அங்குசம் பார்வையில் ’ஃபளாக்’
இந்திய தேசப்பற்றை ‘டன்’ கணக்கில் வைத்துக் கொண்டு, கிலோ கணக்கில் நமக்கு சப்ளை செய்யும் சங்கிகளின் அப்பட்டமான காவிச்சிந்தனைப் படம் இது. இதைப் பத்தி கடைசியில் பார்ப்பதற்கு முன்னால, கதை என்னன்னு சொல்லிருவோம்.
அதாவது இங்கே ஐந்தாவது படிக்கும் சிறுவன் தீஹானின் பெற்றோர் சாலைவிபத்தில் திடீரென இறந்துவிட, பெங்களூருவில் வசிக்கும் அவனது தாத்தா மிக்கி மஹிஜா, அவனை அங்கே அழைத்துப் போய் வளர்க்கிறார். ஒரு நாள் ஹூப்ளி அருகே தான் வேலை பார்க்கும் தேசியக் கொடி தயாரிக்கும் காதி பவனுக்கு அழைத்துப் போய், இங்கிருந்து தான் இந்தியா முழுவதும் தேசியக் கொடி சப்ளை ஆகிறது. என்னைக்காவது ஒரு நாள் டெல்லியில் உள்ள ’இந்தியா கேட்’-ல் இந்த மூவர்ணக் கொடியை ஏற்றுவதைப் பார்க்க வேண்டும் என்பது தான் தனது லட்சியம் என்கிறார். ஆனால் அவருக்கோ பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிவிடுகிறார். தாத்தாவின் கனவையும் லட்சியத்தையும் நிறைவேற்ற இந்தியா கேட் நோக்கி பயணமாகிறான் சிறுவன் தீஹான். தேசப்பற்று விதிமுறைகளின் படி அங்கே தேசியக் கொடி ஏற்றப்படுவதை அவன் பார்த்தே ஆக வேண்டும். அதான் க்ளைமாக்ஸ்.
பெங்களூரிலிருந்து கிளம்பும் தீஹான் பாலக்காடு, மும்பை, செகந்திராபாத், குஜராத், இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் என பயணித்து டெல்லி இந்தியா கேட் முன்பு நிற்கிறான். இடையிடையே முஸ்லீம் தீவிரவாதிகள், இந்திய குடியரசு தினத்தன்று டெல்லியில் குண்டு வைக்கப் போவதாக கிடைத்த தகவலால் பதட்டமாகிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள். உள்துறை அமைச்சரிடம் [அமித்ஜி கெட்டப்] ஆலோசனை நடத்துகிறார்கள். “நம்ம மக்கள் நம் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும்” என்கிறார் உள்துறை அமைச்சர். [ புல்லரிக்குதுப்பா]
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து நசீம் என்ற தீவிரவாதி இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்ட பகீர் தகவல் கிடைக்க, மேலும் கலவரமாகிறது உளவுத்துறை. இப்ப தான் சிறுவன் தீஹானைத் தூக்கிவந்து விசாரிக்கிறார்கள். இப்படியே கதை கதையாகச் சொல்கிறார்கள்.
சிறுவன் தீஹானின் எதார்த்தமான நடிப்பு பாராட்டுக்குரியது. மும்பையில் கேடிகளிடம் அவன் சிக்கும் போது, அங்கே சித்ரவதை செய்யப்படும் பெங்காலிப் பெண் பப்புஷாவை தீஹான் காப்பாற்ற, அவனுடனேயே சில சீன்களில் பயணித்து திடீரென காணாமல் போகிறாள் பப்புஷா. தென்னிந்திய சினிமா டைரக்டர்கள், பப்புஷாவை இனிமேல் வலைவீசித் தேடுவார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் தீஹானின் பெற்றோர், குமரிக்கடலில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவனைப் பற்றிச் சொல்லிவிட்டு, பக்கத்திலேயே இருக்கும் விவேகானந்தரைப் பற்றியும் போதிக்கிறார்கள். இன்னொருவர், ஆயர்குல கண்ணனின் புல்லாங்குழலைக் கொடுத்து இது எப்போதும் உன்னைக் காப்பாற்றும் என்கிறார். சிறுவன் கடந்து போகும் மாநிலங்களில் தவறாமல் இந்துக் கோவில்களைக் காட்டுகிறார்கள், சுவரோவியத்தில் சிவபெருமான், குஜராத்தில் பிரம்மாண்ட வல்லபாய் பட்டேல் சிலைன்னு ஒரே காவிமயம்தான். போனாப் போகுதுன்னு ஒரு சீனில் தாஜ்மகாலைக் காட்டுகிறார்கள்.
க்ளைமாக்ஸில் தேசபக்திப் பாடலை ஒலிக்கவிட்டு, கைகளில் தேசியக் கொடியைப் பிடித்து உற்சாகமாக மக்கள் அசைப்பதெல்லாம் இந்துக் கோவில்களின் பின்னணியில் தான். கடைசியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் முடிகிறது தேசபக்தி. அசந்து மறந்து மசூதிப் பக்கமோ, சர்ச் பக்கமோ கேமராவை திருப்பவேயில்லை ஒளிப்பதிவாளரும் டைரக்டருமான எஸ்.பி.பொன் சங்கர். அந்தளவுக்கு உஷாராக இருந்திருக்கிறார்கள்.
“இந்திய மாநிலங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது முக்கியமில்லை, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் தெரிந்து கொள்வது தான் முக்கியம்” க்ளைமாக்ஸில் தீஹானைப் பேச வைத்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள் சங்கிகள்.
செம வளமான ஃபைனான்ஸ் சங்கிகளின் சப்போர்ட்டுடன், சங்கிளால், சங்கிகளுக்காக எடுக்கப்பட்ட தேசபக்தி பிராண்ட் சினிமா தான் இந்த ஃப்ளாக். தேசபக்திப் படம், அதிலும் நமது மூவர்ணக் கொடியின் புகழ் பேசும் படம், இதுக்கு மார்க் போட்டால் நல்லாவா இருக்கும்?
“பாரத் மாதாகீ ஜே”….
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.