆட்டம் போடத் தொடங்கியதன் விளைவுதான் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் புதிய நடைமுறை” என்று விரிவாக எடுத்துரைத்தார்.

குறைக்கப்பட்ட கவர்னரின் அதிகாரம்

ஊட்டியில் ஆளுநர் துணைவேந்தர் மாநாட் டைத் தொடங்கி நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் அடங்கிய மூவர் அடங்கிய பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் துணைவேந்தராகத் தேர்ந்தெடுப்பார்’ என்று ஆளுநர் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் அதிகாரங்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டமுன்வடிவு குறைத்துள்ளது.
இந்தச் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப் பட்டது. ஆளும்கட்சி கூட்டணிக் கட்சிகளோடு, பாட்டாளி மக்கள் கட்சியும் சட்டமுன்வடிவை ஆதரித்தது. பாஜக சட்டமுன்வடிவை அறிமுக நிலையிலேயே எதிர்த்து வெளிநடப்பு செய்தது. அதிமுக வேறொரு காரணத்தைக் கூறி அதே நேரத்தில் வெளிநடப்பு செய்தது.

ஓபிஎஸ் சொன்னது
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற அதிமுக துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ‘துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் ஆளுநரிடம்தான் இருக்கவேண்டும் அரசிடம் இருக்கக்கூடாது’ என்று தெளிவாகக் கூறினார்.
கடந்த 1949ம் ஆண்டு குஜராத் பல்கலைசட்டம், 1991ம் ஆண்டு தெலுங்கானா பல்கலைகள் சட்டம் ஆகியவை, பல்கலை துணைவேந்தரை நியமிக்க, தொடர்புடைய மாநில அரசுக்கு அதிகாரம் தந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு கர்நாடக மாநிலப் பல்கலை சட்டப்படி, துணைவேந்தர், மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநிலப் பல்கலை சட்டங்களுக்கு ஏற்ப, தமிழக அரசு மாநிலப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்தால்… முன்னாள் நீதிபதி கருத்து
மத்திய – மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய, 2007ல் நியமிக்கப்பட்ட, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம், ‘அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணைவேந்தர் நியமன அதிகாரத்தை, கவர்னருக்கு அளிக்கக் கூடாது’ என்று பரிந்துரைத்துள்ளது.

‘துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம், கவர்னர்களிடம் இருந்தால், அது சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகும். கவர்னரிடம் இதுபோன்ற அதிகாரத்தைக் கொடுப்பது, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே, அதிகார மோதலுக்கு வித்திடும்’ என்றும், அந்த ஆணையம் சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தப் பரிந்துரை மீது மத்திய அரசு சார்பில், மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட, 19 மாநிலங்கள், ஆணைய அறிக்கையை ஏற்கலாம் எனத் தெரிவித்தன. இந்த அரசு அமைந்ததும், பூஞ்சி ஆணையப் பரிந்துரைகள் குறித்து, மீண்டும் மாநில அரசின் கருத்தைக் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னருக்கு அளிக்கக் கூடாது என்றே, அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூஞ்சி ஆணையப் பரிந்துரையை ஏற்கலாம் என, 2017இல், அ.தி.மு.க., ஆட்சியிலும் கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அ.தி.மு.க.வுக்கு இதை ஆதரிப்பதில் நெருடல் இருக்க வாய்ப்பே கிடையாது” என்று பேசினார். ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பார். துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்யும் என்று ஆளுநருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவாரா? என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இது குறித்து மூத்த கல்வியாளர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, “பல்கலைக்கழக நடைமுறைகள் குறித்த சட்டம் இயற்றுதல் மாநில அரசின் வரம்பிற்குள்தான் உள்ளது. அதனால் ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது.

அதிகாரம் குறைப்பு கவர்னரை சமாளித்த எடப்பாடி
ஆளுநர் அதிகாரம் குறைக்கப்பட்ட சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் வழங்கமாட்டார் என்பது உறுதி. மருத்துவ உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டிற்கு வகைசெய்யும் சட்டமுன்வடிவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி ஆளுநர் புரோகித்துக்கு அனுப்பி வைத்தார். புரோகித் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தினார். உடனே எடப்பாடி அரசாணை ஒன்றைப் பிறப்பித்து மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட் டை வழங்கினார். அடுத்தநாள் ஆளுநர் சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் தந்தார் என்ற அண்மைக்கால வரலாறு உள்ளது.

இதைப் பின்பற்றி, ஆளுநர் சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் தர மறுத்தால், காலம் தாழ்த்தினால், முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று அரசாணை பிறப்பித்துத் துணைவேந்தர்களை நியமனம் செய்வாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்று கூறினார். ஆளுநர் & முதல்வர் அதிகாரப் போரில் உயர்அதிகாரம் படைத்த மக்களாட்சியின் மாண்புகள் வெற்றிபெறவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

-ஆதவன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.